இந்திய முழுவதும் 21 நாள் முழு அடைப்பு: ராகுல்காந்தி வரவேற்பு

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 13:43

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இந்திய முழுக்க 21 நாட்கள் முழுஅடைப்பு என இந்திய பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை வரவேற்புக்குரியது ஆனால் மிகவும் தாமதமானது. அத்துடன் இந்த 21 நாள் முழு அடைப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யாமல் அரசு முழு அடைப்பை அறிவித்துள்ளது. இந்த முழு அடைப்பு காலத்தில் ஏழை மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு யார் உதவி செய்வார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழை மக்களின் வாழ்க்கைச்செலவுக்கு  இந்த முழுஅடைப்பு காலத்தில் உதவி செய்வதற்கு உருப்படியான திட்டம் எதனையும் அரசு வெளியிடவில்லை என ராகுல்காந்தி குறை கூறியுள்ளார்.

மக்களுக்கு வேண்டுகோள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு கடிதமொன்றை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் இந்திய குடிமக்கள் ஒருவரிடமிருந்து முழுமயாக விலகி இருக்கும் சமூக தனித்திருத்தல் நடைமுறையை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். இதில் விதிவிலக்கு எதுவும் கூடாது. இந்த தனித்திருத்தல் காரணமாகத்தான் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய பொது சுகாதாரத்துறை ஊழியர்கள் மிகவும் அற்புதமான தைரியத்துடனும் சேவை உணர்வுடனும் மக்களுக்கு பணியாற்றி வருகிறார்கள்.

கோவிட்-19 வைரஸ்  கொள்ளைநோய் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயலாற்றுவதற்கு உரிய சோதனையாக அமைந்துள்ளது. 

நாம் அனைவரும் இணைந்து இந்த எதிர்பாராத நெருக்கடியை ஒற்றுமையுடன் எதிர்த்து போராட வேண்டும். தேசிய அளவில் ஒற்றுமை , ஒருங்கிணைவு இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு உரிய நேரம் இதுதான். இந்திய பொதுமக்கள் அனைவரும் இந்திய அரசின் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் பிறப்பிக்கும் உத்தரவுகளை ஏற்று முழுமையாக பின்பற்றும் படியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.