சாலைகளில் சிக்கியுள்ள லாரிகளை செல்ல வேண்டிய இடத்திற்கு அனுமதிக்க வேண்டுகோள்

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 17:55

புதுடெல்லி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த 21 நாள் முழு அடைப்பு  நாடு முழுவதும் அமலுக்கு வருவதால் சாலைகளில் சிக்கிய பல ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய முடியாமல் வழியிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 எல்லா மாநிலங்களிலும் கோவிட்-19 வைரஸ்  பாதிப்பு காரணமாக லாரிகள் நகர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லா லாரிகளிலும் ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவர்களும் அவர்களின் உதவியாளர்களும் பயணம் செய்து வருகிறார்கள்.

எல்லா இடங்களிலும் முழு அடைப்பு அமல் செய்யப்படும் காரணத்தினால் இவர்கள் உணவு தண்ணீர் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

சாலைகளில் சிக்கியுள்ள டிரைவர்கள் அவர்களின் உதவியாளர்களிடம் இருந்து லாரிகளின் உரிமையாளர்களுக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.  

உணவு ,குடிநீர் கிடைக்காமல் அவர்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலைகளில் உள்ள சோதனைச்சாவடிகள் அல்லது சுங்க கட்டணம் வசூலிக்கும் சாவடிகளில் லாரிகளின் டிரைவர்கள் உதவியாளர்களுக்கும் உண்ண உணவும் குடிக்க தண்ணீரும் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யும்படி மாநில அரசுகளுக்கு உடனடியாக தகவல் அனுப்ப வேண்டுகிறேன்  என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்சரண்சிங் அட்வால், இந்தியப் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் இந்த வேண்டுகோளை அவர் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் 70% சதவீதம் பொருள்களை சாலை வழியாக லாரிகள் தான் எடுத்துக்கொள்கின்றன.

இந்த லாரிகள் எல்லாம் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் இல்லை. அதற்கு மாறாக பத்து லாரிகளுக்கும் குறைவாக வைத்துள்ள உள்ள உரிமையாளர்கள் கைகளில்தான் உள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியாவிலுள்ள லாரிகளில் 85% இந்த உரிமையாளர்கள் கைகளில்தான் உள்ளன. சாலைப்போக்குவரத்து தொழிலை மொத்தம் 20 கோடிக்கு மேற்பட்டவர்கள் சார்ந்துள்ளனர்.  ஏற்கனவே பொருளாதார தேக்கநிலை மற்றும்  கோவிட்-19 வைரஸ்  பாதிப்பு காரணமாக தாங்கள் வாங்கிய லாரிகளுக்கான தவணைத் தொகையை செலுத்த முடியாமல் இந்த சிறு உரிமையாளர்கள் அவதிப்பட்டு கொண்டுள்ளனர்.

இதைத் தவிர தகுதிக்கட்டணம், அனுமதிக் கட்டணம், காப்பீட்டு கட்டணம் மற்றும் பிற வரிகளை அவர்கள் செலுத்த வேண்டி உள்ளது. எனவே லாரி வாங்கிய இடங்களில் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை செலுத்துவதற்கு செலுத்துவதற்கு 6 மாத காலம் அவகாசம் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

 மேலும் மத்திய மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய வரிகளுக்கு அபராதம் விதிக்காமல் அவற்றை செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

ஈ. வே. பில் லுக்கு உரிய காலம் முடிந்தால் அபராதம் விதிப்பதுண்டு அந்த அபராதம் விதிக்கக் கூடாது என ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தெரிவிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் குல்சரண் சிங் அட்வால் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கோரியுள்ளார்.