சென்னை அண்ணாசாலை கோவிட்-19 வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் வெள்ளி முதல் முதல் நோயாளிகள் அனுமதி

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 20:06

சென்னை

சென்னை ஓமந்தூரார் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கோவிட்-19 வைரஸ் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் இயங்கத் தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை முதல் அங்கு கோவிட்-19 வைரஸ் நோயாளிகள்  சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள் என தமிழ்நாடு சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

துவக்கத்தில் கோவிட்-19 வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் 220 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் நோயாளிகளுக்கு தயாராக இருக்கும். அதே நேரத்தில் மூச்சு விட சிரமப்படும் நோயாளிகளுக்கு 38 வெண்டிலேட்டர்களும் தயாராக இருக்கும் என அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கூறினார்.

சிறப்பு ஊதியம்

 கோவிட்-19 வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சிறப்பு மருத்துவ பிரிவு ஊழியர்கள், சுகாதார பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.

பயிற்சிக் காலம் நீடிப்பு

பயிற்சி மருத்துவர்களின் பயிற்சிக் காலம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்படுவதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கள் கல்வியின் ஒரு பகுதியாக ஒரு ஆண்டுகாலம் மருத்துவமனைகளில் மருத்துவ பிரிவில் கட்டாயம் பணிபுரிய வேண்டும். இந்த கட்டாய பயிற்சிப்பணி மார்ச் 28 ஆம் தேதியோடு நடப்பு மருத்துவர்கள் குழுவுக்கு முடிவடைகிறது. அவர்கள் மேலும் ஒரு மாத காலம் பணி புரிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது இன்றைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு மாத காலம் பணியாற்றும்படி மருத்துவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.