டெல்லி நிஜாமுதீனில் இருந்து கரோனா வைரஸ் பரவியது எப்படி?

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2020 20:05

புதுடெல்லி

மார்ச் மாதம் 13ந் தேதியில் இருந்து மார்ச் மாதம் 26ந் தேதி வரை டில்லி நிஜாமுதினில் சுமார் 1000 வெளிநாட்டினர் உள்பட 3600 பேர் தங்கி உள்ளனர். இவர்கள் சென்ற இடம் எல்லாம் கரோனா பரவி உள்ளது.

டெல்லியில் கரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கான கட்டுப்பாடுகளை மீறி, தப்லீக் ஜமாத் என்ற முஸ்லிம் பிரிவினரின் மத மாநாட்டில் பங்கேற்றவர்களால் நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1500ஐ கடந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று தீவிரமடைய காரணமான நிஜாமுதீன் பகுதியில் நடந்த மத மாநாடு முலம் வைரஸ் தொற்று பரவிய விவரம் பின்வருமாறு :

கடந்த மார்ச் 13ஆம் தேதி தப்லீக் ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் வருடாந்திர மத மாநாடு துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க 3,600 பேர் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் குவிந்தனர். அதேநாளில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக டெல்லியில் 200 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூட கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் மாநாடு தொடர்ந்து நடைபெற்றது.

மூன்று தினங்கள் நடைபெற்ற மத மாநாடு மார்ச் 15ம் தேதி நிறைவு பெற்றது.

மார்ச் 16ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் 50 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூட கூடாது என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். இருப்பினும் மாநாட்டுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜமாத்தின் கட்டிடத்தில் தங்கினர்.

மார்ச் 20ம் தேதி மத மாநாட்டில் பங்கேற்ற 10 இந்தோனேஷியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெலுங்கானாவில் உறுதி செய்யப்பட்டது.

மார்ச் 22ம் தேதி பிரதமர் மோடியின் வேண்டுகோளின் படி மக்கள் சுய ஊரடங்கு பின்பற்றப்பட்டது.

மார்ச் 23ம் தேதி நிஜாமுதீன் பகுதியில் தங்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து சொந்த ஊர் திரும்பினர்.

மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது.

மார்ச் 25ம் தேதி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்ளிக்  ஜமாத்துக்கு சொந்தமான கட்டிடத்தில் ஆயிரம் பேர் தொடர்ந்து தங்கியிருந்தனர். அவர்களை அங்கிருந்து  வேறு இடத்திற்கு அழைத்துச் செல்ல துணை மாவட்ட ஆட்சியரிடம் ஜமாத் அதிகாரிகள் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.

மார்ச் 26ம் தேதி மத மாநாட்டில் பங்கேற்ற மதபோதகர் ஒருவர் கரோனா வைரஸ் தாக்கி ஸ்ரீநகரில் உயிரிழந்தார்.அதேசமயம் ஜமாத் அதிகாரிகளை சந்தித்த துணை மாவட்ட ஆட்சியர் அவர்களை மாவட்ட ஆட்சியரை சந்திக்க அழைப்பு விடுத்தார்.

மார்ச் 27ம் தேதி நிசாமுதின் பகுதியில் தங்கியிருந்த 6 பேர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு பின் ஹரியானாவில் உள்ள ஒரு முகாமில் தனிமையில் வைக்கப்பட்டனர்.

துணை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த 33 அதிகாரிகள் மாநாடு நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டனர். அங்குள்ள கட்டிடத்தில் குடியிருந்த மேலும் 33 பேரை அப்புறப்படுத்தி தனிமைப்படுத்தினர்.

ஜமாத் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய மாவட்ட ஆட்சியர் அங்கு உள்ளவர்களை வெளியேறும் படி உத்தரவிட்டார்.

ஊரடங்கின் போது மக்கள் அவரவர் இடத்திலேயே தங்கி இருக்கும்படி பிரதமர் மோடி அறிவித்ததால் யாரும் வெளியேறவில்லை என ஜமாத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் ஜமாத்துக்கு சொந்தமான இடத்தில் இருந்து அனைவரையும் அப்புறப்படுத்த துவங்கினார்.

மார்ச் 31ம் தேதி அன்று 36 மணி நேரம் முயற்சிக்கு பின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஜமாத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இருந்து 1548 பேர் வெளியேற்றப்பட்டனர்.

டில்லி மாநாட்டில் பங்கேற்று இதுவரை பரிசோதனைக்கு முன்வராதவர்களை தேடும் பணி இந்தியாவில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.