மருத்துவர் சீட்டுடன் வந்தால் மது வழங்கும்படி கேரள அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 20:53

திருவனந்தபுரம்,

கேரளாவில் அரசு மருத்துவர்கள் சிபாரிசு பெற்று மருத்துவ சீட்டுடன் வந்தால் அவர்களுக்கு மது வழங்க கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்த உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் இன்று 3 வாரங்கள் தடை விதித்துள்ளது.

கேரளாவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மது கடைகள் மூடப்பட்டன. அதேசமயம் உடல் நலன் கருதி அரசு மருத்துவர்கள் மது அருந்த சிபாரிசு செய்து அதற்கான மருத்துவ சீட்டு வழங்கினால் அவர்களுக்கு மது வழங்கலாம் என கேரள அரசு திங்கள்கிழமை அறிவித்திருந்தது.

கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில கிளை பிரதிநிதிகள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நீதிபதிகள் ஏ.கே ஜெயசங்கரன் நம்பியார் மற்றும்  ஷாஜி பி சாலி ஆகியோர் இந்த வழக்கை இன்று விசாரித்தனர்.

அப்போது மது கிடைக்காத காரணத்தால் இதுவரை 8 பேர் தற்கொலை செய்து கொண்டதால் இத்தகைய ஒரு உத்தரவை பிறப்பித்ததாக கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதை ஏற்காத நீதிபதிகள் கேரள அரசின் இந்த முடிவு  ஆபத்தை விளைவிக்கக் கூடியது. கேரள அரசின் கூற்றை உறுதிப் படுத்துவதற்கு அறிவியல் பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே மருத்துவ சீட்டுடன் வந்தால் மது வழங்கலாம் என கேரள அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த மூன்று வாரங்களுக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.