ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க தமிழ்நாடு மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 19:10

சென்னை

கரோனா வைரஸ் தாக்குதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு மக்கள் கடைபிடிக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, 3 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்குமாறு தமிழ்நாடு மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றியதை தொடர்ந்து, தமிழ்நாடு ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் வீட்டில் தனிமை படுத்தப்பட்டவர்கள், அரசு கூறிய விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளை வெகுவாக பாராட்டியதோடு, மனித நேயமும், இந்திய தேசமும், கொரோனா வைரஸுக்கு எதிராக தொடுத்துள்ள போரில், தமிழ்நாடு முன்மாதிரியாக திகழ்ந்து, வெற்றியை நோக்கி வழி நடத்த வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.