இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 11:58

புதுடெல்லி

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தயாரிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டு பணிகளும் ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று துவங்கி செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி முடிக்கப்பட வேண்டும் என ஏற்கனவே மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது ஆனால் இப்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் முழு அடைப்பு காரணமாக அந்த இரண்டு பணிகளையும் துவக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது அதனால் அந்த இரண்டு பணிகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் முழு அடைப்பு காரணமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிக்காக அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று விவரங்களை கேட்டு பதிவு செய்துகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது அதனால் இப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை துவக்க கூடாது என கேரளம், மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மாநிலங்கள் தங்கள் சட்டமன்றத்திலும் எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

ஆனால் இந்த மாநிலங்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.