அஜித் தோவல் தலையீட்டால் நிஜாமுதீன் மசூதியை தூய்மைப்படுத்த ஜமாத் அனுமதி

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2020 17:39

புதுடெல்லி

இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரடியாக தலையிட்டு ஜமாத் இயக்குனர்  மௌலானா ஆசாத் கல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் பிரிவினரின் மசூதியை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் மாதம் 13 முதல் 15ம் தேதி வரை நடந்த தப்லீக் ஜமாத் இஸ்லாமிய பிரிவினரின் மத மாநாட்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டை சேர்ந்த சுமார் 8000 பேர் பங்கேற்றனர். அவர்களில் சுமார் 2000 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்.

டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூடக் கூடாது என்ற விதிமுறை அமலில் இருந்த நிலையில் வெளிநாட்டினர், உள்நாட்டினர் என ஆயிரக் கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாடு நடந்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தால் நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் இந்த மத கூட்டத்தில் பங்கேற்றது தெரியவந்தபோது அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அங்குள்ள கட்டிடங்கள் மற்றும் மசூதியை சுத்தப்படுத்த முயற்சித்தனர். ஆனால் தப்லீக் ஜமாத் இயக்குனர் மௌலானா ஆசாத் கல்வி அதற்கு அனுமதிக்கவில்லை.

விஷயம் தீவிரமானது என்பதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட உத்தரவிட்டார்.

நாட்டின் பல இஸ்லாமியக் குழுக்களின் தலைவர்களுடன் நட்புறவு கொண்டுள்ள அஜித் தோவல் மௌலானா ஆசாத் கல்வியுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது முயற்சிக்கு பின்பே மௌலானா ஆசாத் கல்வி மசூதியை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த ஒப்புக்கொண்டு அனுமதி அளித்த விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

தலிபான் பயங்கரவாதத்துக்கு இணையான செயல்

கரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தையும் சிறுபான்மையினர் உட்பட 99 சதவீத மக்கள் ஆதரவளித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தப்லீக் ஜமாத் பிரிவினரின் இந்த பொறுப்பற்ற செயலால் நாட்டில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாடே கரோனா வைரஸுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடி வரும் நிலையில் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள்  தலிபான் பயங்கரவாதத்துக்கு சமமானது. சட்டம் மட்டுமல்லாமல் அந்த இறைவனும் இந்த செயலை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

36 மணி நேரத்தில் 2000 பேர் வெளியேற்றம் 

மத மாநாடு நடந்த நிஜாமுதீன் பகுதியில் இருந்து கடந்த 36 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 617 பேர் கரோனா வைரஸுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகளை செய்து முடிக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று என்று டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை நடத்தும்படி பிற மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டு உள்ளதாகவும் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.