படித்ததில் பிடித்தது -4 மறைந்த காங்கிரஸ் பிரதமருக்கு அவமரியாதை செய்யும் காங்கிரஸ்

பதிவு செய்த நாள் : 04 மே 2020

காங்கிரஸ் கட்சியின் பிரதமரோ, முன்னாள் பிரதமரோ இறந்தால் அவர் உடல் முதலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்துக்குத்தான் கொண்டு செல்லப்படும். ஆனால் இந்த  முன்னாள் பிரதமர் இறந்த போது அவர் உடல் அங்கே வரக்கூடாது என்று காங்கிரஸ் அலுவலகமே இழுத்துப் பூட்டப்பட்டது நினைவிருக்கிறதா ?

1991 ------முதல் 1996 வரை  பெரும்பான்மை பலம் இல்லாமல் ஐந்து வருடம் ஆட்சி செய்த நரசிம்மராவின் கதை தான் இது.

புத்தகத்தின் தலைப்பு நரசிம்மராவ்- இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி.

புதுதில்லி. 23 டிசம்பர் 2004. மதியம் 2.30 மணி. 9, மோதிலால் நேரு மார்க்.

வெள்ளை வேட்டியும் தங்க நிற குர்தாவும் அணிவிக்கப்பட்டிருந்தது அந்த சடலத்துக்கு! இந்தியாவின் பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவின் உடல் அது. காலை 11 மணியளவில் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானகழகத்தில் உயிர் நீத்திருந்தார். அவர் உடலைப் பக்குவப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைக்க டாக்டர்களுக்கு இரண்டு மணி நேரம் ஆனது.

 உடல் வீட்டுக்கு வந்தது.  அதற்குப் பின்னர் அரங்கேறத் தொடங்கியது அரசியல்!

உள்துறை அமைச்சராக இருந்த ஷிவ்ராஜ் பாட்டில், ராவின் இளைய மகனான பிரபாகர் ராவிடம் பேசினார்.` இறுதிச் சடங்கு ஹைதராபாத்தில் நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

ராவ் குடும்பத்தாருக்கு டெல்லியில் நடத்தவே விருப்பம்.. அது மட்டுமல்ல, ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக ராவ் இருந்தது என்னவோ முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய விஷயம். பின்னர் மத்திய காபினெட் அமைச்சராகவும், பல்வேறு பொறுப்புக்களை வகித்துவிட்டு, இறுதியாக ஐந்தாண்டு காலம் இந்தியாவின் பிரதமராகவும் இருந்ததெல்லாமே டில்லியில்தான்.

இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு ஷிவ்ராஜ் பாட்டில் கடுகடுத்த குரலில்,` அதெல்லாம் சரி, ஆனால், தில்லியின் நடத்தினால் இறுதிச் சடங்குக்கு யாரும் வரமாட்டார்கள் ‘ என்றார். சொல்வது யார்? காங்கிரஸ் ஆட்சியின் உள்துறை அமைச்சர். இறந்தது யார்? ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் காங்கிரஸ் பிரதமராக இருந்தவர்.

அடுத்து குலாம்நபி ஆசாத் வந்தார். பாட்டில் சொன்னதையே அவரும் சொன்னார்.

ஒரு மணி நேரம் கழித்து,பிரபாகர் ராவுக்கு ஒரு போன் வந்தது. பேசியது அன்றைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி.  ஒரே கட்சி என்றாலும், நரசிம்மராவின் நண்பர் அல்ல. ` மாலையில் டெல்லி வந்துவிடுவேன். இறுதிச் சடங்கை ஹைதராபாத்தில் பெரிய அளவில் செய்து விடலாம். நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்றார்.

 மாலை 6.30 மணிக்கு சோனியா காந்தி, கூடவே பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. மலர் வளையம் வைத்த பிறகு மன்மோகன் சிங் பிரபாகர் ராவிடம் கேட்டார்,` என்ன செய்யப் போகிறீர்கள்?’  அதுவரையில் நடந்ததைச் சொன்னார். ` ஆனால் தில்லிதான் அவர்க்கு கர்ம பூமி. நீங்கள்தான் உங்கள் அமைச்சர்களிடம் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும்.’ என்றார். மன்மோகன் சிங் மெளனமாக தலையசைக்க பக்கத்திலிருந்த சோனியா எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை.

