கோவை மாவட்டத்தில் 50000 எம்எஸ்எம்இ தொழில்நிறுவனங்களை மூட முடிவு

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 11:51

கோயம்புத்தூர்

கோவிட்-19 வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள கோவை மாவட்ட சிறு தொழில் குறுந்தொழில் நடுத்தர தொழில்நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட முடிவு செய்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 14 குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில்களின் சங்கப் பிரதிநிதிகள் கோவை ஆட்சி தலைவர்  கே. ராஜாமணியை சந்தித்து மார்ச் 31ம் தேதி வரை எம்எஸ் எம்இ தொழிற்சாலைகளை மூடிவைக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்தனர்.

இந்த முடிவின்படி கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 50,000 தொழிற்சாலைகள் மூடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டஆட்சியர் ராஜா மணியை கோவை மாவட்ட குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவன சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்த பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் முழு அடைப்பு அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் விலகி இருப்பது ஒன்றுதான் வழி எனவும் குறிப்பிட்டார்.

 அதனால் கோவை மாவட்டத்தில் உள்ள 14 சங்கங்களும் தங்கள் தொழிற்சாலைகளை மூடி வைத்திருக்கும் காலத்தை நீடிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

எம்எஸ்எம்இ தொழிற்சாலைகள் மூடப்பட்ட காலத்திற்கு தங்கள் தொழிற்சாலைககளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய தேவைகளை வழங்கவும் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் கிட்டத்தட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என சங்கத்தின் கோவை மாவட்ட கிளை தலைவர் ஜே.ஜேம்ஸ் தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்கு தேவையான உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது நமது கடமையாகும் .அந்த பணியை டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட கிளை நிறைவேற்றும். வடகிழக்கு மாநில தொழிலாளர்களுக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம் என ஜேம்ஸ் கூறினார்.

 கோவை மாவட்டத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகள் தங்கள் தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதாக கூறி உள்ளன. ஆனால் ஏற்கனவே கடுமையான பாதிப்பில் சிக்கியுள்ள குறுந்தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சம் அரைச்சம்பள மாவது வழங்குவோம் என உறுதியளித்துள்ளன.

மத்திய அரசு உதவ கோரிக்கை

தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள காலத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக மத்திய அரசு எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு மானிய தொகை வழங்க வேண்டும்.

குறுந்தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பிஎஃப் சந்தா தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் ஜேம்ஸ் கேட்டுக்கொண்டார்.

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு உள்ளாட்சி நிறுவனங்கள் சொத்து வரி, தண்ணீர் வரி, உரிமக் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவற்றை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட எம் எஸ் எம் இ சங்கங்கள் கோரியுள்ளன.

மின்சார வாரியம் சென்ற மாதம் தொழில்நிறுவனங்கள் செலுத்திய தொகையை இந்த மாதமும் செலுத்தும்படி கோரியுள்ளது. ஏனென்றால் தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்று அங்கு செலவிடப்பட்ட மின்சார அளவை பதிவு செய்து அதற்கேற்றவாறு பில் தயாரிக்க முழு அடைப்புக் காலத்தில் இயலாது என மின்சார வாரியம் குறிப்பிட்டுள்ளது

தொழில் நிறுவனங்கள் சிறு தொழில் நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சென்றமாதம் இயங்கிய அளவுக்கு இந்த மாதம் இயங்கவில்லை. கூடுதலான நாட்கள் மூடிக்கிடந்தன. அதனால் நாங்கள் பயன்படுத்திய அளவுக்கு  மட்டுமே கட்டணம் வசூலிப்பது பொருத்தமானதாக அமையும் என்று லகு உத்யோக் பாரதியின் மாநில துணைத்தலைவர் சுருளிவேல் கேட்டுக்கொண்டார் .

கடனை ஒத்திவைக்க வேண்டுகோள்

தொழில் துறையில் கடுமையான தேக்க நிலையும் முழுஅடைப்பு அமலில் உள்ள இந்த நேரத்தில் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வங்கிக் கடன் தவணைகளையும் நடைமுறை மூலதனக்கடனுக்கான மாதத் தவணைகளையும் செலுத்த முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. அதனால் ஓராண்டு காலத்துக்கு இந்த கடன் தவணைகளை செலுத்துவதிலிருந்து அவகாசம் வழங்க வேண்டும். இந்த ஓராண்டு காலத்திற்கு அபராத வட்டி, வட்டி முதலியன தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று எம் எஸ் எம் இ சங்கங்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் ஆர். ராமமூர்த்தி மாவட்ட ஆட்சியரிடம் எந்த நிலுவைத் தொகையையும் செலுத்தக் கூடிய நிலையில் குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இப்பொழுது இல்லை என்று தெரிவித்தார். இந்தத் தொழில் நிறுவனங்கள் எல்லாம் ஏற்கனவே கடுமையான தொழில் நெருக்கடியில் சிக்கி உள்ளன. இந்நிலையில் இப்பொழுது முழு அடைப்பும் சேர்த்துள்ளது. அதனால் இந்த தொழில் நிறுவனங்கள் எல்லாம் எந்த தவணைத் தொகையையும் செலுத்த இயலாத நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

 அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேனேஜருடன் தொடர்புகொண்டு கோவை மாவட்ட குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தர தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிக்கும் படி கேட்டுக் கொண்டார்.