தமிழ்நாடு, புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 16:49

சென்னை

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்.கே.ஜி. வகுப்பிலிருந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றனர் என்று அறிவிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

மார்ச் 24இல் (நேற்று) நடைபெற்ற 12 ஆம் வகுப்பு தேர்வை ஊரடங்கு காரணமாக சில மாணவர்களால் பொதுத் தேர்வு எழுத முடியவில்லை. தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு தேதியில் தேர்வை நடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். மறு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. நேற்று இரவு மக்களிடம் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, கரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பேசியது மட்டுமல்லமால் வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் எனக் கூறினார்.

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் இன்று முதல் அடுத்த 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்வி நிலையங்கள், உணவகங்கள், பெரு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதன் காரணமாக குஜராத், உத்தரப் பிரேதசம், புதுச்சேரி மாநில அரசுகள் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அறிவிக்க தமிழ்நாடு பள்ளி கல்வித் துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ்

புதுச்சேரி மாநிலப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது.