கோழி இறைச்சி, முட்டை உண்பதால் கொரோனா வைரஸ் பரவாது - கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம்

பதிவு செய்த நாள் : 01 ஏப்ரல் 2020 13:57

சென்னை

கோழி இறைச்சி மற்றும் முட்டை உண்பதில் நமக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் கொரோனா வைரஸ்  தொற்றுக்கும் கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் தொடர்பு இல்லை என்பதனை தெளிவுபடுத்துவது குறித்த கால்நடை பராமரிப்புத்துறை செய்தி வெளியிட்டுள்ளது..

     நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரானா வைரஸ் (கோவிட்-19) தொற்று நோய் பரவுதலை தடுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிகழ்வில் பொது மக்களுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களின் உற்பத்தி மற்றும் நகர்வுகள் தடையின்றி நடைபெறவும் கால்நடை, கோழி, முட்டை, மீன், இறைச்சி மற்றும் கால்நடை தீவனம், கால்நடை தீவனத்திற்கான உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளுக்கும் விலக்கு அளிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் காணொலி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மை செயலர் அவர்கள் அரசாணை எண்.152 குடும்ப நலம் மற்றும் சுகதாரத்துறை (P1) நாள் 23.3.2020-ன்வழி கால்நடை, கோழி, மீன், முட்டை, இறைச்சி  மற்றும் கோழித்தீவனம், கால்நடை தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்கள் ஆகியவற்றின் நகர்வுகளை அனுமதிக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களையும் அறிவுறுத்தியுள்ளார். 

     இந்நிலையில் தற்போது கோழி இறைச்சி, முட்டை, இதர கோழி உணவு பொருட்கள் சாப்பிடுவதால் covid-19  தொற்று நோய் பரவக்கூடும் என ஒரு தவறான செய்தியினை பொது மக்களிடம் ஒரு பிரிவினரால் சமூக ஊடகங்கள் மூலமாக  பரப்பபட்டு வருகிறது.  இதனால் பொதுமக்கள்  கோழி, முட்டை இறைச்சி சாப்பிட தயக்கம் காட்டுவதாக தெரியவருகிறது. இது முற்றிலும் தவறான வழிநடத்தும் (Misleading message) செய்தி ஆகும். வதந்திகள் மூலம் நமது புரத தேவையினை இழப்பது ஒருபுறமிருந்தாலும், கோழி வளாப்பு, தொழில் மற்றும் அதோடு சம்பந்தப்பட்ட கோழி வளர்ப்போர்களும்/விவசாயிகளும்  மிகவும் நலிவடைந்து  மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டு அவர்தம் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்நோய் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு சுவாச குழாய் மூலம் தும்மல், சளி போன்றவற்றில் வெளிவரும் நீர்த்துளிகள் மற்றும் இவைகள் படர்ந்துள்ள பொருட்களை தொடுவதாலும் மட்டுமே பெரும்பாலும் பரவுகிறது.

முட்டை மற்றும் கோழி இறைச்சியானது மிகவும் மலிவான புரத உணவாகும்.  மேலும் அவை மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்து காரணியாக அமைந்துள்ளது.  தந்போதைய சூழல் மனிதனுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவையான காலகட்டமாகும்.  

எனவே, பொதுமக்கள் கோழி முட்டை, இறைச்சி உண்பதன் மூலம் Misleading message பரவியதாக எவ்வித நிகழ்வுகளும் இதுவரை நடைபெறவில்லை. இது குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தயக்கமில்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியினை உட்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.