தேனியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

பதிவு செய்த நாள் : 02 ஏப்ரல் 2020 11:28

தேனி

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தோனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளையும், அம்மா உணவகத்தில் தயாராகும் உணவுகளையும் ஆய்வு செய்தார் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 

இன்று (2.4.2020) தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேனி புதிய பேருந்து நிலையத்தில் "வீடு தேடி வரும் மளிகைப் பொருட்கள்" திட்டத்தை துவக்கி வைத்தார்.

தேனி உழவர் சந்தையில் ரூ.150-க்கு அனைத்து காய்கறிகளும் அடங்கிய "காய்கறிகள் தொகுப்பு" தயாரிக்கப்பட்டு வழங்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் ஓபிஎஸ்.

அப்போது அவருடன் அரசு உயர் அதிகாரிகளும், தேனி தொகுதி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

கொரோனா நோய் தொற்றின் தீவிரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு அலுவலர்கள் ஆற்றி வரும் பணிகளை துரிதப்படுத்தி நோய் தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

தற்சமயம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்களில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளவர்களை அதிக கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு எளிதில் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.

High Risk Contact -ல் நோய் தொற்று உள்ளவர்களின் குடும்பத்தினர் மற்றும் பணியாற்றும் இடம், அவர் சென்று வந்துள்ள இடங்களில் உள்ளவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி மருத்துவமனையில் அனுமதித்து பாதுகாக்க வேண்டும்.

Low Risk Contact -ல் நோய் தொற்று உள்ளவர்களின் பக்கத்து வீடு, அருகில் இருந்தும் தொடர்பு இல்லாமல் உள்ளவர்களையும் கண்காணித்து பரிசோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, மூச்சுதிணறல் உள்ளிட்ட கொரோனா தொடர்பான அறிகுறிகள் உள்ளனவா என கவனமாக களப்பணியாளர்கள் தினமும் கண்காணிக்க வேண்டும். களப்பணியாளர்கள் கண்டிப்பாக முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து களப்பணிக்கு செல்ல வேண்டும்.

நோய் தொற்று உள்ளவர்களின் குடியிருப்பு பகுதிகளின் மைய பகுதிகளிலிருந்து அரசால் வகுக்கப்பட்டுள்ள (5 Km) Containment Zone, மற்றும் Buffer Zone (2 Km) என மொத்தம் 7 கி.மீ தூரத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருபவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தியுள்ளேன். அவர்களை சார்ந்தோர்களுக்கும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது. அவர்களை சார்ந்தவர்கள் மட்டுமின்றி அவர்கள் தொடர்பு கொண்டுள்ள நபர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வகையான பணிகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளுடன், அங்கன்வாடி பணியாளர்களையும் களப்பணிக்கு உட்படுத்தி 50 வீடுகளுக்கு ஒரு பணியாளர்கள் வீதம் பணியமர்த்தி குழுக்கள் அமைத்தும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களை சரிவர கண்காணிக்கவும், டெல்லியில் நடைபெற்ற மத கூட்டத்திற்கு சென்று வந்தவர்களையும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த அலுவலர்கள் கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.