கோவிட்-19 வைரஸ் தாக்குதலிலிருந்து ஏழை நாடுகளை காக்க 200 கோடி டாலர் நிதி: ஐநா தலைவர் அழைப்பு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 13:51

ஐ.நா. சபை

கோவிட்-19 வைரஸ் தாக்குதலில் இருந்து ஏழை நாடுகளை காப்பாற்ற 200 கோடி டாலர் நிதி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஐநா சபைபொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ் இன்று ஆன்லைன் நிருபர்கள் கூட்டமொன்றில் அழைப்புவிடுத்தார்.

இந்த நிதிக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் எனவும் அன்டோனியோ கட்டரெஸ் கேட்டுக்கொண்டார்.

கோவிட்- 19 வைரஸ் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் உருவாகி வளர்ந்துள்ளது .

மனித குலம் ஒன்றாக இணைந்து இந்த வைரஸை எதிர்த்து போராட வேண்டும். ஒரு நாடு மட்டும் மேற்கொள்ளும் முயற்சிகள் போதுமானதாக அமையாது. உலகில் உள்ள மிகவும் பலவீனமான நாட்டின் சுகாதார சேவை அமைப்பு எவ்வளவு வலுவுடன் இருக்கிறதோ அதுதான் உலக சுகாதார வலிமையாகும். இப்பொழுது நீங்கள் இணைந்து தீர்மானமாக செயல்படாவிட்டால் உலகில் உள்ள ஏழை எளிய நாடுகளில் ஏதாவது ஒரு மூலையில் இந்த வைரஸ் தங்கியிருக்கும் .அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வரும் என ஐநா பொதுச்செயலாளர் கூறினார்.

இந்த 200 கோடி டாலர் நிதியின் முக்கிய நோக்கங்கள் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுத்தல். மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகியிருக்க உதவுதல். கைகளை சுத்தம் செய்தல். ரத்தப்பரிசோதனைக்கு உதவுதல். வைரஸ் தாக்குதலுக்கு எளிதாக பலியாகக் கூடிய நலிந்த பிரிவினருக்கு சிகிச்சை அளிக்க உதவுதல். ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படும்.

40 நாடுகள் நலிந்த நிலையில் உள்ளன. அவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.

எங்களுடைய அழைப்பை ஏற்று உடனடியாக செயல்படுங்கள் என்பதுதான் எங்களது வேண்டுகோள் ஆகும் என உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் மெட்ராஸ் கேட்டுக்கொண்டார்.

 ஐநா. பொதுச்செயலாளர் அறிவித்துள்ள நிதி திட்டத்துக்கு எல்லா நாடுகளும் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆதரவு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். 

நாம் மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டும் .வைரஸ் பரவும் வேகத்தை குறைக்க வேண்டும். இன்று கோவிட் வைரஸ் தாக்குதலில் இருந்து நாம் எவ்வாறு தற்காத்துக் கொண்டோம் என்பதை சரித்திரம் கண்காணித்து நம்முடைய பணிகள் குறித்து தீர்ப்பு வழங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது .ஏழை சமூகங்களின் வாழ்க்கையில் என்று ஒரு கருப்பு தினமாக விளங்குகிறது என உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் கூறினார்.

 ஐநா மனிதாபிமான அலுவலகத்தில் இருந்து ஐநா பொதுச்செயலாளர் அறிவித்த 200 கோடி டாலர் நிதிக்கு உதவியாக  6 கோடி டாலர் நிதி  வழங்குவதாக அந்த அமைப்பின் தலைவர் மார்க் லோகாக் அறிவித்தார்.

ஏற்கனவே இந்த அமைப்பு 1.5 கோடி டாலர் வழங்கி உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். உலக நாடுகள் எல்லாம் பொருளாதார மீட்புக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளன. அந்த திட்டங்களும் இந்த வைரஸை எதிர்த்துப் போராட உதவும் என்று லோ காக் நம்பிக்கை தெரிவித்தார்.