அடுத்த 21 நாட்களுக்கு முழு அடைப்பு தொடரும் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 20:01

புதுடில்லி

கரோனா வைரஸ் பரவும் சங்கிலிப் பாதையை தகர்க்க மக்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் விலகி இருப்பது ஒன்றே வழி. கோவிட்-19 பிடியிலிருந்து மீண்ட நாடுகளும் உலக சுகாதார ஸ்தாபனமும் மருத்துவ் நிபுணர்களும் அதைத் தான் வலியுறுத்தி உள்ளனர். அதனால் இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாள்களுக்கு முழு அடைப்பை விலக்கு இல்லாமல் அமல் செய்ய வேண்டுகிறேன் என கோவிட்-19 வைரஸ் தொடர்பான தன்னுடைய இரண்டாவது உரையில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

மீண்டும் ஒருமுறை கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உங்களிடையே பேச வந்திருக்கிறேன் என - பிரதமர் மோடி தொலைக்காட்சியில் இன்று தனது உரையை பிரதமர் துவக்கினார்.

பிரதமர் மோடி உரையின் சுருக்கம் வருமாறு

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதன் பரவல் சவாலாக உள்ளது.

காட்டுத் தீ போல கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே நமது முக்கிய நோக்கம். 

குழந்தைகள், தாய் - தந்தை, வியாபாரிகள், பெரியவர்கள் என ஒவ்வொரு இந்தியருக்கும் தன்னையும் நாட்டையும் காக்கும் பொறுப்பு உள்ளது.

இந்தியர்கள் மக்கள் ஊரடங்கைவெற்றிகரமாக நிறைவேற்றி உள்ளனர். 

கரோனா வைரஸ் பரவலை எதிர்த்து போரிட மக்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

மக்கள் ஒருவரிடம் இருந்து அடுத்தவர் விலகியிருந்தால் மட்டுமே கரோனாவை விரட்டியடிக்க முடியும்.

சமூக விலகியிருத்தல் என்பது ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் முக்கியமானது, பொறுப்புள்ள செயலாகும்.

அனைவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

கரோனைவை தடுக்க வேண்டும் என்றால், தொற்று பரவும் வழிமுறைகளை உடைத்தெறிய வேண்டும்.

சமூக விலகியிருந்தலிருந்து மீறுவது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு விளைவிப்பதாகும்.

கரோனாவை தடுக்க பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் முடக்கப்படும்.

இந்தியாவின் அனைத்து பகுதிகளும் ஊரடங்கிற்குள் கொண்டுவரப்படும்

இன்று நள்ளிரவு முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு முடக்கம் தொடரும். 

 மருத்துவர்கள் அறிவுரைப்படி, 21 நாட்கள் விலகியிருத்தல் மூலம் கரோனா பரவுவதை தடுக்க முடியும்.

21 நாட்களை சங்கடப்படாமல் எதிர்கொள்ளுங்கள், தவறினால் ஒவ்வொரு குடும்பத்தின் அழிவிற்கும் வித்திடும்.

கரோனா வைரஸ் பரவல் சங்கிலியை உடைக்க 21 நாட்கள் தனித்து இருப்பது அவசியம்.

இந்த 21 நாள்களும் நாம் கட்டுப்பாட்டை மீறாமல் முழு அடைப்பையும் விலகி இருப்பதையும் நிறைவேற்ற வேண்டும். அடுத்த 21 நாள்களில் இதனை செய்யாவிட்டால் அடுத்த 21 ஆண்டுகளில் கூட கோவிட்-19 வைரஸை நம்மால் ஒழிக்க முடியாது.

கரோனா பரவும் வேகம் பல நூறு மடங்கு பெருகி உள்ளது. முதலில் 67 நாளில் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. பின்னர் 11 நாள்களில் ஒரு லட்சம் பேரைத் தொற்றிக் கொண்டது. இப்பொழுது4 நாளில் 3 லட்சம்பேருக்கு தொற்று பரவியுள்ளது

ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாரத்திற்குள்  ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

வீட்டு வாயிலில் லக்ஷ்மண் ரேகை வரையப்பட்டது போல வீட்டிலேயே கட்டுப்பாட்டுடன் இருங்கள். ஒரு போதும் வெளியே வருவதை நினைக்காதீர்கள்.

கரோனா வைரஸை தடுக்க இந்த நடவடிக்கை முக்கியமானதாகும்.

கையெடுத்து கும்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.

வீட்டில் தனியாக இருக்கும்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்காகவும் மருத்துவ ஊழியர்களுக்காகவும் நமது சுகாதார ஊழிiயர்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். 

பொறுமை மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க இதுவே சரியான தருணமாகும்.

அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்படும்.

ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.

ஊடகத்துறையினர், காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து உழைத்து வருகிறார்கள்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும்  சிகிச்சைக்காகவும் மத்திய அரசு 15,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

தனியார் மருத்துவர்கள், மருத்துவ ஆய்வகங்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

அனைத்து மாநிலங்களும் கரோனா தடுப்பு மருத்துவத்திலே முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.


அனைவரையும் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள். உங்களையும் உங்களுக்கு நெருக்கமானவர்களையும் காப்பாற்றுங்கள். அதன் மூலம் நாட்டையும் காப்பாற்றுங்கள்.

பிரதமர் மோடி கரோனா வைரஸ் தடுப்பு குறித்து இன்று இரண்டாவது முறையாக  தொலைக்காட்சியில் மக்களிடையே உரையாற்றும்போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.