 பத்திரிகையாளர் சஞ்சய் பாரு வந்தார். ராவுக்கு நெருங்கிய பத்திரிகையாள நண்பர். சஞ்சய்யை நெருங்கி வந்தார், சோனியாவின் அரசியல் உதவியாளர் அகமது படேல். அவரது தோள் மீது கைபோட்டபடி,` உங்களுக்கு ராவ் குடும்பம் நெருக்கம்தானே. உடலை ஹைதராபாத் எடுத்துச் சென்றாக வேண்டும். அதற்கு நீங்கள்தான் அவர்களிடம் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்’ என்றார்.

அடுத்து ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி வந்தார். ` இது நம்முடைய ஆட்சி. கவலை வேண்டாம். நாம் ஹைதராபாத் போய்விடலாம். ராவ் நினைவாக ஒரு பெரிய நினைவு மண்டபமும் கட்டிவிடலாம் ‘ என்றார்.  உடலை ஹைதராபாத் கொண்டு செல்வதிலேயே எல்லோரும் குறியாக இருந்தார்கள்.

 தில்லியில் நரசிம்ம ராவுக்கு ஒரு நினைவு மண்டபம் கட்டவேண்டும் என்பது குடும்பத்தாரின் கோரிக்கை.   வேறு வழியின்றி ஒருவரை சந்தித்து உதவி கேட்க முடிவு செய்தார்கள். காரணம் ராவின் அமைச்சரவையிலும், இறுதிக்காலம்வரை ராவுக்கு உறுதுணையாக இருந்தவர் அவர்.

 அங்கே போனார்கள். அது ரேஸ்கோர்ஸ் சாலை மன்மோகன் சிங் இல்லம் வெள்ளை நிற குர்தா பைஜாமா இரவு உடையில் இருந்தார். உடன்  வந்திருந்த ஷிவ்ராஜ் பாட்டீல், குடும்பத்தினரின் கோரிக்கையை பிரதமரிடம் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்ட பிரதமர் ` நோ ப்ராப்ளம், செய்து விடலாம்’ என்றார்.

 ` அன்றைய நிலைமையை எங்களால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. ராவின் இறுதிச் சடங்கு தில்லியில் நடைபெறக்கூடாது. அவர் நினைவாக தில்லியில் எதுவும் இருக்கக் கூடாது என்று சோனியாஜி நினைத்தார்.  ஒரு தேசியத் தலைவராக ராவ் பார்க்கப்படுவதை சோனியா ஏனோ விரும்பவில்லை. எங்களால் நிலைமையை சமாளிக்க முடியவில்லை. வேறு வழியின்றி ஹைதராபாத் எடுத்துச் செல்வதற்கு ஒப்புக்கொண்டோம். என்கிறார் பிரபாகர் ராவ்.

நரசிம்ம ராவ் இறந்து, 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் கட்சியில் தொடர்ந்து அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. 2004 முதல் 2014 வரை ஆந்திராவிலும், மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சியே தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்திருக்கிறது. ஆனால் ராவுக்காக எந்தவொரு நினைவிடமும் கட்டப்படவில்லை. அவரது பிறந்த நாளைக் கூட அதிகாரபூர்வமாக கொண்டாடுவதில்லை.

