ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடும் மக்களுக்கு தெலுங்கானா முதலமைச்சர் கடும் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 11:28

ஐதராபாத்:

கரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சமின்றி ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் ஊர் சுற்றுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸின் தீவிரத்தை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வந்து சுற்றுவதையும், சாலைகளில் சாவகாசமாக நடந்து செல்வதையும் பார்க்க முடிகிறது. இதன்மூலம் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு அர்த்தமற்றதாக மாறிவிடமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் இன்னும் விழிப்புடன் இருந்து கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாப்பதுடன், மற்றவர்களுக்கு பரவுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால், இளைஞர்கள் பலர், இரவு பகல் என பைக், காரில் சுற்றி வருகின்றனர். போலீஸார் லத்தியால் அவர்களைத் தாக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இருந்தபோதும், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் பலர் சுற்றித்திரிகின்றனர்.

இதனால், ஆத்திரமடைந்த முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காவிட்டால் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்படும். இல்லை என்றால் ராணுவம் அழைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எச்சரிக்கை 

ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களுக்கு தெலுங்கானா முதலமைச்சவரின் கண்டிப்புடன் கூடிய எச்சரிக்கை.

‘அமெரிக்காவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ராணுவம் அழைக்கப்பட்டது. எனவே, மக்கள் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், 24 மணி நேர ஊரடங்கை விதிக்க வேண்டிவரும். மேலும் தேவையின்றி நடமாடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும். அதுபோன்ற நிலைமையை ஏற்படுத்திவிடக்கூடாது என்று மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என முதலமைச்சர் சந்திரசேகர ராவ் எச்சரித்துள்ளார்.