சென்னை
கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக 37 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டவரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னை சேப்பாக்கம் மாநில அவரசக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக போர்க்கால அடிப்படையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
இன்று (25.03.2020) சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட 144 தடை உத்தரவு 37 வருவாய் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் நிலை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரடியாக ஆய்வு செய்தார்கள்.
பின்பு செய்தியாளர்களிடம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசியதாவது,
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைக்கிணங்க மாநிலத்தில் உள்ள 16,743 வருவாய் கிராமங்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஆகியோரால் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது மற்றும் அங்குள்ள கள நிலவரங்களை கேட்டறிந்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
சுயதனிமை, சமூக இடைவெளி போன்ற விழிப்புணர்வுகளை அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் பொருட்களை வாங்கும் பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு தீவிர நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
மேலும் தேவையானவர்களுக்கு உணவு வழங்க சமுதாய சமையலரை அமைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், 144 தடை உத்தரவு மற்றும் சுகாதார செய்திகள் பொதுமக்களை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்ட தண்டோரா மற்றும் துண்டு பிரசுரங்கள் போன்ற நடவடிக்கைகள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு தொடர்புடைய துறைகளின் பணியாளர்களை அலுவலகம் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகள், தொடர்பாக இந்த ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்கள் வீட்டிலிருந்தே சுயதனிமை, சமூக இடைவெளியை பின்பற்றி கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்தார்.
இவ்வாய்வின் போது வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா., வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன்., பேரிடர் மேலாண்மை ஆணையர் முனைவர்.டி. ஜெகந்நாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.