கர்ணன் படத்தில் கண்ணதாசன் - 2

பதிவு செய்த நாள் : 31 மார்ச் 2020

கர்ணன் 1964ம் வருடம் வந்த படம். இந்த படத்தில் மொத்தம் பன்னிரெண்டு  பாடல்கள். இது போன்ற படங்களுக்கு எழுதுவது என்பது எந்த கவிஞருக்கும் ஒரு சவாலான விஷயம் தான். படத்தின் டைட்டில் போடும்போதே, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தன் ரதத்தில் ஏறிப் போகிற மாதிரி அந்த டைட்டில் துவங்கும். அப்போதே டி.எம்.எஸ். குரல் ஒலிக்கத் துவங்கும். அங்கேயே கர்ணனின் கதாபாத்திரத்தைப் பற்றிய நான்கு வரிகள்.

 மன்னவர் பொருட்களை கை கொண்டு நீட்டுவார்

மற்றவர் பணிந்து கொள்வார்.

மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான்

 மற்றவர் எடுத்துக் கொள்வார்

 அப்போதே கர்ணனின் கொடைத்தன்மையை விளக்கிவிடுவார்.

 இப்போது வில் வித்தை போட்டி நடக்கும். அங்கே பெற்றோர் பெயர் தெரியாத கர்ணன் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று அவமானப் படுத்தப்பட்டவுடன், உடனே துரியோதனன் அவனை தன் நாட்டிற்குட்பட்ட அங்கதேசத்து மன்னனாக்கிவிடுவான்.  இப்போது தன் புதிய நண்பனை தன் அரண்மனைக்கு அழைத்து வரும்போது துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல்தான்

 என்னுயிர்த்தோழி கேளடி கேளடி தோழி

 இதுதானோ உங்கள் மன்னவன் நீதி என்று பாடுவாள்.

 வழக்கமாக கர்ணம் படப்பாடல்களை தொலைக்காட்சிகளிலோ, வானொலியிலோ ஒளி, ஒலி பரப்பினால்  ` உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா’ ` மகாராஜன் உலகை ஆளுவான், அந்த மகாராணி அவனை ஆளுவாள்’

` இரவும் நிலவும் வளரட்டுமே’ இன்னும் சிலருக்கு ரசனையிருக்கும்போது ` கண்ணுக்கு குலமேது பாடல்’ வெளிவரும்.

 கண்ணுக்கு குலமேது பாடலை வானொலியில், தொலைக்காட்சிகளில் பார்க்கும்போது அந்தக் காட்சியின் பின்னனியோடு அந்தப் பாட்டின் வரிகளைக் கேட்டால்தான் கவிஞர் சொல்ல வருகிற காட்சியின் ஆழம் புரியும்.

 கர்ணனை அவன் மாமனார் அவமானப்படுத்தி அனுப்பிவிடுவார். குலமில்லாதவன் என்று சொல்லிவிடுவார்.

 சோகத்தோடு வரும் அவனுக்கு மனைவு சுபாங்கி ஆறுதல் சொல்வாள்

கண்ணுக்கு குலமேது ! கண்ணா கருணைக்கு இனமேது ?

 விண்ணுக்குள் பிரிவேது !கண்ணா விளக்குக்கு இருளேது ?

 இதைவிட ஒரு ஆறுதல் பாட்டு கர்ணனுக்கு மட்டுமல்ல. ஜாதி குலம் பார்ப்பவர்கள் அனைவருக்கும் இந்தப் பாடல் பொருந்தும்.

மனித கண்களுக்கு குலமிருக்கிறதா ?

இனம் பார்த்தா கருணை பிறக்கும்

இதைவிட ஜாதி இன வேறுபாடுகளை அலட்சியப் படுத்த வேறு பாட்டு வேண்டுமா என்ன?

 கர்ணனின் கொடைத் தன்மையை அழகாக விளக்கியிருப்பார் கவிஞர்.

 இந்த பாடலை கர்ணன் அரசவையில் புலவர் பாடுவதாக அமைந்த பாடல்

 சீர்காழியும், திருச்சி லோகநாதனும் பாடியிருப்பார்கள்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்

வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்

பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்

பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் இந்த நான்கு வரிகளை சீர்காழி பாடியிருப்பார்.

 இந்தப் பாடலை கேட்டுத்தான் நகரவாசிகளுக்கு மழை, வயல், பசு வழங்கும் கொடையின் காலங்களே புரிந்தது.

அடுத்த புலவர் பாடுவார், இது திருச்சி லோகநாதன் குரலில் வரும்.

 நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்

 நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்

நற்பொருளை தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்

தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே!

அடுத்து இந்திரன் கர்ணனனிடம் இருக்கும் காது குண்டலத்தையும் மார்போடு ஒட்டிய கவசத்தையும் தானமாக கேட்க மாறு வேடத்தில் வருவான்

என்ன கொடுப்பான், எவை கொடுப்பான்

என்றிவர்கள் எண்ணுமுன்னே

பொன்னும் கொடுப்பான், பொருளும் கொடுப்பான்

போதாது போதாதென்றால்

இன்னும் கொடுப்பான்

இவையும் குறைவென்றால்

தன்னைக் கொடுப்பான், தன்னுயிரும் தான் கொடுப்பான்

 தயாநிதியே

 ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை இதை விட எளிமையாக பாமரர்களும் புரிந்து கொள்ளும்படியாக சொல்ல முடியுமா என்ன ?

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா  இந்த பாடல் எல்லோருக்கும் தெரியும் !

 ஆனால் பாரதப் போரில் இறுதிக் கட்டம் அருச்சுனன் போரிடத் தயங்குவான்.

 அப்போது பகவத் கீதையே பிறந்தது

கீதை என்பது ஒன்பது அத்தியாயங்கள் கொண்டது. அதன் சாரத்தை கண்ணதாசன் சில வரிகளின் சாறாக பிழிந்து கொடுத்திருப்பார்

 மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா

 மரணத்தின் தன்மை சொல்வேன்

 மானிட ஆத்மா மரணமெய்தாது

 மறுபடி பிறந்திருக்கும்

 கண்ணதாசன் கற்பனை ஊற்று இப்படி சுரந்தது என்றால் அவர் நமது தமிழ் இலக்கியங்களில், புராணங்களில் ஊறித் திளைத்திருப்பார்.

                                          (மீண்டும் சந்திப்போம்)