ராக ரூபன் கண்ணதாசன்!

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2020

கண்ணதாசன் தான் எப்படி ஆத்திகன் ஆனார் என்பதை இன்று படித்திருப்பீர்கள். மேலும் சொல்கிறார்

 மேலும் மேலும் கம்பனைப் படித்தேன். கடவுளைப் படித்தேன்.

 என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன; பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகளெல்லாம் கவிதையிலேயே தோன்றின.

 புரட்சி என்கிற பேரில் குருட்டுத்தனமான நாத்திக மனப்போக்குத் தொடர்ந்திருந்தால், எனது எழுத்துக்கள் சுருங்கி, கருத்துக்கள் சுருங்கி, என் பெயரும் சுருங்கியிருக்கும்.

` வாழ்க்கையில் நீ எந்தப் பாதையில் போனாலும் சரி, எதிர்ப்படும் மகிழ்ச்சியிலோ, துன்பத்திலோ நீ இறைவனின் எதிரொலியைக் கேட்கிறாய். அந்த எதிரொலியில் இந்து மதத்தின் சாரத்தைக் காண்கிறாய்!’ இப்படியெல்லாம் கண்ணதாசன் கடவுள் நம்பிக்கை கொண்டபின் தான் பல புராணப் படங்களுக்குப் பாடல் எழுதினார்.

 அதன் பிரதிபலனாக பல அற்புதமான பாடல்கள் கிடைத்தன.

 உதாரணமாக திருவிளையாடல் படத்தில்  ஒரு கட்டம். ஹேமநாத பாகவதர், என்கிற மிகப்பெரிய சங்கீத வித்வான். தன் சங்கீதப் புலமையால் பல நாட்டில் போய் பல பரிசுகளை வென்று மதுரைக்கு வருகிறான்.

 அவருடைய புலமையை அறிந்த பாண்டிய மன்னன் அவரை ஊருக்கு வெளியே நின்று வரவேற்று உபசரிக்கிறான்.

ஹேமநாதர் பாகவதரை தன் சபையில் பாட வைக்கிறான்.

 இந்தக் காட்சியில் ஹேமநாத பாகவதராக நடித்தவர் டி.எஸ்.பாலையா.

 ஹேமநாதர் பாகவதர் பாடல் முடிந்தவுடன், ஒரு சவால் விடுவார். என்னோடு போட்டி போட்டு யாரும் பாண்டிய நாட்டில்  என்னைப் பாட்டில் வெல்ல வில்லையென்றால் இந்த பாண்டிய நாடே எனக்கு அடிமையென்று சவால் விடுவான்.

 பாண்டிய நாட்டில் அப்போது சிறந்த பாகவதராக இருந்தவர் பாணபட்டர். மிகச் சிறந்த பாடகர்.

 இப்போது படத்தில் போட்டி பாடல் உருவாகிறது. ஹேமநாதர் குரலுக்கு சீர்காழி கோவிந்தராஜனை பாட அழைத்தார்கள். ` படத்திற்காக என்றாலும் கூட என் குரல் இன்னொருவருடன் தோற்கும் பாடலை நான் பாட மாட்டேன்’ என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் சீர்காழி.

யாரைப் பாட வைக்கலாம் என்று இயக்குனர் ஏ.பி. நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி. மகாதேவனும் யோசித்து பிறகு பிரபல கர்நாடக சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைப்பது என்று முடிவு செய்தார்கள்.

 அந்தப் பாடல்தான் நாம் அனைவரும் பலமுறை கேட்ட பாடல்.

 அங்கேதான் கண்ணதாசன் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகிறது.

 படத்தின் காட்சியென்றாலும் பாடுவது கர்நாடக சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா.

 காட்சிக்காக மட்டுமன்றி பாலமுரளியை கர்நாடக சங்கீத சாகித்யம் வெளிப்படும்படி பாடல் எழுதினார்.

 அதுதான்

 ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா>

 நான் பாட இன்றொரு நாள் போதுமா

 நாதமா கீதமா அதை

 நான் பாட இன்றொரு நாள் போதுமா >

 புதுநாதமா சங்கீதமா – அதை

 நான் பாட இன்றொரு நாள் போதுமா?

 அடுத்ததாக ஹேமநாத பாகவதர் தன் பாடல் மூலமாக பாண்டிய நாட்டிற்கு சவால் விடவேண்டும் . அதையும் பாடலிலேயே சொல்லியிருப்பார் கவியரசர்.

ராகமா சுகராகமா .. கானமா தேவகானமா என்

 கலைக்கிந்த திருநாடு சமமாகுமா?

குழலென்றும் யாழென்றி, சிலர் கூறுவார்

 என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்.

 இந்த வரிகளின் மூலமாக ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டி சங்கீத மேதைகளுக்கு சவால் விட்டுவிட்டான்.

 அடுத்ததாக பாண்டிய மன்னனை பயமுறுத்த வேண்டும்.

 அழியாத கலையென்று

 என்னைப் பாடுவார் – எனை

அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

 இசை கேட்க எழுந்தோடி  

வருவார் அன்றோ

 சரி இதுவரையில் ஹேமநாத பாகவதர் தன் பாடல் மூலமாக பாண்டிய நாட்டிற்கு சவால் விட்டுவிட்டார்.

 ஆனால் திரைபடங்களில் அதிகம் பாடாத பாலமுரளிகிருஷ்ணா பாட வந்திருக்கிறார். அவருக்கு பாடலில் கர்நாடக ராக சங்கதி அதிகம் இல்லாவிட்டாலும், கொஞ்சம் பாடலிலாவது ராகங்கள் வரவேண்டாமா?

 அங்கே கர்நாடக சங்கீத வாசனையே எட்டாத  செட்டிநாட்டின் சிறுகிராமமான சிறுகூடல் பட்டியிலிருந்து வந்த கவிஞர் கண்ணதாசன் உள்ளே புகுந்தி விடுகிறார்.

 எனக்கிணையாக தர்பாரில்

 எவரும் உண்டோ?

 தர்பார் என்பதை படம் பார்ப்பவர்கள் பாண்டிய மன்னன் தர்பாரில் பாடுவதை ஹேமநாத பாகவதர் பாடுகிறார் என்று நினைப்பார்கள். ஆனால் தர்பார் என்பது ஒரு ராகம்.

 அடுத்த வரிகளை கவனிக்க வேண்டும்

கலையாத மோஹனச்

சுவை நானன்றோ

 கானடா – என்பாட்டுத் தேனடா

 இசைத் தெய்வம் நானடா!

 இதில் மோஹனமும், கானடாவும் ராகங்கள்.

 இந்தப் படத்தில் ஹேமநாத பாகவதராக நடித்தவர் டி.எஸ். பாலையா. சிவாஜிக்கு படத்தின் மூழுக் கதையும் தெரியும்.

 அன்று டி.எஸ். பாலையா பாடுகிற காட்சியின் படப்பிடிப்பு.

 அப்போது அங்கே ஒரு பரபரப்பு.

 ஏன்?

                                        (மீண்டும் சந்திப்போம்)