காலக் கணிதம் கண்ணதாசன் -8

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2020

 தேவர் பிலிம்ஸ் தயாரித்த காட்டு ராணி படம் பெரும் வெற்றி பெற்ற படமில்லை. ஆனால் அந்த நாட்களில் சாதாரண படங்களைக் கூட இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் அந்தப் படத்தின் பாடல்கள் படத்தை பிரபலப்படுத்திவிடும்

 அதே போல் தான் காட்டு ராணி படத்தில் வந்த இந்த பாடல். ` மிக இனிமையான இந்த பாடலை இலங்கை வானொலி வாரத்திற்கு ஐந்து முறையாவது ஒலிபரப்பு.

   ` மூங்கில் இலை மேலே

      தூங்கும் பனி நீரே

      தூங்கும் பனி நீரை

      வாங்கும் கதிரோனே

  இந்தப் பாடல் பழைய நாட்டுப்புறப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டது.

 இந்த நாடோடிப் பாட்டுக்கு ஒரு பின்னனி உண்டு.

 கம்பன் ஒரு நாள் வயல்புறமாக போய்க் கொண்டிருந்தான். அப்போது ஒரு உழவன் ஏற்றம் இறைத்துக்கொண்டிருந்தான். ஏற்றம் மேலும் கீழுமாக போய் வந்து நீரை இறைத்து கொண்டிக்கொண்டிருந்தது.

 அப்போது அந்த உழவன் ` மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ ` மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே ‘ என்று சொல்லிக் கொண்டே ஏற்றம் இறைத்துக்கொண்டிருந்தான்.

 கம்பனை இந்த வார்த்தைகள் ஈர்த்தது.`மூங்கில் இலை மீது இரவு பெய்த பனி தூங்கிக் கொண்டிருக்கிறதாம் ‘ கம்பன் அப்படியே நின்றான். அடுத்த வரியை அந்த உழவன் பாடுவான் என்று காத்திருந்தான் கம்பன்.

 ` ஆனா அந்த உழவனே இந்த முதல் வரியை பாட்டும் பாடி விட்டு தன்னுடைய வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டான.

 கம்பன் அடுத்த வரிகளை யோசித்தான். 10,000  பாடல்களைக் கொண்டு கம்பராமாயண காவியம் படைத்த கம்பனுக்கு அடுத்த வரிகள் தோன்றவில்லை. இரவு முழுவதும் அடுத்த வரிகளையே கம்பன் யோசித்துக்கொண்டிருந்தான்.

அவனுக்கு வார்த்தைகள் புலப்படவில்லை. அடுத்த நாளும் அந்த வயல் வழியாக போனார். அன்றும் அந்த உழவன் ஏற்றம் இறைக்க வந்திருந்தான். இப்போது அவன் அடுத்த வரிகளை பாடினான்

            ` தூங்கும் பனி நீரை

              வாங்கும் கதிரோனே’

 அதாவது மூங்கில் இலை மேலே இருக்கும் பனித்துளி காலையில் கதிரவனின் சூடு பட்டதும் கரைந்துவிடுமல்லவா, அதைத்தான் தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரவன் வாங்கிக் கொள்வதாக அந்த உழவன் பாடினான்.

 உண்மையில் கம்பன் கதையில் வருகிற ஒரு நாட்டுப்புற பாடல் இது.

 காட்டு ராணி படத்தில் காட்டில் அலைந்து திரியும் ஒரு பெண் இப்படி பாடுவதாக  வரிகளை அமைத்திருந்தார் கண்ணதாசன்.

 அந்த நாட்களில் இளம் உள்ளங்களையும், காதலர்களையும் கட்டிப் போட்ட பாடல் ஒன்று உண்டு. அந்தப் பாடல் இடம் பெற்ற படம்  பிரசாத் புரொடக்ஷன் வண்ணப்படமாக தயாரித்த ` இதயக் கமலம்’ படம்

 இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். முதல் முறையாக கே.ஆர். விஜயா இரு வேடங்கள் தாங்கி நடித்த படம் படத்தின் கதாநாயகன் ரவிசந்திரன். இந்த படத்தில் அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட்.

` மலர்கள் நனைந்தது பனியாலே

 என் மனதும் குளிர்ந்தது நிலவாலே’

 ` என்னதான் ரகசியமோ இதயத்திலே

 நினைத்தான் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

 ` தோள் கண்டேன் தோளே கண்டேன்

   தோளில் இரு கிளிகள் கண்டேன்.

 போன்ற பாடல்கள் இருந்தாலும், மக்களின் உள்ளங்களை வருடிச் சென்ற பாடல்

 இந்த பாடலை முழுவதுமாகச் சொல்லியாக வேண்டும். காரணம் இந்தப் பாடலின் வரிகள் அந்த காலகட்டத்தில் காதல் கடிதங்களாகவே பவனி வந்தது.

  வரிகளை கவனியுங்கள்

 உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

 உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

 நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல

 இங்கு நீயொரு பாதி நானொரு பாதி

 இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி

 காலங்கள் மாறும்  காட்சிகள் மாறும்

 காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல

   அதாவது காதலர்கள் இணை சேர்ந்துவிட்டால் அவர்கள் வேறுவேறு இல்லையாம். அவர்கள் ஜீவாத்மா பரமாத்மாவை இணைந்ததைப் போல ஆகிவிட்டார்களாம்

 இதில் கடைசி சரணம் மிகவும் அருமையானது.

 ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை

 ஒரு கோவில் இல்லாம தீபமுமில்லை

 நீ எந்தன் கோவில் – நான் அங்கு தீபம்

 தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல!

  எங்கள் வீட்டில் வந்து தங்கியிருந்த என் அம்மாவின் சகோதரி முறை பெண், இந்த பாட்டை கேட்கும்போதெல்லாம் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டிருப்பார். அப்படி ஈர்த்த பாடல் இது.

                                ( மீண்டும் சந்திப்போம்)