ஒரு நாளைக்கு 31 ஆயிரம் கொரானா தடுப்பு மாஸ்க் தயாரிக்கும் பணியில் சிறைக் கைதிகள்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 17:50

சென்னை

தமிழ்நாடு சிறைகளில் உள்ள கைதிகள் கொரானா வைரஸ் தடுப்பு முகக் கவசம் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள் மூலம் ஒரு நாளைக்கு 31,000 மாஸ்க்குகள் தயாரிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில், சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3,963 கைதிகள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் அவர்களை காவல்துறை வாகனங்களில் அழைத்துச் சென்று வீட்டில் கொண்டு போய் விடுவதால் கைதிகள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தடையை மீறி வெளியே சுற்றுபவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழக சிறைகளிலும் கொரானோ தடுப்பு நடவடிக்கைகள் சிறைத்துறை தலைவர் டிஜிபி சுனில்குமார்சிங் மேற்பார்வையில் மும்முரமாக நடந்து வருகிறது.

 தமிழ்நாடு முழுவதும் 9 மத்திய சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 துணை சிறைகள் மற்றும் 3 பெண்கள் சிறப்பு சிறைகள் உள்ளன. இந்த சிறைகளில் உள்ளவர்களில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகளாகவும் எஞ்சிய 30 சதவீதம் பேர்  தண்டனைக் கைதிகளாகவும் உள்ளனர். கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு கொரானா வைரஸ் வருவதற்குரிய வாய்ப்புக்கள் அதிகம். அதனால் சிறிய குற்றங்களில் ஈடுபட்டுள்ள விசாரணை கைதிகளை ஜாமினில் வெளியே அனுப்ப கோர்ட் உத்தரவின் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

கொரானா தொடர்பாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை கடந்த 10 நாட்களில் 3,963 சிறைக்கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, 

‘‘கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 50 சதவீதம் பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் சிறைகளில் கைதிகளின் கொள்ளவு குறைந்துள்ளது. மீதம் உள்ள கைதிகளிடையே சமூக  இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் உள்பட கொரானா தொடர்பாக சுகாதாரத்துறை விதிகளையும் கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உடல் நலம் பாதிப்படையும் நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது’’ என தெரிவித்தார்.

ஜாமினில் விடுவிக்கப்படும் சிறைக்கைதிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு  செல்வதற்கு சென்னை நகர போலீசாரே வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்  போன்ற ஊர்களைச் சேர்ந்த கைதிகளை போலீஸாரே பாதுகாப்பாக அழைத்துச் சென்று வீடுகளில் கொண்டு போய் விட்டு  விட்டு வருகின்றனர்.

கைதியின் நேர்காணல்

சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து விடுதலையான சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கார்த்திக் என்ற கைதி கூறியதாவது,

‘‘நான் புழல் 2ம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக  எனது நலன் கருதியும், என் குடும்ப நலன் கருதியும் என்னை நீதித்துறை விடுதலை செய்துள்ளது. 144  தடை உத்தரவு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் நான் கரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக வீடு சென்று சேர்வதற்காக காவல்துறையில் வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்கள். மனிதநேயத்துடன் எனக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய நீதிபதிக்கும், என்னை நல்ல முறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சிறைத்துறை தலைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனி நான் குற்றநிகழ்வுகளில் ஈடுபடமாட்டேன். கோர்ட் என்னை எந்த தேதியில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடுகிறதோ அந்த தேதியில் நான் கோர்ட்டில் ஆஜராவேன். காவல்துறை அதிகாரிகளுக்கு நான் எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்’’ என தெரிவித்தார். கைதிகள் போலீஸ் வாகனத்தில் அவர்களது வீட்டு வாசலில் கொண்டு போய் விடப்படுவது கைதிகளிடையே பெரும் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு நாளைக்கு 31,000 மாஸ்க் தயாரிக்கும் பணியில் கைதிகள்

சிறைகளில் கைதிகள் மாஸ்க் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் உள்ள கைதிகள் மூலம் ஒரு நாளைக்கு 31,000 மாஸ்க்குகள் தயாரிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த பணியில் 150 கைதிகள் ஈடுபட்டுள்ளனர். சிறையில் உள்ள துணி தைக்கும் தொழிலகத்தில் கைதிகள் மூலம் இவை தயாரிக்கப்படுகின்றன. 

ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மாஸ்க் தைக்கும் பணியில் கைதிகள் ஈடுபடுகின்றனர். கொரானா அலர்ட் தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த நாளில் இருந்து இதுவரை மொத்தம் 1 லட்சத்து 80 ஆயிரம் மாஸ்குகள் தமிழக சிறைகளில் தயார் செய்யப்பட்டு அவை டிஜிபி அலுவலகம் உள்பட தமிழக காவல்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சப்ளை செய்யப்பட்டுள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. மூன்றடுக்குகள் கொண்ட தரமாக தயாரிக்கப்படும் இந்த மாஸ்க்கின் அடக்கவிலை ரூ. 10. வெளிமார்க்கெட்டில் மாஸ்க் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நியாயமான விலைக்கு காவல்துறையினருக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக சிறையில் உள்ள தையல் வேலையில் உள்ள கைதிகள் மூலம் அவை தயாரிக்கப்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.