வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் இந்த நாட்களில் நமக்கு ஆறுதல் அளிப்பது பாடல்கள் தான். தனியாக நம்மை சுயபரிசோதனை செய்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் நம்மோடு பாடல் வழியாக பயணித்துக்கொண்டிருப்பவர் கண்ணதாசன்.
தான் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 37 ஆண்டுகள் திரைத்துறையில் கழித்தவர் கண்ணதாசன். தன் 15வது வயதில் கவிதை எழுதத் தொடங்கினார்.
கண்ணதாசன் வாழ்க்கையைச் சொன்னார்.
வாழ்வியல் முறையைச் சொன்னார்,
திரைப்பாடல்கள் வழியாக பல இலக்கிய வரிகளை தமிழனின் காதுகளில் செலுத்தினார்.
ஆன்மீகத்தில் சிகரத்தை தொட்டார்.
சமூக, அரசியல் போலிகளை தோலுரித்துக் காட்டினார். இதிகாசங்களை பாடல் மூலமாக பாமரனும் புரிந்து கொள்ளச் செய்தார்.
ஒரு பெண் கருவுறும்போது, அவளுக்கு வளைகாப்பு நடக்கும். அதே சமயம் அந்த கர்ப்பிணிப்பெண்ணின் நடை, உடைகளில் பல மாறுதல்கள் வரும்.
கர்ணன் படத்தில் கர்ணன் மனைவி சுபாங்கி கர்ப்பிணியாக இருப்பாள். அவளை அவள் தந்தை ஏற்றுக்கொள்ளமாட்டார். அதனால் துரியோதனன் மனைவி பானுமதி அவளுக்கு வளைகாப்பு நடத்துவாள்.
ஒரு பெண்ணால் கூட ஒரு பெண்ணின் இயல்புகளை கண்ணதாசனைப் போல் புரிந்து கொண்டிருக்க முடியுமா ? என்பது சந்தேகம் தான்.
அந்தப் பாடல் என்ன ?
சரி வாருங்கள் அந்தப் பாட்டை பார்ப்போம்
பெண் கருவுற்றவுடன் என்னவாகும் ?
பாடலை கவனியுங்கள்
மஞ்சள் முகம் நிறம் மாறி
மங்கை உடல் உருமாறி
கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே
அஞ்சி அஞ்சி நடந்தாள் அந்நாளிலே – இவள்
அந்த நடை தளர்ந்தாள் இந்நாளிலே
துள்ளி வந்த மான் இன்று சேய் கொண்டதே
மலர்கள் சூட்டி மஞ்சள் கூட்டி
வளையல் பூட்டி திலகம் தீட்டி
மாதின்று வாழ்கவென்று
வாழ்த்துப் பாடுவோம்.
ஆஹா! பாடல் வரிகளை பாருங்கள்.
அவள் கருவுற்றவுடன் அவள் உருவத்தின் நிறம் மாறுகிறதாம்.
உடலின் உருமாறுகிறதாம்.
அதற்கு முன் அதே பெண் நாணத்தினால் அஞ்சி அஞ்சி நடந்தாளாம்.
ஆனால் இப்போது அந்த நடை கூட தளர்ந்து விட்டதாம். மான் போல் துள்ளி விளையாடிய அந்தப் பெண் இப்போது வயிற்றில் இன்னொரு உயிரையும் சுமப்பதால் ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறாளாம்.
ஒரு பெண்ணின் இயல்பை இதை விட சிறப்பாக யார் சொல்ல முடியும்?
சரி! அவள் கருவுற காரணமாக இருந்தவர் அவள் கணவன் கர்ணன். அவன் பெருமையை பேச வேண்டாமா? இந்த வளைகாப்பு நேரத்தில்! அதை எப்படி சொல்லுகிறார் கவிஞர்?
கர்ணன் படத்தில் இறுதியில் கர்ணன் இறந்த பிறகு தருமதேவதை கண்ணனைப் பார்த்து கேட்பாள் ` கண்ணா எனக்கென்று உலகத்தில் ஒரே பிள்ளை இருந்தான் அவனையும் நீயும் கொண்டு போய்விட்டாயே ?’ என்று அலறுவாள்.
அப்படிப்பட்ட கர்ணனுக்கு பிறக்கும் பிள்ளை எப்படி இருப்பான் என்று அவன் மனைவி வளைகாப்பில் பாடவேண்டாமா ?
அதையும் கண்ணதாசன் விட்டுவைக்கவில்லை.
கர்ணன் தந்த பிள்ளையென்றால் கார்மேகம் அல்லவா ?
எதிர்காலத்தில் இந்த தேசத்தில்
அவன் கருணை செய்வான் அல்லவா?
என்ன அற்புதம். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பது போல கர்ணனின் பிள்ளை கூட கருணையோடு கொடைத்தன்மையொடு தான் பிறப்பானாம். கர்ணன் பிள்ளை என்பவன் கார்மேகமாம்.
இந்தப் பாட்டின் பெருமையை எந்த ஊடகங்களும் இப்போது அதிகம் உணர்ந்ததாகவோ, அந்த பாடலின் அருமையை புரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை.
கவிஞர் கண்ணதாசன் பல்லாயிரம் பாடல்களை எழுதியிருக்கலாம். ஒரு சமூகப் படத்திற்கு பாடல் எழுதுவது என்பது வேறு; புராண இதிகாச படங்களுக்கு பாடல் எழுதுவது என்பது வேறு.
இதிகாச, புராண படங்கள் கவிஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சவால் தான்.
விஸ்வநாதன் ராமமூர்த்தியோடு பெங்களூர் உட்லாண்ட்ஸ் ஒட்டலில் ஒரே நாளில் கர்ணன் படத்தின் அத்தனை பாடல்களையும் கவிஞர் எழுதி முடித்தார்.
கண்ணதாசன் கற்பனையின் உச்சகட்டம் என்பது என் கணிப்பு.
கண்ணதாசனின் திரையிசைப் பாடல்களின் பெருமைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால் கர்ணன் படத்திலிருந்து கொஞ்சம் அலசி விட்டுத்தான் மேலே செல்ல வேண்டும்.
மீண்டும் கண்ணதாசன் பாடல்களோடு தங்களை சந்திக்கிறேன்.