அரசியல் தலைவர்களின் ஈஸ்டர் திருநாள் வாழ்த்து செய்திகள்

பதிவு செய்த நாள் : 11 ஏப்ரல் 2020 11:08

சென்னை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை நாளை ஏப்ரல் 12ம் தேதி கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை அதிமுக, திமுக, பாமக, அமமுக தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதிமுகவின் ஈஸ்டர் பெருவிழா வாழ்த்துச் செய்தி

இறைமகன் இயேசுபெருமான் சிலுவைப்பாடுகளை ஏற்று, மானிடத்தை மீட்க மரணத்தை வென்று, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த ஒப்பற்ற விழாவாம் ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு எங்கள் இதயமார்ந்த உயிர்ப்பு ஞாயிறு நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா நச்சுக்கிருமியை எதிர்த்து ஓரணியில் நின்று போராடிக்கொண்டிருக்கும் நாம் “இருள் அகலும், ஒளி தோன்றி நம்மை மகிழ்ச்சியுடன் வாழவைக்கும்” என்னும் புதிய நம்பிக்கையை தருவதாக இந்த ஆண்டின் ஈஸ்டர் பெருவிழா அமைகிறது. சமூகத்தின் நன்மைக்காக விழித்திருந்தும், தனித்திருந்தும், வீட்டிலேயே இறைவழிபாடுகளை இந்த ஆண்டு மேற்கொண்டிருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

இறைவனின் கருணையும், இரக்கமும் நம் அனைவரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திடட்டும்.

இவ்வாறு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் இணைந்து ஈஸ்டர் திருநாள் செய்தியை வெளியிட்டுள்ளனர்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தி

கடும் சோதனைகளையும், காரிருளையும் வெற்றி கண்ட இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த நாளான “ஈஸ்டர் திருநாளை” மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணையின் அடையாளமாகவும், மனித சமுதாயம் போற்றும் மாசற்ற புனிதராகவும் திகழும் இயேசு பெருமானின் “ஈஸ்டர் திருநாள்” மனித நேயமிக்க கிறிஸ்தவப் பெருமக்கள் மகிழ்வுறும் இனிய நாள்!

கிறிஸ்தவ மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். நம் தாய்த் தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்த அயல்நாட்டுக் குருமார்களாகிய மாமேதைகள் வீரமாமுனிவர், கால்டுவெல், ஜி.யு.போப் ஆகியோருக்கு சீர்மிகு சென்னை மெரினா கடற்கரையில் சிலைகளை அமைத்து – அந்த அரும்பெரும் அறிஞர்களின் தமிழ்ப் பணிச் சிறப்பினை இளைய தலைமுறையினரின் இதயங்களில் ஏற்றி வைத்து அழகு பார்த்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

கிறிஸ்தவ சமுதாயத்தின் சமூக, கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்காக முன்னணித் திட்டங்களை நிறைவேற்றி -

 உலக மக்கள் மனதில் மனித நேயத்தின் அடையாளமாக இன்றும் விளங்கும் மறைந்த அன்னை தெரசா அவர்களுக்கு நூற்றாண்டு விழா எடுத்து - “அன்னை தெரசா மகளிர் வளாகம்” எனப் பெயர் சூட்டி - மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அர்ப்பணித்து மகிழ்ந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

“ஈஸ்டர் திருநாள்” கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டிய இந்த நாளில் நாம் எதிர்பாராத விதமாக “சுகாதாரப் பேரிடரை” சந்தித்து - சோதனைகளின் விளிம்பில் நிற்கிறோம். ஆனாலும், எத்தகைய துயரங்களையும் தாங்கும் இதயம் கொண்ட இயேசு பெருமானின் மனோதைரியத்துடன் - கிறிஸ்தவ சமுதாய மக்கள் அனைவரும் “சுய சுகாதார பாதுகாப்புடனும்” - மகிழ்ச்சியுடனும் “ஈஸ்டர் திருநாளை” கொண்டாடிட வேண்டும் என்று மீண்டும் வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுக்கும் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும்  எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.

 யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத இயேசுபிரான் தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டதைப் போன்று, உலகம் முழுவதும் ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் கொரோனா வைரஸ் என்ற தீமையால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இன்று வரை 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு   இருப்பதுடன், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். சிலுவையில் அறையப்பட்ட  இயேசு கிறிஸ்து அடுத்த 3 நாட்களில் உயிர்த்தெழுந்து வந்ததைப் போன்று உலக மக்களும் மருத்துவர்கள் உதவியால் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மீண்டு வருவார்கள் என்பது உறுதியாகும்.

தமிழகம் என்றால் வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்பட வேண்டும். தமிழக மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும். அதற்காக இயேசுபிரான் உயிர்த்தெழுந்த இந்த நாளில் அனைத்துத் தரப்பினரும் உறுதியேற்றுக் கொள்வோம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுக்கும் ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி:

கருணையே வடிவான  இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"உன் மீது, நீ அன்பு செலுத்துவது போல பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக" என்று மனித நேயத்தின் மாண்பினையும், அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்த இயேசு பிரானின் வார்த்தைகளைக் கடைபிடிப்போம். அவர் போதித்த தியாகத்தை, கருணையைச் சொல்லிலும் செயலிலும் வைப்போம். சமூக நன்மைக்காக தனிமனித இடைவெளியைப் பின்பற்றி விலகியிருந்தாலும், உள்ளங்களால் இணைந்திருப்போம்.

இந்த நன்னாளில் கிறித்துவ மக்கள் மட்டுமல்லாமல், எல்லோரும் நினைப்பதைப் போல ‘தற்போதைய துயரத்திலிருந்து  அனைவரும் மீண்டெழுந்து ஆரோக்கியத்தோடும், ஆனந்தத்தோடும் வாழ வேண்டும் என்கிற நம்பிக்கை மெய்யாகிட’ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்பு நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.