சென்செக்ஸ், நிப்டி இன்று கடும் சரிவு

பதிவு செய்த நாள் : 30 மார்ச் 2020 17:21

மும்பை:

கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதார தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் சென்செக்ஸ் 1,375 புள்ளிகள் வரை சரிந்தன. நிப்டி 379 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிலைபெற்றது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இது உலக பங்குச்சந்தைகளில் தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய பங்குச்சந்தைகளிலும் இதன் தாக்கம் எதிரொலித்தது. மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகத்தின்போது குறியீட்டெண் சென்செக்ஸ் 1100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 1,375.27 புள்ளிகள் சரிந்து 28,440.32 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 379.15 புள்ளிகள் சரிந்து 8281.10 புள்ளிகளில் வர்த்தகம் நிலைபெற்றது.

மும்பை பங்குச்சந்தையில் அதிக சரிவை சந்தித்த நிறுவனங்களில் பஜாஜ் பைனான்ஸ் முதலிடத்தில் உள்ளது. அந்த நிறுவன பங்குகள் 12 சதவீதம் அளவிற்கு சரிந்தன. இதேபோல் எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் கோட்டக் வங்கி  7 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்தன.