 நரசிம்மராவை, சோனியாவுக்கு பிடிக்காமல் போனதற்கு ஒரு அடிப்படைக் காரணமுண்டு. பிரதமராகிவிட்டிருந்த நிலையில் சோனியாவுக்கு தான் கட்டுபடத் தேவையில்லை என்பதை புரிந்து கொண்டிருந்தார். சோனியாவுக்கு அது பிடிக்கவில்லை’ என்கிறார் நட்வர்சிங்,

  பரத்பூரின் உயர்குடி வகுப்பைச் சேர்ந்த நட்வர்சிங், பாட்டியாலா மகாராஜாவின் மகளை மணந்தவர். காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு முன்பாக தூதராகப் பணியாற்றியவர். ராவுக்கு எதிராகச் செயல்பட்டவர். பின்னாளில் சோனியாவுக்கு நெருக்கமாக இருந்தவர். ராவைப் போலவே நட்வர் சிங்கும் சோனியாவால் கைவிடப்பட்டு, கட்சிக்காரர்களால் ஒதுக்கிவைக்கப்பட்டு, அரசியலில் இருந்தே காணாமல் போனார்.

 நுட்பமான ஒரங்கட்டல் மட்டுமல்லாமல் நரசிம்ம ராவின் சாதனைகளை வெளிப்படையா கிழித்தெறியும் வேலைகளும் நடந்தேறின. தாராளமயமாக்கலின் காரணகர்த்தவாக ராஜீவ் காந்தியையும் அதைச் செய்து முடித்தவராக மன்மோகன் சிங்கையும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறது.

 டிசம்பர் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ராவே முக்கியமான காரணம் என்கிற விமர்சனம் நீண்ட நாட்களக இருந்து வருகிறது.  ` 96 சதவீத காங்கிரஸ் கட்சியினர் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ராவின் திட்டமிட்ட சதி என்றே நினைக்கிறார்கள்.’ என்கிறார் நரசிம்மரவின் ஆதரவாளரான ஜெய்ராம் ரமேஷ்.

 எங்களது குடும்பம் ஆட்சியில் இருந்திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது ‘ என்று ராகுல் காந்தி வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மசூதி இடிப்புக்கு அந்தக் கட்சியே தன்னை விமர்சித்துக்கொண்டதால் மற்ற கட்சிகள் வேறு எதுவும் பேச முன்வரவில்லை.  

 ராவின் ஐந்தாண்டு கால ஆட்சி இந்தியாவை வெகுவாக மாற்றியமைத்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1991ல் அவர் பதவியேற்கும்போது, இந்தியப் பொருளாதாரம் முடங்கும் நிலையில் இருந்தது. 1996 ஆண்டுக்குள் இந்தியா 7.5 சதவீத வளர்ச்சியை எட்டியிருந்தது.  செயல் திறன் குறைந்த, போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத ` மக்கள் நல’ அரசை நிர்வகிக்கும் பொறுப்பு ராவிடம் வந்து சேர்ந்தது. உணவு பாதுகாப்புத் திட்டம், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்று இன்று அமலில் இருக்கும் பல திட்டங்கள் ராவின் ஆட்சியில்தான் ஆரம்பிக்கப்பட்டன.

 அவர் ஆட்சிக்கு வந்த காலத்தில் சர்வதேசக் கூட்டாளியான சோவியத் யூனியன் சிதைய ஆரம்பித்திருந்தது. அவர் பதவியை விட்டு கீழிறங்கும்போது, அமெரிக்கா, இஸ்ரே. சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுடனான நல்லுறவில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தது.

1991 வரை இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள், ராஜீவ் காந்தியை படுகொலை செய்திருந்தார்கள். அமைதியை நிலைநாட்ட முடியாத காரணத்தால் காஷ்மிரிலும் பஞ்சாபிலும் பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. வடகிழக்கில் நடந்த கலகங்கள் தீருவதாக இல்லை. பதவியிலிருந்து ராவ் விலகும்போது, பஞ்சாப் அஸ்ஸாம் பகுதிகளில் அமைதி திரும்பி விட்டிருந்தது. காஷ்மீர் அமைதிப்பாதையில் திரும்பிக்கொண்டிருந்தது. மத்திய அரசின் செயல்பாட்டில் மட்டுமல்லாமல் கட்சியிலும் ஏராளமான மாற்றங்களைக் கொண்டு வந்திருந்தார். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நேரு குடும்பத்தைச் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியை சுயசார்பு உடையதாக மாற்றி அமைத்தார்.      

