வாசனை தெரியவில்லையா? கோவிட்-19 வைரஸ் நோயாக இருக்கலாம்! பிரிட்டிஷ் மருத்துவர்கள் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 20:12

லண்டன்

திடீரென்று உங்களுக்கு வாசனை என்ன என்று கண்டுபிடிக்கும் திறன் இல்லாமல் போய்விட்டதா? உடனடியாக சிறப்பு மருத்துவர்களை அணுகி கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதிக்க ஏற்பாடு செய்துகொள்ளுங்கள் என்று பிரிட்டனின் ஈஎன்டி மருத்துவர்களின் தலைவர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸ் நோயாளிகளில் 40 சதவீதம் பேர் வாசனை கண்டறியும் திறனை இழந்து விடுகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

நிர்மல்குமார் தெரிவித்த இந்த தகவலை அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவர்களும் உறுதி செய்துள்ளனர் ஈரானில் உள்ள மருத்துவர்களும் இந்த தகவல் உண்மையானது தான் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள காய்ச்சல், இருமல், பலவீனம் ஆகிய அறிகுறிகளுடன் வாசனைத் திறனை இழப்பதையும் நோய்க்கான அறிகுறிகளாக சேர்க்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளனர்.

 திடீரென்று வாசனை கண்டறியும் திறன் இல்லாமல் போய்விடுகிறது தான் உங்களுக்கு காய்ச்சல் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே உங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் என பிரிட்டன் மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

சில கோவிட்-19 வைரஸ் நோயாளிகள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு நோயை பரப்பும் நிலையில் இருப்பார்கள். அவர்களைத் தனிமைப்படுத்துவது குறைந்தபட்சம் நோய் பரவுவதைக் குறைக்கப் பயன்படும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.