முழு ஊரடங்கை விலக்க ஆலோசனைகள் கூறும்படி மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 14:20

சென்னை

21 நாள் முழு ஊரடங்கை விலக்கிக் கொள்ள படிப்படியாக அமல்படுத்துவதற்கான ஆலோசனைகளைக் கொண்டபொதுத் திட்டம் ஒன்றைத் தெரிவிக்கும்படி மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனைகளைத் தெரிவிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 457 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,965 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று விடியோ கான்பரன்சிங் முறை மூலம் மாநில முதலமைச்சர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் குறித்து விரிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். 

கோவிட்-19 வைரஸ் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் முதல்முறையாக வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார்.

இப்பொழுது வியாழனன்று இரண்டாவது முறையாக, கொரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்களோடு, பிரதமர் நரேந்திர மோடி வீடியோகான்பரன்ஸ் முறையில் இன்று மதியம் ஆலோசனை நடத்தினார்.

கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா,  ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பீகார்,  அசாம், டில்லி, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் வீடியோகான்ஃபரன்ஸ் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்தியர் யாரும் நாம் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு பலியாக விடக்கூடாது என்பது நம்முடைய பொதுவான லட்சியமாக அமைந்திருக்கிறது.

கடந்த 9 நாட்களாக நாம் முழு ஊரடங்கு அமல் செய்து வருகிறோம். இந்த நடவடிக்கை காரணமாக நமக்கு சில வெற்றிகள் கிடைத்துள்ளன. அடுத்த சில வாரங்களுக்கு இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கப் போகிறது. இந்த காலத்திலும் நம்முடைய முன்னுரிமை நடவடிக்கைகளாக கீழ்க்காணும் பணிகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.

கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்டவரை ரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் யார் யாரோடு தொடர்பில் இருந்தாரோ அவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து எல்லோரையும் தனிமைப்படுத்தி, கண்காணிப்பில் வைக்கவேண்டும்.

இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற மாவட்ட அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 மாவட்ட அளவில் இப்பணிகளை நிறைவேற்ற கண்காணிப்பு அதிகாரிகள் கூடிய விரைவில் நியமிக்கப்பட வேண்டும்.

அத்துடன் இந்திய அரசு தற்பொழுது தனியார் ஆய்வகங்களை கோவிட்-19 வைரஸ் தொற்றை உறுதி செய்வதற்கான  சோதனைகளை நடத்த அனுமதி அளித்துள்ளது.

 இந்த ஆய்வகங்களில் கணிசமான அளவு சோதனைகள் நடந்து வருகின்றன.

இந்த ஆய்வகங்களில் உள்ள புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ள எல்லா புள்ளிவிவரங்களையும் ஒருங்கிணைத்து கோவிட்-19 வைரஸ் தொற்றை நாம் தடுத்து நிறுத்தும் ஒருங்கிணைந்த  திட்டங்களை வகுக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

முழு ஊரடங்குக்கான கால அளவு முடிந்ததும் நாம் நம்முடைய இந்திய மக்களை மீண்டும் வெளிக்கொணர வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் பொதுவானதாக அமைய வேண்டும். இந்திய மக்களை வெளிக்கொணரும் திட்டம் படிப்படியாக அமுலுக்குக் கொண்டு வரக்கூடியதாக அமையவேண்டும்.

இந்தத் திட்டத்தை வகுப்பதற்காக ஆலோசனைகளை மாநில முதல்வர்கள் முதல்வர்கள் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என இந்தியப் பிரதமர் உரையாற்றினார்.

 முன்னதாக இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கான மருத்துவ உபகரணங்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் மருந்துகளை தயாரிப்பதற்கும் மருந்துகளுக்கான கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் எந்த தட்டுப்பாடும் இல்லாமல் அனைத்து பணிகளை பணிகளை ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும். கோவிட்-19 வைரஸ் சிகிச்சைக்கு மாநில அளவில் தனியான மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் எல்லோரும் பாதுகாக்கப்பட வேண்டும். நம்முடைய மருத்துவர்களுக்கு இதுதொடர்பாக ஆன்லைன் பயிற்சி வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

 இது அறுவடைக் காலம். அதனால் நம்முடைய விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் முழு ஊரடங்கில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் தங்கள் வயல்களில் பணியாற்றும் பொழுதும் மற்ற இடங்களில் பணியாற்றும் பொழுதும் ஒருவருக்கு ஒருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

அறுவடைக் காலம் முடிந்த பிறகு விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களை, கொள்முதல் செய்வதற்கு அல்லது சந்தைப்படுத்துவதற்கு, நாம் விவசாய பொருள்கள் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷனை மட்டும் நம்பியிருந்தால் போதாது. அதற்கு மேலாகவும் நாம் செயல்பட வேண்டியது அவசியம். கிராமப்புறங்களில் இருந்து சந்தைக்கு பொருள்களை கொண்டு வருவதற்கு லாரிகளை தொகுப்பு முறையில் ஏற்பாடு செய்வது நல்ல பலன்தரும்.

 மேலும் விவசாயிகள் அனைவரும் ஒரே நேரத்தில் அறுவடைப் பணிகளை மேற்கொள்ளாமல் பகுதி பகுதியாக அறுவடைப் பணிகளை மேற்கொண்டால் சிறப்பாக அமையும்.

நடப்பு ஏப்ரல் மாதத்தில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்கு ரூபாய் 11,000 கோடி விடுவிக்கப்படும். இந்த பணத்தை கோவிட்- 19 வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பயனுள்ள வழியில் செலவிட வேண்டும்.

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட வழங்கப்பட்ட தானியங்களையும் பணத்தையும் உரியவர்களுக்கு விரைந்து வழங்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிட்- 19 வைரஸ் பணிகளில் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த தொண்டர்களையும் தேசிய சேவை திட்டத்தின் கீழ் உள்ள மாணவர்களையும் இணைத்துக்கொள்ளலாம் இதுதவிர கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிர்வாக பராமரிப்பு பணிகளில் சேவை அமைப்புகளை கலந்துகொண்டு பணிகளைச் செய்ய வேண்டும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு பணிகளுக்காகத் திட்டமிடும் பொழுது சேவை அமைப்புகளுடனும் மற்றவர்களுடனும் விரிவாக ஆலோசனை நடத்துவது பயன்தரும். இந்தியாவில் நோய் எதிர்ப்புத் திறனை ஊக்குவிக்க ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகள் பாரம்பரியமாக பின்பற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்புத் திறன் குறைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று சமீபத்தில் நம்முடைய ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இவற்றை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியே கான்பரசிங்கில் பங்கேற்றார்.

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம், பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, வைரஸ் பரவுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், ஊரடங்கு உத்தரவு, 144 தடை உத்தரவு,  புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள், நிவாரண உதவிகள் வழங்குவது, மாநில அரசுக்கு தேவையான உதவிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் வீடியோகான்ஃபரன்ஸ் ஆலோசனையின் போது தலைமைச் செயலாளர் க. சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், காவல்துறை டிஜிபி திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.