1991ம் வருடம் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தல். மகாராஷ்டிராவில் பிரச்சாரத்தில் இருந்தார் ராவ்.  நாக்பூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு தன் நண்பர் என்.கே. பி. சால்வே வீட்டில் அப்போதுதான் ராவ் தூங்க ஆரம்பித்திருந்தார். அப்போதுதான் ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இரவு முழுவது ராவ் தூங்கவில்லை.  அன்று அதிகாலை நேரத்தில் கோபாலகிருஷ்ண காந்தியின் தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது நாக்பூர் விமானநிலையத்தில் ராவ் இருந்தார். அங்கிருந்துதான் பேசினார். மகாத்மா காந்தி, மற்றும் ராஜாஜியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி, அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர். வெங்கட்ராமனிடம் இணைச் செயலாளராக இருந்தார்.  ` தில்லிக்கு வருகிறேன். ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்குங்கள்’ என்றார்.

 அங்கே சென்னையில்  சிதறிக்கிடந்த ராஜீவின் உடலை கஷ்டப்பட்டு சேகரித்து, முடிந்த வரையில் உடம்புபோல் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் ராஜீவின் இடத்தை நிரப்புவதற்கான ஆட்டமும் தொடங்கியது.

 ராஜீவின் உடல் 10 ஜன்பத் சாலைக்கு கொண்டுவரப்பட்டது.  மக்கள்  கூட்டம் கூட்டமாக அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள். பிரணாப் முகர்ஜி ராவை அழைத்தார், ` காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும், உட்கட்சி மோதல்கள் மற்றும் வதந்திகளை தவிர்க்க இன்றே முடிவெடுப்பது நல்லது என்றார்

 ராவ் தன் ஆசைகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை இது போன்ற வேலைகளை செய்வதில் கில்லாடி பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி நெருக்கடிகளில் இருந்தபோது இது போன்று பல முயற்சிகள் செய்து பார்த்திருக்கிறார். தன் உடல்நிலையைக் காரணம் காட்டி என்.டி திவாரியின் பெயரை சிபாரிசு செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார் ராவ்.

 பிரணாப் முகர்ஜி செய்த தவறைச் செய்துவிடாமல் கவனமாக இருக்க முடிவு செய்தார் ராவ்.   இந்திரா காந்தி மறைந்த நேரத்தில் வரிசையை மீறி தன்னை இந்திராவுக்கு மாற்றாக முன்னிலைப் படுத்திக்கொண்டார்.  ஆனால், பரம்பரை உரிமையை ஒரு சாமானியர் ஒருவர் கேட்பது எவ்வளவு தவறு என்பது அவருக்குப் புரிந்திருக்கவில்லை. வரிசையில் பின்னுக்குத் தள்ளப்பட்டார். பிரணாபுக்கு இப்போதுதான் காங்கிரஸ் உள்வட்டாரத்திற்குள் வரவே அனுமதி கிடைத்திருக்கிறது.  இப்போது மீண்டும் வாரிசு உரிமைக் குரல்கள் கேட்கத் தொடங்கியிருந்தன. காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தியே வரவேண்டும் என்று கோரிக்கைகளும், கோஷங்களும் தில்லித் தெருக்களில் கேட்க ஆரம்பித்துவிட்டன. தான் ஒரங்கட்டப்படுவதை ராவ் உணர்ந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. சோனியாவின் பெயரை அர்ஜுன்சிங் முன்மொழிந்தார். சோனியா வருவதை ராவும், சரத்பவாரும் எதிர்த்தார்கள். ராஜீவ் விசுவாசியான சீதாராம் கேசரி சோனியாவுக்கு ஆதரவாகப் பேசினார்.  அன்று இரவு தூங்கப் போகுமுன் ராவ் தன் டைரியி` குடும்ப அரசியல் என்பது அருவருப்பானதாகவும்,, ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருப்பதோடு, தேர்தலில் அதனால் வாக்குகளைப் பெற்றுத் தரமுடியுமா ?’ என்று எழுதினார்.

