தமிழ்நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்க ஐகோர்ட் நிர்வாகக் குழு உத்தரவு

பதிவு செய்த நாள் : 25 மார்ச் 2020 10:30

சென்னை

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு இன்று உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் இன்றிலிருந்து அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், முக்கியமான பணிகளைத் தவிர அனைத்து அலுவலகங்களுக்கும் பணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்களையும் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்து பணியை செய்யும்படி அறிக்கை வெளியிடப்படுள்ள நிலையில் நீதிமன்றத்தின் அனைத்து பணிகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி சென்னை ஐகோர்ட் நிர்வாகக் குழு உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நிர்வாகக் குழுவின் உத்தரவு குறித்து தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மறு உத்தரவு வரும் வரை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் யாருக்கும் அனுமதியில்லை, அதி முக்கியத்துவம் வாய்ந்த, அவசர வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டுமெனில் நீதிபதி அனுமதி பெற்றே தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாக, நீதிமன்ற அலுவல் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

மாவட்ட முதன்மை நீதிபதிகளின் அனுமதியோடு, மிக அவசர வழக்காக இருந்தால் மட்டும் கீழமை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.