கேரளத்தில் புதன்கிழமை முதல் முழு மதுவிலக்கு அமல், இலவச ரேஷன் அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 21:04

திருவனந்தபுரம்

பொருட்களை வாங்குவதற்காக மக்கள் வரிசைகளில் ஒருவர் பின் ஒருவராக காத்திருப்பது கோவிட்- 19 வைரஸ் பரவுவதை தடுக்க எந்த வகையிலும் உதவாது என கேரளா அரசு கருதுகிறது. மது குடிப்பதற்காக மக்கள் வரிசைகளில் நிற்பதை தடுப்பதற்காக முழு மதுவிலக்கை புதன் கிழமை முதல் அமல் செய்வதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.

கேரளா மாநிலம் முழுக்க முழு மதுவிலக்கை அமல் செய்வதாக அரசு புதன்கிழமை என்று அறிவித்த போதிலும் கேரள மாநில மதுபான கார்ப்பரேஷன் மூலமாக மது வகைகளை ஆன்லைனில் விற்பதற்கோ அல்லது மதுக்கடைகளில் வந்து தங்கள் வீடுகளுக்கு வாங்கிக் கொண்டு செல்வதற்கோ அனுமதிக்கலாமா என்றும் அரசு பரிசீலனை செய்வதாக கூறப்படுகிறது.

கேரள மாநில மதுக்கடைகளில் மது வகைகளை வாங்கி கொண்டு வீட்டுக்கு எடுத்துச் செல்வதை தற்பொழுது அனுமதிப்பதில்லை.

அகில இந்திய அளவில் தனிநபர் மதுபான பயன்பாடு கேரள மாநிலத்தில் தான் மிக அதிகம். கேரள மாநிலத்தில் 2018-19 ஆம் ஆண்டு கேரள அரசு மதுபான கார்ப்பரேஷன் வருமானம் ரூ 14504 கோடி. முந்திய ஆண்டை விட இந்தத் தொகை 1567 கோடி அதிகமாகும்.

கேரள மாநிலத்தில் 280 மதுபான விற்பனை நிலையங்களை கேரள மதுபான கார்ப்பரேஷன் நடத்திவருகிறது. கேரளத்தில் முழு மதுவிலக்கு அமல் செய்யப்பட்டால் கள்ளசாராயம் கேரளாவில் புகுந்துவிடும் என கேரள எக்சைஸ் இலாகா எச்சரித்துள்ளது.

மற்ற மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு வரும் சட்ட விரோத மதுபான வகைகளை தடுப்பதற்காக போதுமான எண்ணிக்கையில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் கேரள எக்சைஸ் இலாகா கோரியுள்ளது.

கேரள எதிர்க்கட்சியானகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இந்திய மருத்துவ சங்கமும் உடனடியாக கேரள மாநிலத்தில் முழு மது விலக்கை அமல் செய்ய வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தி உள்ளன.

கேரள மதுக்கடைகள் முன்னாள் நீண்ட வரிசைகளில் மக்கள் நிற்பது பொது சுகாதாரத்திற்கு பெரும் அபாயம் என்று கேரள் காவல்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுபான கடைகளின் முன்பு வரிசைகளில் நிற்போர் 1.5 மீட்டர் இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தி முயற்சிகள் செய்தது. ஆனால் அதனை அமல் செய்ய முடியவில்லை.

 இந்த நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஆற்றிய உரை கேரள அரசை உடனடி நடவடிக்கை தள்ளுவதாக அமைந்துள்ளது எனலாம்.

 மத்திய அரசு மதுபான வகைகளை அத்தியாவசிய சட்டத்தின்கீழ் சேர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத் தகுந்ததாகும்.

கேரள அரசு முழு மதுவிலக்கு அறிவித்திருப்பது ஒரு சோதனை முயற்சியாக கூட அமையலாம்

இலவச ரேஷன்

கேரள மாநிலத்தில் உள்ள எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்குவது என்று கேரள அரசு புதன்கிழமை முடிவு செய்துள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்கள் கூடுதலாக 35 கிலோ அரிசி இலவசமாக அடுத்தமாதம் பெறுவார்கள். மற்றவர்களுக்கு 15 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்- 19 வைரஸ் பாதிப்பு அறிகுறி காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அரிசி,உணவு எண்ணெய் பருப்பு வகைகள் மசாலா பொருட்கள் ஆகியவற்றை ஒரு மாத காலத்துக்கு போதுமான வகையில் வழங்க கேரள அரசு முடிவு செய்து உள்ளது.

அரசு அறிவித்துள்ள இலவச ரேஷன் பொருட்கள் எல்லா வீடுகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்யும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசு ஆணையிட்டுள்ளது