பல்வேறு அரசியல் கணக்குள் போடப்பட்டதற்குப் பின் வேறு வழியில்லாமல் மே 29 1991ல்  காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடிவரையவில்லை. இரண்டு கட்ட தேர்தல் பாக்கியிருந்தது . ஜீன் 15 இறுதி கட்ட தேர்தல் முடிவடைந்தது.  அரசியல் காட்சிகள் விறுவிறுப்பாக அரங்கேறின.  காங்கிரஸின் வெற்றி அனுதாப அலையினால் உறுதியாகியிருந்தது. ` கட்சித் தலைவர் வேறு. பிரதமர் வேறு’ என்று  சரத் பவார் ஒரு மாதத்திற்கு முன் பேசியிருந்தார்.

பவாரின் படை டெல்லியை முற்றுகையிட்டது.  தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் மூலம் வாக்கெடுப்பில் தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சரத்பவார். 

இந்தப் போட்டிகள் எல்லாம் பிசுபிசுத்தன.           --

 நரசிம்மராவ் பிரதமராகி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தன. மும்பையின் தெற்குப் பகுதியிலிருந்த கிடங்கிலிருந்து வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் கிளம்பின. ராணுவ மரியாதை, பாதுகாப்புடன் அந்த வாகனங்கள் வெளியேறின.  அந்த வாகனங்களில் இந்தியாவின் கெளரவம், பத்திரமாக வைக்கப்பட்டிருந்தது.  அத்தனையும் தங்கக் கட்டிகள்  21 டன் தூய தங்கம்.  மும்பை சாகர் விமான நிலையத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் ஒரு கார்க்கோ ஏர்லைன்ஸ் விமானம் காத்திருந்தது. ` தங்கத்தை ஏற்றிக்கொண்ட விமானம், மேற்கு திசையை நோக்கி பறக்க ஆரம்பித்தது. விமானத்தில் ஏற்றி செல்லப்பட்ட மொத்த தங்கக் கட்டிகளும், லண்டனில் இருந்த பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் கிட்டங்கியில் அடகு வைக்கப்பட்டன. கூடவே, இந்தியாவின் கெளரவமும்!

 தங்கத்துக்கு எதிராக இந்திய அரசுக்கு டாலர்கள் கிடைத்தன. டாலர்களைக் கொடுத்து, நிலுவையில் இருந்த கடன்களைத் திருப்பி அடைக்க முடிந்தது.  ஒட்டுமொத்த விஷயமும் வெளியே வந்தபோது, இந்திய மக்கள் அவமானகரமாக உணர்ந்தார்கள். இதற்கு காரணமுண்டு.  தங்கம் என்பது இந்தியர்களின் உணர்வோடு சம்மந்தப்பட்ட விஷயம். கடனை அடைப்பதற்காகக் குடும்ப நகைகளை அடகு வைக்க வேண்டிய அவலநிலை. மக்களைக் கவலைக்குள்ளாக்கியது.

 1991ல் பொருளாதார மந்தநிலை, இந்தியாவை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தது. அந்த சூழலில்தான் ராவ் பிரதமரானார். அரசின் கெடுபிடியால்  தனியார் தொழில் முனைவோர் நசுக்கப்பட்டிருந்தார்கள். உலக அரங்கில், பொருளாதார விஷயங்களில் இந்தியா முற்றிலும் தனிமைப்பட்டிருந்தது. குறைவான வளர்ச்சி,  ஏழ்மையின் கோரப்பிடி, சொற்ப எண்ணிக்கையில் நடுத்தர வர்க்கம், முற்றிலுமாகச் சிதைந்து போயிருந்த உள் கட்டமைப்புக்கள், நுகர்வுக்கு குறைவான தேர்வுகளே இருந்த நிலை எனப் பல பிரச்னைகளால் இந்தியா முடங்கிப் போயிருந்தது. உறுதியான நிலைப்பாடோ, புதிய பரீட்சார்த்தங்களுக்கோ வழியில்லாத நிலை. நிலையில்லாத அரசாங்கத்தாலும், நம்பிக்கையில்லா அதிகாரிகளாலும் அரசு எந்திரம் தள்ளாடியது. பொருளாதார மந்த நிலை, நமக்குப் புதிதல்ல;  1965----------67, 1973-----75, 1979---1981, என மூன்று முறை சந்தித்திருக்கிறோம். ஆனால் 1991 போன்ற மோசமான நிலையை நாம் அதுவரை சந்தித்ததேயில்லை.

