உயரமான கட்டடங்களில் ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி தெளிப்பு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 19:24

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் குடிசைப் பகுதிகள், அடுக்குமாடி கட்டடங்களில் ராட்சத ஸ்கை லிப்ட் ஏணிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினரும் நேற்று முதல் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளை தொடங்கினர்.

சென்னை மெரீனாவை அடுத்துள்ள நொச்சிக்குப்பம் பகுதியில் குடிசை மாற்றுவாரிய கட்டடங்கள் ஏராளமாக உள்ளன. அங்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு, இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டனர். நொச்சிக்குப்பம், சீனிவாசபுரம், பட்டினப்பாக்கம் குடிசை மாற்றுவாரியத்தில் உள்ள 4 அடுக்குமாடிகளின் மேல் பகுதிகளில் பகுதியில் உயரமான ஏணிகளைப் பயன்படுத்தி கிருமிநாசினியை தெளித்தனர். சுமார் 54 மீட்டர் உயரமுள்ள ஸ்கைலிப்ட் ஏணிகள் இதற்குப் பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறிய விவரம்:

‘‘தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் 7,500 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுவாக பிரிந்து மாவட்டந்தோறும் கலெக்டர்கள் மேற்பார்வையில் கரோனா விழிப்புணர்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 271 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 60 மினி வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் முகக்கவசம் வழங்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்புக்காக தீயணைப்பு வீரர்கள் மூலம் சுமார் ஆயிரக்கும் மேற்பட்ட துணியால் ஆன முகக்கவசங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
 சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளுக்கும்,

பொதுமக்களுக்கும் தீயணைப்புத்துறையினரால் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் வழங்கப்பட்டு வருகிறது.

மனிதர்களால் ஏறிச்செல்ல முடியாத உயரமான கட்டடங்களில் ஸ்கைப் லிப்ட் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சென்னை தவிர கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஸ்கைலிப்ட் ஏணி உள்ளது. தண்ணீரை துகள்களாக பிரித்து அடிக்க கூடிய வாகனங்கள் தீயணைப்பு துறையிடம் இருக்கிறது. அதனை வைத்து கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சிறிய குடியிருப்பு பகுதிகளில் மினி வாகனங்கள் மூலமாக தெளித்து வருகிறோம். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தீயணைப்பு துறையினர் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி கோயம்பேடு பஸ் நிலையம், காய்கறி அங்காடி ஆகிய இடங்களில் கை கழுவுவதன் மூலம் கரானோ நோயை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பற்றி தீயணைப்புப்படையினர் தனித்தனி குழுவாக பிரிந்து நடனம் மற்றும் செயல்முறை மூலம் விழிப்புணர்வு அளித்து வருகின்றனர்’’

இவ்வாறு, டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.