கரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு - முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 19:01

சென்னை: 

கரோனா வைரஸை ஒழிக்க தமிழ்நாடு மக்கள், விழித்திரு… விலகியிரு.. வீட்டிலிரு என்பதை பின்பற்றி அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று தொலைக்காட்சி உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

தமிழக மக்களுக்காக இன்றிரவு 7:00 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தொலைக்காட்சியில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் 7 மணிக்கு தொலைக்காட்சி வழியே மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சீனாவில் துவங்கி, காட்டுத் தீ போல், வேகமாக பரவி வருவதை, நாம் எல்லோரும்
அறிவோம்.

கரோனா வைரஸ் காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவி வருகிறது. 

கரோனா பாதிப்பைத் தடுக்கும் பணிகளுக்கு 3,780 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

கொரோனா வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடியாகவும், கைகள் மூலமும்
பரவுகிறது.

தமிழ்நாடு அரசு, இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு, பல்வேறு நடவடிக்கைகளை, போர்க்கால
அடிப்படையில் எடுத்து வருகிறது.

கரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.

கரோனா வைரஸை தடுக்க ஊரடங்கை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

கரோனா பரவுவதை தடுக்க தற்போது ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் அவசியம். அரசின் உத்தரவு, நடவடிக்கைகள் மட்டும் போதாது.

தமிழக முதலமைச்சராக இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்.

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல, உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும் அரசின் உத்தரவு.

காய்கறி, பால், இறைச்சி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கடுமையான சளி, இருமல், மூச்சு விடுதலில் சிரமம் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுகலாம். தாமாகவே யாரும் சுய மருத்துவம் எடுத்து கொள்ள வேண்டாம்.

ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள், மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள, ஆட்டோ
தொழிலாளர்கள் குடும்பத்திற்கு, சிறப்பு தொகுப்பாக 1000 ரூபாயும் மற்றும் 15 கிலோ அரிசி,
ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும்.

பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு, பொது விநியோகத் திட்டத்தில்
வழங்கப்படும் 1,000 ரூபாயுடன், கூடுதலாக 1,000 ரூபாய் நிவாரணத் தொகையாக
வழங்கப்படும்.

அம்மா உணவகத்தின் மூலம் சூடான, சுகாதாரமான உணவு, தொடர்ந்து வழங்கப்படும்.

மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணி புரிந்த
தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு நிதியாக கூடுதலாக வழங்கப்படும்.

தனிமைப்படுத்துதல் என்பது, உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும்,
சமுதாயத்தையும், நாட்டையும் பாதுகாக்கத் தான்.

உங்கள் குடும்பம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதைப் போல, தமிழ்நாட்டில் உள்ள
ஒவ்வொரு குடும்பமும், அரசுக்கு முக்கியம். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முதியோர்கள், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கவனமாக பார்த்துக்
கொள்ளவும்.

பொறுப்பான குடிமக்களாக இருந்து சமுதாயத்தை காப்போம்.

மருத்துவ உதவி தேவை எனில் 104 அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

10,158 படுக்கைகள், மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. மேலும், படுக்கை
எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளேன்.

கரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு.

கரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றி உள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முன்னதாக, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் நிதியுதவியாக ரூ 4 ஆயிரம் கோடியை ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.