காபூல் நகர சீக்கிய தர்மசாலாவில் தற்கொலைப் படைத் தாக்குதல்; 25பேர் பலி.

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 19:51

காபூல்

பாகிஸ்தான் தலைநகரான காபூலில் சீக்கியர்களுக்கு சொந்தமான தர்மசாலா ஷோர் பஜார் பகுதியில் உள்ளது. இன்று காலை 7: 45 மணிக்கு அங்கு பிரார்த்தனை நடந்த பொழுது தற்கொலைப் படையினர்  தர்மசாலாவில் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கினார். இந்தத் தாக்குதலில் தர்மசாலாவில் இருந்த 25 பேரும் தற்கொலைப்படையைச் சேர்ந்த 4 பேரும் கொல்லப்பட்டனர்.

காயமடைந்த 8 பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

தர்மசாலாவில்  நடந்த தாக்குதலை எதிர்த்து காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள், அவர்களுடன் ஆப்கானிஸ்தான் அரசு போலிசும் ராணுவமும் சேர்ந்து தற்கொலை படையினர் மீது தாக்குதல் தொடுத்தனர்.

தற்கொலைப் படை வீரர்கள் 4 பேர் தர்மசாலா கட்டிடத்திற்குள் நுழைந்து அங்கு தங்கியிருந்த இந்துக்கள், சீக்கியர்களில் ஒரு பகுதியினரை பிணைக்கைதிகளாக பிடித்தனர். 6 மணி சண்டைக்குப் பின் ஆப்கானிஸ்தான்  ராணுவம் அவர்களை மீட்டது.

தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் தர்மசாலா கட்டடத்தில் இருந்த 25 பேர் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் பாதுகாப்பாக மேல் மாடிப் பகுதிக்கு சென்றுவிட்டனர் என்று ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தங்களுக்கும் இந்த தாக்குதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று தலிபான் அமைப்பினர் மறுப்பு வெளியிட்டுள்ளனர். ஆனால் இஸ்லாமிக் ஸ்டேட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி தாக்குதலைக கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார்.இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.

 காபூல் நகரில் உள்ள சீக்கிய தர்மசாலா மீது நடந்த வன்முறைத் தாக்குதலைஇந்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடுமையாக கண்டனம் செய்துள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த தாக்குதல் சம்பவம் ஒரு உதாரணம். சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள்  இந்தியாவின் அண்டை நாடுகளில் இன்னும் காக்கப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவங்கள் உறுதி செய்கின்றன என அமைச்சர்  ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.

காபூல் நகரில் ஷோர் பஜார் பகுதியில் ஏராளமான சீக்கியர்களும் இந்துக்களும் வசித்து வந்தனர் அடிக்கடி நடக்கும் சண்டைகள் காரணமாக அவர்கள் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்று விட்டனர். ஆனாலும் இன்னும் இப்பகுதியில் ஏராளமான இந்துக்களும் சீக்கியர்களும் வசித்து வருகிறார்கள்.