ஜுன் 1991 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிடம் இருந்த அந்நியச் செலாவணி கையிருப்பு இரண்டு வாரங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும்படி இருந்தது. பொதுவாக மூன்று மாத இறக்குமதி தீர்வை செலுத்தும் வகையில் கையிருப்பு இருந்திருக்க வேண்டும். அதாவது குறைந்த பட்சம், அப்போதையை கையிருப்பை விட ஆறுமடங்கு அதிக அளவாவது இருந்திருக்க வேண்டும். பன்னாட்டு வர்த்த உறவுகளில் வல்லுனரான மன்மோகன் சிங்குக்கு, நம்மைச் சுற்றிப் படர்ந்திருந்த புதிய ஆபத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

 இந்தியாவின் டாலர் கையிருப்பு குறைந்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தன. 1990ல் நிகழ்ந்த வளைகுடா யுத்தம், எண்ணெய் விலையை உயர்த்திவிட்டது. நெருக்கடியால் எண்ணெயின் விலை திடீரென்று மூன்று மடங்காகிவிட்டது.

1991 மத்தியில் மறுபடியும் இன்னொரு நிதி நெருக்கடி. இம்முறை ஐ.எம்.எஃப் உதவியளிக்க மறுத்துவிட்டது.

 நெருக்கடியை ராவ் புரிந்து கொண்டார்.  அது பொருளாதார அறிவு அல்ல, அனுபவ அறிவு.

 இன்னும் மத்திய அரசின் நிதியமைச்சர் யார் என்பது முடிவாகவில்லை. பிரணாப் முகர்ஜி, ராவின் தேர்வுக்கு ஆதரவாக இருந்ததால் தனக்குத்தான் அந்த பதவி கிடைக்கும் என்று நினைத்திருந்தார். ஆனால் திரைமறைவில் காட்சிகள் மாறிக்கொண்டேயிருந்தன.  யாரும் எதிர்பாராத வகையில் மன்மோகன் சிங் இந்தியாவின் நிதியமைச்சரானார்.

 தாராளமயமாக்கல், லைசன்ஸ் ராஜ் ஒழிப்பு, அந்நிய நேரடி முதலீடு என்று பல பொருளாதார சீர்த்திருத்தங்கள். தகவல் தொழில் நுட்பம் வளர்ந்தது. அதுவரையில் தேசம் கண்டிராத, ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே பார்த்த பல அயல்நாட்டுக் கார்கள் இந்திய சாலைகளில் ஓடின. அந்தத் தயாரிப்பு நிறுவனங்கள் நாடெங்கிலும் தங்கள் தொழிற்சாலைகளை நிறுவத்தொடங்கின. ஐந்து லட்சம் மக்கள் கைபேசியை பயன்படுத்தினார்கள். தொடர்புகள் எளிதானது. போக்குவரத்திற்காக பல சாலைகள்.

இந்தியா மிளிர ஆரம்பித்தது நரசிம்மராவ் காலத்தில்தான். இதை பின்னர் வந்த பிரதமர் வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார். முக்கிய பொருளாதார விஷயங்களில் மன்மோகன் சிங்கை அழைத்து ஆலோசித்தார். எல்லாமே காங்கிரஸால் புறக்கணிப்படுகிற பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் அரசின், நேரு குடும்பத்தைச் சாராத கவர்ச்சிகரமான தலைவராக இல்லாத ஒரு அனுபவசாலி நிகழ்த்திய சாதனை.

இதை எல்லாம் திரையிடும் நிலை தொடர்கதையாக உள்ளது.

கட்டுரையாளர்: சுதாங்கன்


கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation