காலக் கணிதம் கண்ணதாசன் -7

பதிவு செய்த நாள் : 05 ஏப்ரல் 2020

1965ம் வருடம்  43 படங்கள் வந்தது. ஆனால் இந்த வருடம் பார்த்தால் கண்ணதாசன் பாடல் எழுதிய படங்கள் குறைவு.எம்.ஜி.ஆர்  படங்களின் ஆஸ்தான கவிஞர் ஆகிப்போனார் வாலி. அந்த வருடம் வந்த  ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் தவிர மற்ற எம்.ஜி.ஆர் படங்களான ஆசைமுகம், பணம் படைத்தவன், எங்கவீட்டுப் பிள்ளை, தாழம்பூ ஆகிய எம்.ஜி.ஆர் படங்களுக்கு வாலிதான் எல்லாப் பாடல்களையும் வாலி எழுதினார்.

 இந்த வருடம் வந்த சிவாஜி பிலிம்ஸ் சொந்தமாக தயாரித்த படம் சாந்தி. படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட். ஆனால் படத்தின் க்ளைமாக்ஸ் சரியாக இல்லாததால் படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தில் சிவாஜிக்கு ஒரு ஸோலா பாடல். வித்யாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக ட்யூன் போட ஒரு பதினைந்து நாட்கள் எடுத்துக்கொண்டார் விஸ்வநாதன். அந்த ட்யூனைக் கேட்ட கண்ணதாசன் திணறிப்போனார் கண்ணதாசன். அந்த ட்யூனுக்கு பாடல் எழுத கண்ணதாசன் பதினைந்து நாட்கள் எடுத்துக்கொண்டார்.  அந்தப் பாடல் தான்

யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு

 யாரோ சொல்ல யாரோ என்று

 யாரோ வந்த உறவு

 காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த உறவு.

 அந்த கடினமான ட்யூனுக்குள் படத்தின் பல்லவியையே கொண்டு வந்துவிட்டார் கண்ணதாசன்.

 இதே வருடம் இன்னொரு எம்.ஜி.ஆர் படம். அப்போது எம்.ஜி.ஆருக்கும் கண்ணதாசனுக்கும் கருத்து வேற்றுமை ஆரம்பமாகியிருந்த நேரம்.

 ஆனால் தேவர் மட்டும் தன்னுடைய படங்களுக்கு கண்ணதாசன் தான் பாடல் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

தேவர் பிலிம்ஸ் தயாரித்து வெளிவந்த எம்.ஜி.ஆர் படம் வேட்டைக்காரன்.

எம்.ஜி.ஆர் படங்களில் அவர் பாடும் பாடல்களில் ஒன்று அவருடைய இமேஜை உயர்த்துவதாக இருக்கும். அது கொள்கைப் பாடலாக இருக்கும்.

 எம்.ஜி.ஆருக்கு இந்தப் பாணியை அறிமுகப்படுத்தியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். பின்னர் அதே பாணியை எம்.ஜி.ஆருக்கு கொடுத்தவர் கண்ணதாசன். அதற்கு பின்னர் அந்த  பாணியில் தான் வாலி எம்.ஜி.ஆருக்கு கொள்கைப் பாடல்கள் எழுதினார்.

 வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருக்கான ஒரு சோலோ பாடல் என்பது ஒரு தன்னம்பிக்கைக்கான ஊட்டச் சத்து பாடலாக அமைந்தது.

 அந்தப் பாடல்தான்

 உன்னை அறிந்தால் நீ உன்னையறிந்தால்

 உலகத்தில் போராடலாம்

 உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

 தலை வணங்காமல் நீ வாழலாம்.

1965ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முக்கியமான ஆண்டு என்றே சொல்லலாம். இந்த வருடம் தான் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், ஜெயலலிதா, கே. பாலசந்தர் ஆகியோர் தமிழ்ப் படவுலகில் பிரவேசித்தார்கள்.

 ஜெயலலிதாவின் முதல் படம் வெண்ணிற ஆடை. இந்தப் படத்தை எழுதி இயக்கியவர் ஸ்ரீதர். விஸ்வநாதன் இசையமைத்த இந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே கண்ணதாசன் தான் எழுதினார்.

 பாடல்கள் அத்தனையும் சூப்பர் ஹிட்.  கண்ணதாசன் அப்போதே தீவிர கிருஷ்ண பக்தராகியிருந்தார். பல படங்களில் அவர் கண்ணனை வைத்து பாடல் எழுதினார். இந்த படத்தில் அவர் எழுதிய பாடல்தான்

கண்ணன் என்னும் மன்னன் பேரை

 சொல்ல சொல்ல

 கள்ளும் முள்ளும்  பூவாய்

 மாறும் மெல்ல மெல்ல.

 இந்த வருடம் வந்த மிக பிரும்மாண்டமான, மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படத்தில்தான் முதன்முதலாக ஜெயலலிதா எம்.ஜி.ஆரோடு ஜோடி சேர்ந்தார்.

 இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு மூன்று சோலோ பாடல்கள். அதில்

 ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல்

 வாழ்க்கையில்லை

 பாடலை வாலி எழுதினார்.

 அடுத்து

 ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ.

ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ

 பாடலை கண்ணதாசன் எழுதினார்.

 படத்தில் முக்கியமான பாடல் விடுதலை வேண்டி பாடும் பாடல் இந்த பாடலுக்கு பல கவிஞர்கள் எழுதினார்கள்.

 எம்.ஜி.ஆருக்கு திருப்தியில்லை.

 இறுதியில் கண்ணதாசன் அழைக்கப்பட்டார்.

 அவர் எழுதிய பாடல்

 அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்

 இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்

 பாடல்தான் எம்.ஜி.ஆருக்கு மிக முக்கியமான சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

 தேவர் பிலிம்ஸ் தயாரித்த படம் காட்டுராணி

இந்தப் படத்தில் அசோகன், கே.ஆர். விஜயா ஜோடியாக நடித்திருந்தர்கள்.

 இதில் மிக அருமையான பி.சுசீலாவின் சோலோ பாடல்

 முன்பெல்லாம் இலங்கை வானொலியில் இந்த பாடல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்

 இந்த படத்திற்கு பி.எஸ். திவாகர் என்பவர் இசையமைத்திருந்தார். அவர் இசையமைத்த ஒரே படம் இதுதான்.

 கண்ணதாசன் எழுதிய அந்த சுசீலா பாடலுக்கு ஒரு பின்னணி உண்டு.

                                ( மீண்டும் சந்திப்போம்)