சீனாவில் கட்டுக்குள் வரும் கொரோனா: யுகான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்வு

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020 18:27

பெய்ஜிங்,

கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட யுகான் நகரில் பயணக் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது

.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் , முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள யுகான் நகரில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ், தாக்கம் தெரியத்தொடங்கியது. சீனாவின் உகான் நகரில் கடுமையான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஹூபெய் மாகாணத்தை சீனா முடக்கியது. பயணக் கட்டுப்பாடுகளையும் விதித்தது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சீன அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

யுகான் நகரம் முழுவதும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. ராணுவ மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சீனாவில் ஒட்டுமொத்தமாக 81,171 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,277 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சீன அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவுவது தற்பொழுது கட்டுக்குள் வந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவது கட்டுக்குள் வந்துள்ளதால், ஹுபெய் மாகாணம் முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இன்று இரவு முதல், ஆரோக்கியமான உடல் நலம் உடையவர்கள் மாகாணத்திற்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.