திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாரா திருப்பதென்ன ?
பாணபட்டர் சிவனின் பெருமைகளைச் சொல்லி பாடுகிறார்.
சிவபெருமான் சபையோர் முன்பு வந்து சாட்சி சொன்னது, வைகை ஆற்றில் வெள்ளம் வந்தபோது ஒரு வயதான மூதாட்டிக்கு கூலியாளாக போய், வேலையை சரியாக செய்யாமல் மன்னன் கையால் பிரம்படி பட்ட கதையை எப்படி ஒரு கவிஞனால் இந்த நான்கு வரிகளில் அதுவும் கதைக்கு பொருத்தமான இடத்தில் ஒரு கவிஞனால் நுழைக்க முடிந்தது.
அந்த கால கட்டத்தில் டி.ஆர். மகாலிங்கம் குரலில் இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை பாடல் வரும்போது, அது என்ன மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ? பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட கதை என்னவென்று புரியாமல் பிறகு சில பதிப்பகங்களைத் தேடி சிவனின் திருவிளையாடற் புராணத்தைப் படித்தனர்.
இங்கே பாணபட்டர் வாயினால் திருவிளையாடற் புராணத்தை சொல்ல வைத்த கண்ணதாசன், அடுத்த வார்த்தை திருவிளையாட்டை அரங்கேற்றி காட்டுவார்.
இப்போடு மதுரையின் மானத்தை காப்பாற்ற சிவபெருமான் முடிவு செய்வார். அதனால் தானே விறகு வெட்டியாக வருவார். அந்த விறகு வெட்டிதான் ஹேமநாத பாகவதரை பாடி விரட்டப் போகிறான். அவன் ஹேமநாத பாகவதர் வீட்டு திண்ணையில் பாடுவதற்கு முன்னால் தான் ஒரு சாதாரண விறகு வெட்டிதான் என்பதை ஊர் மக்கள் நம்ப வேண்டுமே?
அப்படி ஒரு காட்சியை அருமையாக அமைத்திருப்பார் ஏ.பி. நாகராஜன். விறகு வெட்டி ஊருக்குள் விறகு விற்பதற்காக கூவிக் கொண்டே வருகிற இடத்தில் ஒரு பாட்டை பாமர பாணியில் நுழைத்திருப்பார்.
கே.வி. மகாதேவன் இசையில் பாட்டெழுதுவது என்றால் கண்ணதாசனுக்கு ஒரு தனி உற்சாகம் பிறக்கும். மாமா என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் கே.வி.மகாதேவன் கவிஞர்களை அவர்கள் இஷ்டம் போல் எழுதவிடுவார். அவர்கள் எழுதிய பாட்டுக்கு ஏற்ப இசையமைப்பார்.
அதற்கு சிறந்த உதாரணம் தில்லானா மோகனாம்பாள் படம். இந்த படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா? பாடல்.
இந்தப் பாடலை கண்ணதாசன் படத்திற்காக எழுதியதல்ல. அப்போது கண்ணதாசன் திமுகவை விட்டு, விலகி காங்கிரசில் இருந்து கொண்டு திமுகவை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்.
அப்போதுதான் அண்ணாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்காக மாலை முரசு நாளிதழில் கண்ணதாசன் எழுதிய கவிதைதான் ` நலந்தானா’ பாடல்! அந்தப் கவிதையை அப்படியே எடுத்து படத்திற்கு பயன்படுத்திக்கொண்டார் கே.வி. மகாதேவன்.
இப்போது திருவிளையாடல் படத்தில் அடுத்த ஒரு பாமரத்தனமான ஒரு பாடல். அதாவது விறகு வெட்டி வீதியில் ஆடிப் பாடுகிறான்.
சித்தர் பாடல் பாதிப்பு இந்த பாட்டு என்பார்கள். ஆனால் ஒரு பாமரத்தனமான பாட்டில் மிக உயர்ந்த கருத்துக்களை சொல்லியிருப்பார் கண்ணதாசன்.
பாத்தா பசுமரம்
படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா
ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா
இதுதான் பாட்டின் பல்லவி
இந்தப் பாட்டின் இரண்டாவது சரணத்தில்
பொன்னும் பொருளும் மூட்டைகட்டி
போட்டு வச்சாரு – இவரு
போனவருஷம் மழையை நம்பி
வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி
எழுதி வெச்சாரு – ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை
போய் விழுந்தாரு
எத்தனை பெரிய வாழ்க்கை தத்துவத்தை ஒரு கிராமியப் பாடல் வரிகள் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றார் கண்ணதாசன்.
ஒரே படத்தில் இப்படி ஒரு கவிஞனால் பல்வேறு பரிமாண ரூபங்களை எடுக்க முடியும் என்றால் அது கண்ணதாசனால் மட்டுமே முடியும்.
அதே படத்தில் பாண்டிய மன்னன் தன் மனைவியுடம் பாடுவது மாதிரி ஒரு மெல்லிய மெலோடி பாடல்
அதற்கேற்ற வரிகள்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
புறப்படும் தென்றல்
கண்ணதாசனால் படத்தின் கதைக்குள் உடனே புகுந்து விட முடியும்.
ஒரு படத்தின் பாடலை ஒரே நாளில் எழுதுவதாக இருந்தாலும் சரி. படத்தின் வெவ்வேறு சூழலுக்குக்கேற்ற மாதிரி தன்னை உடனே உருமாற்றிக்கொண்டு சிந்தனையை அடுத்த நிமிடமே அடுத்த சூழலுக்கேற்ற மாதிரி மாற்றிக்கொண்டு எழுதவும் முடியும்.
அதற்குக் காரணம் அவர் சின்ன வயதிலிருந்து உள்வாங்கிக் கொண்ட தமிழ். அதன் இலக்கியத்தின் சாரம்.
திருவிளையாடல் படம் வந்த அதே 1965ம் வருடம் கண்ணதாசனின் கற்பனைக்கு ஒரு சோதனை வந்தது.
அது என்ன ?