கோவிட் வைரஸுக்கு மருத்துவம்: மாற்று மருத்துவ நிபுணர்களைக் கூட்ட முதல்வருக்கு சைதை துரைசாமி வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 19:32

சென்னை

கோவிட்-19 வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க மாற்று மருத்துவ முறை நிபுணர்களின் ஆய்வு மாநாட்டைக் கூட்டுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சைதை துரைசாமி எழுதிய கடித விவரம்:

இன்று, நம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுவதற்கும், நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டு வருவதற்கும், என்னுடைய மனமார்ந்த  பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

டெங்கு காய்ச்சல் படுவேகமாகப் பரவிய காலத்தில் நமது புரட்சித்தலைவி அம்மா அவர்கள், மக்களைக் காப்பாற்றுவதற்கு எடுத்த சரித்திரப்புகழ் வாய்ந்த ஒரு நடவடிக்கையை தங்களுக்கு இந்த நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். அவரைப் போன்று, கொரோனா வைரஸ் கொடூரத்திற்கு தாங்கள் ஒரு முடிவு கட்டி, தமிழ் மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்து, நீங்கள்  பேரும், புகழும் அடைய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

நான் சென்னை பெருநகர மேயராகப் பொறுப்பேற்ற நேரத்தில், டெங்கு காய்ச்சலுக்கு அலோபதியில் மருந்தே இல்லை என்று சொல்லப்பட்டதைக் கேட்டு அதிர்ந்தேபோனேன். உடனடியாக பல்வேறு சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அதன் அடிப்படையில், நிலவேம்புக் குடிநீரும், பப்பாளி இலை சாறும் சிறந்த தீர்வு என்பதைக் கண்டறிந்தேன். இந்தத் தீர்வு சரிதானா என்பதை, சென்னை கிங்ஸ் மருத்துவநிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளச் செய்தேன். அது, டெங்கு நோயைக் குணப்படுத்துவதில் மிகவும் சிறப்பாக செயலாற்றுவது உறுதியானதும், அந்த ஆய்வு அறிக்கையோடு அன்றைய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து, நமது புரட்சித் தலைவி அவர்களை சந்தித்து தகவல் தெரிவித்தோம்.

புரட்சித்தலைவி அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். உடனடியாக நிலவேம்புக் குடிநீர், பப்பாளி இலைச்சாறு இரண்டையும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்க உத்தரவு பிறப்பித்தார்.

அதனை பத்திரிகைகளில் முழுப்பக்க செய்தியாகவும் வெளியிட்டு மக்களிடம் மாபெரும் விழிப்புணர்வு உருவாக்கினார். அதனாலே, டெங்கு நோய் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அப்படியொரு தருணம் மீண்டும் உருவாகியுள்ளது. கொரோனா வைரஸ் கிருமிகளுக்கு அலோபதியில் மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனமே அறிவித்துவிட்டது.

இந்த நேரத்தில், நம் பாரம்பரிய சித்த வைத்தியத்தின் பெருமையை உலகறிய நிலைநாட்டவும், அதன் மூலம் நம் விவசாயத்திற்கும், விவசாயக் கூலி  தொழிலாளர்களுக்கும் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தவும் ஓர் அரிய வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்துள்ளது.

ஆம், இப்போது கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக பல பாரம்பரிய சித்த வைத்தியர்கள் கூறிவருகிறார்கள். அதேபோன்று கொரோனாவுக்கு மருந்து மற்றும் தடுப்பு மருந்துகளை தயார் செய்வதற்கான குறிப்புகள் நிறைய மருத்துவர்களிடம் இருக்கிறது. ஆகவே, பாரம்பரிய வைத்தியம் மூலம் கொரோனா வைரஸை வெல்லமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அனைத்து மாற்று மருத்துவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தும் முயற்சியை  உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், நேச்சுராபதி, யோகா மருத்துவர்களை மட்டுமின்றி, நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியால் ஆயுஷ் மருத்துவத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஹோமியோபதி, யுனானி மருத்துவர்களையும் கலந்து பேசி போர்க்கால அடிப்படையில் கொரோனாவுக்கு மருந்தும், தடுப்பு மருந்துகளும் கண்டறிய வேண்டும்.

அப்படி கண்டறிந்த மருந்துகளை, மத்திய, மாநில அரசுகளின் பகுப்பாய்வுக் கூடங்களில் ஆய்வு செய்து, அதன் உண்மைத்தன்மை உறுதியாகத் தெரிந்ததும், மக்களுக்கு மருந்து கிடைப்பதற்கான நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

நமது பாரம்பரிய சித்த வைத்தியத்தின் மூலம், கொரோனா வைரஸ் கிருமிகளை நிச்சயம் அழிக்க முடியும் என்று நம்புகிறேன். அப்படியொரு மருந்தை கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகம் செய்த பெருமை தங்களுக்கும், நம் தமிழகத்திற்கும் கிடைக்க வேண்டும். ஒரு விவசாயி தமிழக முதல்வராக இருக்கும் நேரத்தில் இப்படியொரு சரித்திர சாதனை நிறைவேற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

ஆயுஷ் மருத்துவத்தின் மகிமையை அறிந்தவர் நம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி. ஆகவே, அவர் நமது கண்டுபிடிப்புக்கு நிச்சயம் உரிய மதிப்பு கொடுத்து இந்தியா முழுவதும் அறிமுகம் செய்வார்.

இதன் மூலம் நம் பாரம்பரிய சித்த மருத்துவத்தின் பெருமையை உலகறிய பறைசாற்ற முடியும். இதன் மூலம் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் தங்கள் பெயர் நிலைத்திருக்கும்.

கொரோனா வைரஸை அழிப்பது மட்டுமின்றி, போதிய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆம், உடலில் போதிய நோய் எதிர்ப்பு சக்தி இருப்பவர்களுக்கு கொரோனா மட்டுமின்றி, எந்த ஒரு நோய்க் கிருமிகளாலும் பாதிப்பு ஏற்படாது என்பதுதான் அடிப்படை மருத்துவம்.  

சித்த மருத்துவத்தையும், பாரம்பரிய விவசாயத்தையும் மீட்டெடுத்து, ஆரோக்கியத்துடனும் செல்வத்துடனும் மனித குலம் வாழ்வதற்கு வழி காட்டும் நல்வாய்ப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி, வெற்றியடைய அன்புடன் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை. சா. துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.