கோவிட்-19 வைரஸ் பாதிப்பு காரணமாக தொழில் வளர்ச்சி பாதிப்பு ஓபிஎஸ் தகவல்

பதிவு செய்த நாள் : 26 மார்ச் 2020 10:12

சென்னை

கோவிட்-19 வைரஸ்  பாதிப்பு காரணமாக தமிழகத்தில் தொழில் துறை வளர்ச்சி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் செவ்வாயன்று தெரிவித்தார்

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளான செவ்வாய் கிழமை நிதித்துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்களுக்கு நிதியமைச்சர் என்ற வகையிலும் தமிழக துணை முதலமைச்சர் என்ற வகையிலும் ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசினார். அவரது உரை விவரம்:

சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி, ஆகிய இடங்களில் உள்ள முக்கியமான பெரிய தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன .

தமிழகத்தில் ஏற்றுமதி தொழில் நிறுவனங்களில் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை. பின்னலாடைத் துறை, இயந்திரங்கள் உற்பத்தித்துறை ஆகியவை கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

கோவிட்-19 வைரஸ்   பாதிப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருள் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் ஓடவில்லை, சாலையில் பொருள்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் செல்லவில்லை. இதன் காரணமாக பொருள் போக்குவரத்து தேக்கநிலையில் உள்ளது. 

உற்பத்தி ஏற்றுமதி விற்பனை ஆகிய மூன்றும் பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் தமிழகத்தில் பொருளாதாரத்திலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கோவிட்-19 வைரஸ்  பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை யாரும் முன்கூட்டியே ஊகித்து அறிய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

தமிழ்நாடு அரசைப் பொருத்தமட்டில் மக்கள் நலனுக்கான நலத்திட்டங்களை அமுல் செய்வதில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் மூலதனச் செலவுகளை மேற்கொள்ளவும் உறுதியாக செயல்பட்டு வருகிறது.

 கோவிட்-19 வைரஸ்  பாதிப்பை தடுத்து நிறுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி மாநில அரசின் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து பெறப்படும்.

தமிழ்நாட்டில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள சரிவிலிருந்து தொழில் வளர்ச்சியை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும். அதன்மூலம் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அரசு திட்டங்கள் அனைத்தையும் உறுதியாக அமல் செய்வோம்.

ஐஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு வரவேண்டிய பாக்கித் தொகை ரூபாய் 7517 கோடி இன்னும் வரவேண்டும்.

 பதினைந்தாவது நிதி கமிஷன் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகை சற்று கூடுதலாக அமைந்துள்ள போதிலும் பல பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படாத நிலை உள்ளது. அதனால் பதினைந்தாவது நிதி கமிஷனுக்கு தமிழக அரசு சார்பில் ஒரு புதிய கடிதம் தாக்கல் செய்யப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார் .

தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கல்வி பயிலவும் சுற்றுலாவுக்கும் சென்ற 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்திற்கு திரும்பவும் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்