அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் கோவிட்-19 நிவாரண பணிகளுக்கு 2.2 லட்சம் டாலர் ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 13:46

வாஷிங்டன்

அமெரிக்க பொருளாதாரம் மற்றும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு நிவாரண பணிகளுக்கும் 2.2 லட்சம் கோடி டாலர் தொகை கொண்ட மீட்புநிவாரண  திட்டத்திற்கு அமெரிக்க செனட் சபை புதனன்று ஒப்புதல் அளித்தது .இந்த திட்டத்திற்கு வரும் வெள்ளிக் கிழமையன்று அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு இருக்காது என்று எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி எம்பிக்கள் தெரிவித்தனர்.

செனட் சபையில் மீட்பு நிவாரண நிதிக்காக மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

மீட்பு நிவாரண நிதி மசோதா 880 பக்கங்களைக் கொண்டதாகும். இவ்வளவு பெரிய ஆவணம் மீட்பு நிவாரணப் பணிகளுக்கு என அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது இல்லை என்று செனட் சபையில் பெரும்பான்மை கட்சியாக விளங்கும் குடியரசு கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கோனல் கூறினார்.

கோவிட்-19 வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவின் சுகாதார அமைப்பு முறை தயாராக இல்லை .அமெரிக்கத் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தெருவில் நிற்கிறார்கள் .வர்த்தக நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாமல் மூடிக் கிடக்கின்றன .தொழிற்சாலைகள் எல்லாம் இயங்காமல் ஓய்ந்து போய்க் கிடக்கின்றன. அமெரிக்கப் பொருளாதாரம் இயங்க முடியாமல் தரைதட்டி நிற்கும் கப்பலாக உள்ளது என்று ஜனநாயக கட்சி தலைவர் சுக் ஸ்கியூமெர் கூறினார்.

அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த நிவாரண மசோதா உதவும் அமெரிக்க மக்களை நாளும் கொன்று குவித்துக் கொண்டுள்ள கோவிட்- 19 வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றும் என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்டீவன் முனுசின் கூறினார்.

இந்த நிவாரண தொகை 3 மாத காலத்திற்கு போதுமானதாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது .செனட் சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிவாரண மசோதா ஒட்டுமொத்தமாக அமெரிக்க வரவு செலவு திட்டத்தில் கிட்டத்தட்ட 50 சதவீத அளவுக்கு- 2.2 லட்சம் கோடி டாலர் செலவிட வகை செய்கிறது என ஸ்டீவன் தெரிவித்தார்.

நிவாரண மசோதா நிறைவேற்றப்பட்டதும் அமெரிக்க பொருளாதாரம் ராக்கெட் போல விண்ணில் பறந்து மேலோங்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா அமெரிக்க மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் பெரும் பகுதி உதவும் என்று நம்புவதாக பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பெல்லோஸி கூறினார்.

நிவாரண மசோதா திட்டப்படி செலவிடப்படும் தொகை விவரம்:

அமெரிக்க குடிமக்கள் அனைவருக்கும் தலா 1200 டாலர் 2 தவணைகளில் வழங்கப்படும் .

இதற்கென 500 பில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (1 பில்லியன் என்பது 100 கோடி டாலர் ஆகும்.)

2 குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்துக்கு இந்த 1200 டாலர் போதாது. அதனால் இந்த தொகை 3,000 டாலர் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு 500 பில்லியன் டாலர் நாணயப் புழக்க உதவியாக வழங்கப்படுகிறது ,

அமெரிக்காவிலுள்ள விமானக் கம்பெனிகளுக்கும் இந்த நிவாரணத் தொகை கிடைக்கும்.

வேலை இல்லாமல் அவதிப்படும் அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு 600 டாலர் காப்பீட்டு நிதியாக வழங்கப்படும் லேஆப்பில் விடுவிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 4 மாத காலத்துக்கு வேலையின்மை நிவாரண நிதி வழங்கப்படும்.

சுயமாக தொழில் செய்வோருக்கும் இந்த நிதியிலிருந்து பயன்கள் கிடைக்கும் .சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 350 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது .

மருத்துவமனை மற்றும் சுகாதார சேவை அமைப்புகளை மேம்படுத்த 100 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது ,மாநில .உள்ளாட்சி. அமெரிக்க பழங்குடியினர் நிர்வாகங்களுக்கு உதவுவதற்காக 150 பில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது .

கல்விக்கு 30 பில்லியன் டாலர் .மற்றும் விரைவான போக்குவரத்து அமைப்பு முறைகளை மேம்படுத்த 25 பில்லியன் டாலரும் ஒதுக்கப்பட்டுள்ளது .

உள்ளாட்சி அமைப்புகளுக்கும் லாப நோக்கில் செயல்படாத சேவை அமைப்புகளுக்கும் பேரிடர் நிவாரண நிதியாக 30 பில்லியன் டாலர் ஒதுக்கப்படுகிறது எனவும் அமெரிக்க ஜனநாயக கட்சி தலைவர் சுக் ஸ்கியூமெர் தெரிவித்தார்.