மக்களுக்கு முகக்கவசம் வழங்குங்கள்: திமுக எம்.எல்.ஏக்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 17:25

சென்னை

கரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பொது மக்களுக்கு முகக்கவசம், சோப்பு உள்ளிட்டவற்றை வழங்கி சேவை செய்யுமாறு திமுக எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தையும் இந்த உயிர்க்கொல்லி வைரஸ் மிரட்டிக்கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் வெளியே கூடுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் முகக்கவசங்கள் அணியவும், சோப்பு போட்டு கை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மக்கள் கொரோனா வைரஸை எதிர்க்க போதிய நடவடிக்கைகளை திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அந்த அறிவுத்தலின்படி, சென்னை சைதாப்பேட்டை எம்.எல்.ஏ மா. சுப்ரமணியம் அரசு பொது மருத்துவமனைக்கு 1000 முகக்கவசங்களையும் கை கழுவ பயன்படும் 250 சானிடரிகளை வழங்கினார். அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவை குறிப்பிட்டு ட்விட் செய்துள்ள மு.க. ஸ்டாலின்,

துயரம் சூழ்ந்த இச்சூழலில் மக்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் முகக் கவசம், சேனிட்டைசர், சோப்பு ஆகியவற்றைத் திரட்டி வழங்கும் சேவையை திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் செய்ய வேண்டும். கரோனா வைரஸ் தாண்டவமாடும் நேரத்தில் கைகொடுக்கும் தோழர்களாய் நாம் செயல்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.