காலக் கணிதம் கண்ணதாசன் - 9

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2020

  மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களுக்கு பெரும்பாலும் வேதா தான் 1965 களில் இசையமைத்து வந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் மிகப் பிரபலமான இந்திப் பாடல்களின் உரிமைகளை வாங்கி அதை அப்படியே தமிழில் போடச் சொல்வார்கள்.

 வேதாவிற்கு இதில் பெரும் மனக்குறை உண்டு. தன்னுடைய தனித்துவத்திற்கு மாடர்ன் தியேட்டர்ஸ் மதிப்பு கொடுப்பதில்லை என்று கண்ணதாசனிடம் சொல்லி வருத்தப்படுவார். அப்போது கண்ணதாசன் சொல்வார் ` கவலையை விடு. இசைதானே அவங்களுடையது. வார்த்தைகளில் அவர்கள் பாடலை நாம் மிஞ்சிக்காட்டுவோம். அந்த வார்த்தைகளை கேட்பவர்கள் உன்னைத்தான் முதலில் பாராட்டுவார்கள்’ என்பார்.

 அதை கண்ணதாசன் நீருபித்தும் பல பாடல்களில் காட்டினார். ஆனால் அதில் உச்சகட்ட பாடல் ` வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் அமைந்தது.  அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக அமைந்திருந்தாலும் மக்கள் மனதில் இன்றும் ஆழமாக பதிந்த பாடல்  ஒராயிரம் பார்வையில், உன் பார்வையை  நான் அறிவேன்’ பாடல்தான்.

  உஸ்தாதன் கே உஸ்தாத் என்ற இந்தி படத்தைத்தான் ` வல்லவனுக்கு வல்லவன் ‘ என்று தமிழில் எடுத்தார்கள். இந்திப் படத்திற்கு இசையமைத்தவர் ரவி என்றழைப்பட்ட ரவிசங்கர் சர்மா. இந்தப் பாடலை இந்தியில்  எழதியவர் அசத் போபாலி. இவர் அத்தனை பிரபலான கவிஞரல்ல. ஆனாலும் இந்த பாட்டிற்கு பிறகு அவருக்கு பேர் வந்தது.

  காதலன் இறந்துவிட்டதாக நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கும் போது, அந்தக் காதலின் பாடுவதாக  அமைந்த பாடல் இது .

 தமிழில் பாடலை தொகையறாவோடு கண்ணதாசன் இப்படி பாடலைத் துவங்கியிருப்பார்.

` நூறு முறை பிறந்தாலும்,

 நூறு முறை இறந்தாலும்,

 உனைப் பிரிந்து வெகு தூரம் நான்

 ஒரு நாளும் போவதில்லை

 உலகத்தின் கண்களிலே

 உருவங்கள் மறைந்தாலும்

 ஒன்றான உள்ளங்கள்

ஒரு நாளும் மறைவதில்லை

 ஓராயிரம் பார்வையிலே

 உன் பார்வையை நான் அறிவேன்

 உன் காலடி ஒசையிலே

 உன் காதலை நான் அறிவேன்

 இந்த மானிடக் காதலெல்லாம்

ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம்

ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும்

 எந்த நாளிலும் கூட வரும்

 இப்படி எழுதியிருப்பார் கண்ணதாசன். இந்த தமிழ்ப் பாடல்களின் வரிகளை மொழி பெயர்த்து வாங்கி கொண்டார் இந்தி கவிஞர் அசத் போபாலி. பிறகு தன் போகிற விழாக்களிலெல்லாம் இந்த வரிகளை பாடிக்காட்டுவாராம். மக்கள் அமோகமாக கைதட்டினார்கள். பிறகு மக்களிடையே அவர் சொல்வார் ` இதை நான் எழுதவில்லை. தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த கவிஞர் கண்ணதாசன் எழுதியது  என்பாராம்.

 கண்ணதாசனின் வரிகள் அந்தப் படத்தையும், இந்த பாடலையும் சிரஞ்சீவியாக வைத்திருக்கிறது.

 ஏவிஎம் தயாரித்த படம்  குழந்தையும் தெய்வமும், அந்த கால கட்டத்தில் ஏவிஎம் செட்டியாருக்கும் கண்ணதாசனுக்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருந்தது.

அதனால் ஏவிஎம் படங்களுக்கு வாலி பாடல் எழுத ஆரம்பித்திருந்த நேரம் அது.

மெய்யப்பட்ட செட்டியாரிடம் ஒரு குணம் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை தொழிலில் காட்ட மாட்டார்.

 அதற்கு  சிறந்த உதாரணம் ஏவிஎம் தயாரித்த அன்னை படம். ஒரு வங்காள படத்தை தமிழில் எடுக்க முடிவு செய்தார் செட்டியார். ஆனால் அந்தக் கதைக்கு  பொருத்தமானவர் பானுமதிதான் என்பதில் உறுதியாக இருந்தார் செட்டியார். ஆனால் பானுமதிக்கும் ஏவிஎம்மிற்கும் அப்போது கருத்து வேற்றுமை. ` என் வாழ்நாளில் நான் ஏவிஎம் வளாகத்திற்குள் கால் வைக்க மாட்டேன்’ என்று பானுமதி சபதம் எடுத்திருந்த நேரம்.

 ஏவிஎம் புதல்வர்கள் அன்னை படத்திற்காக பானுமதியை அணுகினார்கள்.  வங்காளப் படத்தைப் பார்த்த பானுமதிக்கு அந்தக் கதையில் நடிக்க ஆசை. ஆனால் அவர் எடுத்திருந்த சபதம் அவரை தடுத்தது. ` நான் நடிக்கிறேன். ஆனால் படம் முடியும்வரை ஏவிஎம் செட்டியார் ஏவிஎம் ஸ்டுடியோவில் கால் வைக்க கூடாது ‘ பானுமதியின் இந்த நிபந்தனையை கேட்ட செட்டியார், தன் சொந்த ஸ்டுடியோவிற்குள் அன்னை படம் முடியும் வரை காலடி எடுத்து வைக்கவில்லை. அவருக்கு படத்தின் வெற்றிதான் முக்கியம். ஆனால் அன்னை படத்தின் நூறாவது நாள் விழா நியூ உட்லாண்ட்ஸ் ஒட்டலில் நடந்த போது மேடையில் பகிரங்கமாக செட்டியாரிடன் மன்னிப்பு கேட்டார் பானுமதி.

 இப்போது குழந்தையும் தெய்வமும் படத்தில் கருத்து வேற்றுமை இருந்தாலும் கண்ணதாசனை பாடல் எழுத  அழைக்கச் சொன்னார். அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் அற்புதமாக அமைந்தாலும் கண்ணதாசன் எழுதிய மூன்று பாடல்கள் தனித்து தெரிந்தது.

 ` பழமுதிர்ச் சோலையிலே- தோழி

 பார்த்தவன் வந்தானடி’

 ` கோழி ஒரு கூட்டிலே

 சேவல் ஒரு கூட்டிலே

 கோழிக் குஞ்சு

 ரெண்டும் இப்ப

 அன்பில்லாத காட்டிலே

 ` குழந்தையும் தெய்வமும்

 குணத்தால் ஒன்று

 ஆகிய மூன்று பாடல்கள் கண்ணதாசன் எழுதியது

                                            ( மீண்டும் சந்திப்போம்)