இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 20:57

புதுடெல்லி

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 1,965 ஆக இருந்த நிலையில் தற்போது 2,069 ஆக உயர்ந்துள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸால் 9,37,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்ற 8000த்துக்கும் மேற்பட்டோரால் நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

மத மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம் இதுவரை கரோனா வைரஸ் தொற்று இல்லாத அருணாச்சல பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களிலும் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸால் இதுவரை 2,069 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் உயிரிழந்துள்ளனர், 156 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களும் கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மகாராஷ்டிரத்தில் 416 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 13 பேர் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 42 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 75 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 74 பேர் டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். அவர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர்.

இதன் மூலம் ஏற்கனவே தமிழகத்தில் கரோனா பாதிப்பு 234 ஆக இருந்த நிலையில், தற்போது 309 ஆக அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக சென்னையில் 42 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கரோனாவால் உயிரிழந்துள்ளார். ஆறு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கேரளாவி்ல் இதுவரை 286  பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர். 25 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லியில் 219 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியிலும் வைரசால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் குணமடைந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் 135 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 14 பேர் குணமடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் 110 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தெலுங்கானாவில் 96 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

ராஜஸ்தானில் 108 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு இதுவரை ஒருவர் கூட அங்கு வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கவில்லை. மேலும் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 99 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு ஆறு பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல் ஆந்திராவில் 86 பேர், குஜராத்தில் 82 பேர், ஜம்மு-காஷ்மீரில் 62 பேர், ஹரியானா மற்றும் பஞ்சாபில் முறையே 43 மற்றும் 46 பேர், மேற்கு வங்கத்தில் 37 பேர், சண்டிகரில் 14 பேர், அந்தமானில் 10 பேர், பீகாரில் 23 பேர், சத்தீஸ்கரில் 9 பேர், உத்தரகாண்டில் 7 பேர், கோவாவில் 5 பேர், இமாச்சல பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் தலா 3 பேர், ஒடிசாவில் 4 பேர், மணிப்பூர் மற்றும் மிசோரத்தில் தலா ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.