முழுஅடைப்பால் வேலை இழந்த ஏழைகள், தொழிலாளர்களுக்கு உதவ ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு: நிதிஅமைச்சர் பேட்டி

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 13:40

புதுடில்லி

 முழு அடைப்பினால் வேலை வாய்ப்புகளை இழந்த ஏழைகள், கூலித் தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முழு அடைப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முழு அடைப்பு உத்தரவினால் ஏழைகள் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது.

கிராமப் புறங்களில் உள்ள ஆதரவற்றவர்களும் விதவைப் பெண்களும் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை காப்புறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்யமுடியவில்லை. இவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் நிவாரணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யாரும் பசியால் வாட அரசு அனுமதிக்காது என டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அவருடன் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகுரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

பேட்டி விவரம்:

ஏழைகள் தொழிலாளர்களுக்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ் சிகிச்சை மற்றும் முன்னெச்சரிக்கைப் பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு 50 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு செய்யப்படும்.,

இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 80 கோடி மக்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.

விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், விதவைகளுக்கு நேரடியாக பண உதவி செய்யப்படும். அந்தந்த மாநில அரசுகள் அத் தொழிலாள்ர்களுக்கான நலநிதியிலிருந்து உதவிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. அத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதத்தில் ரூ2000  உடனடியாக விவசாயிகள் வங்கிக கணக்கில் போடப்படும். சுமார் 8.7 கோடி விவசாயிகள் பலனடைவார்கள்.

சுமார் 3 கோடி மூத்தகுடிமக்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய் வழங்கப்படும்.

வங்கிகளில் ஜன்தன் கணக்குகள் வைத்திருக்கும் 20 கோடி பெண்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்படும்.

உஜ்வலா திட்டத்தில் கேஸ் சிலிண்டர் பெற்ற 8 கோடி  பெண்களுக்கு 3 மாதங்களுக்கு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் உத்தரவாதமில்லாத கடன் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.

ரூ.15 ஆயிரத்துக்கு குறைவாக சம்பளம் பெறுகிற 100 தொழிலாளர்களுக்கு குறைவாக உள்ள கம்பெனிகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் தலா 12 சதவீத இபிஎஃப் தொகையை மத்திய அரசு அடுத்த 3 மாதங்களுக்கு செலுத்தும்.

தொழிலாளர்கள் பிஎஃப் பணத்தில் 75 சதவீதம் அல்லது 3 மாத ஊதியம், இவற்றில் எது குறைவோ அதை பெற்றுக் கொள்ளலாம். அந்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை.

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்த்தப்படும்.

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இணையமைச்சர் அனுராக் தாகுரும் பேட்டியளித்தனர்.