12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு- அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 17:20

சென்னை:

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது. பொதுத்தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. மத்திய ,மாநில அரசுகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் 21 நாள் ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு ஆகியன பிறப்பிக்கப்பட்டது.

பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஏப்ரல் 7-ந்தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் ஏப்ரல் 7-ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகளைத் தொடங்க முடியாத நிலை உள்ளது. எனவே விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

+2 தேர்வு விடைத்தாள் திருத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் கூறி உள்ளது.