கோவிட்-19 வைரஸ் பொருளாதாரப் பாதிப்பால் ஜெர்மன் மாநில நிதியமைச்சர் தற்கொலை

பதிவு செய்த நாள் : 30 மார்ச் 2020 00:05

கோவிட்-19 வைரஸ் பொருளாதாரப் பாதிப்பால் ஜெர்மன் மாநில நிதியமைச்சர் தற்கொலை

ஃபிராங்பர்ட்

ஜெர்மன் கூட்டுக் குடியரசின் மாநிலமான ஹெஸ்ஸென் நிதி அமைச்சராக இருந்த தாமஸ் சாஃபர் கோவிட்-19 வைரஸ் தாக்குதலில் இருந்து ஜெர்மனியை மீட்பது எப்படி என்ற கவலை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

தாமஸ் சாஃபர் உடல் வியெஸ்பாடென் என்ற நகரில் இருப்புப்பாதை அருகே கிடந்ததை மார்ச் 29ந்தேதி போலீசார் கண்டு பிடித்தனர்.

 தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறுதியில் தாமஸ் தற்கொலை செய்து கொண்டதாக வியெஸ்பாடென் நகர போலீசார் தெரிவித்தனர்.

ஹெஸ்ஸென் மாநிலத்தில் 10 ஆண்டுகளாக நிதியமைச்சராக இருந்தவர் தாமஸ் சாஃபர். ஹெஸ்ஸென் மாநிலத்தின் பிரதமராக வரும் 2023 ஆம் ஆண்டில் தாமஸ் சாஃபர் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஹெஸ்ஸென் மாநிலம் ஜெர்மனியின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. ஜெர்மனியின் பொருளாதார தலைநகரமாக கருதப்படும் ஃபிராங்பர்ட் நகரம் ஹெஸ்ஸென் மாநிலத்தில் தான் உள்ளது. ஜெர்மனியின் பிரபலமான வங்கியான டாய்ச் இந்த மாநிலத்தில் தான் உள்ளது. அதனால் ஜெர்மனியின்

பொருளாதாரம் கோவிட்-19 வைரஸ் காரணமாக எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தாமஸ் நன்கு உணர்ந்திருந்தார்.

ஜெர்மனியின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இந்த விஷயங்கள் காரணமாக பெரிதும் கவலையுடன் தாமஸ் இருந்தார். இந்நிலையில் அவர் மார்ச் மாதம் 29ம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. அவரது மரணம் குறித்து ஹெஸ்ஸென் மாநில பிரதமர் ஹோல்கர் பூஃபியர் அதிர்ச்சி தெரிவித்தார். தாமஸ் மரணம் எங்களால் எண்ணிப் பார்க்க முடியாத ஒன்று. எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது என ஹோல்கர் குறிப்பிட்டார்.

மார்ச் 29ஆம் தேதி நிலவரப்படி ஜெர்மனியில் கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 50 966 ஆகும். ஜெர்மனியில் கோவிட்-19 வைரஸ் காரணமாக இறந்தவர் எண்ணிக்கை 482.