![]() | ![]() |
உயர்கல்வி படிக்க இருக்கும் மாணவர்கள் தடையின்றி நல்ல நிறுவனங்களில் இடம் கிடைக்க சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.
ஒரு முறை நந்தீஸ்வரர், பிருங்கி முனிவர் உள்ளிட்ட சிலருக்கு சிவபெருமான் குருவாக இருந்து அஷ்டமாசித்திகளை உபதேசித்தார். அங்கு வந்த நதர்த்தினி, அபரகேந்தி, டேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆறு கார்த்திகைப் பெண்கள் தங்களுக்கும் உபதேசம் செய்யும்படி வேண்டினர். சிவனுக்கோ விருப்பமில்லை. ஆனால், பார்வதி சிபாரிசு செய்ததால், சிவன் சம்மதித்தார். உபதேசம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள், பாடத்தின் மீது அவர்கள் கவனம் செலுத்தவில்லை.
வெகுண்ட சிவன், “நீங்கள் அனைவரும் 1000 ஆண்டுகளுக்கு கற்பாறைகளாக ஆகக்கடவது” எனச் சாபமிட்டார். வருந்திய பெண்கள் விமோசனம் கேட்க, “உங்களின் இருப்பிடம் தேடி ‘சுந்தரேஸ்வரர்’ என்னும் பெயரில் நான் பூலோகம் வருவேன். அப்போது மீண்டும் சுயவடிவம் பெறுவீர்கள்” என்றார். அதன்படி மீனாட்சியம்மனை திருமணம் செய்ய வந்த சிவன் பாறைகளாகக் கிடந்த பெண்களுக்கு சுயவடிவம் அளித்தார். பட்ட மங்கைகளாக அதாவது செயல்பட முடியாத பெண்களாக இவர்கள் கிடந்த இடம் ‘பட்ட மங்கை’ எனப்பட்டது. தற்போது ‘பட்டமங்கலம்’ என அழைக்கப்படுகிறது.
இதற்கிடையில், தகுதியற்றவர்களுக்கு சிபாரிசு செய்ததால் பார்வதியும் பூலோகம் வந்தாள். கரிய நிறம் கொண்ட காளியாக இங்குள்ள நாவல் மரத்தடியில் தங்கினாள். கார்த்திகை பெண்களின் சாப விமோசனத்தின் போது, பார்வதியும் சுயவடிவம் பெற்றாள். இத்தலத்தில் சுந்தரேஸ்வரராக சிவனும், மீனாட்சியாக பார்வதியும் உள்ளனர்.
ஐந்து முகங்கள் கொண்ட முருகன் சன்னதி இங்குள்ளது. சிவனின் அம்சம் கொண்டவர் என்பதால் சிவனுக்குரிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். அருகில் வள்ளி, தெய்வானை உள்ளனர்.
தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி இங்கிருப்பது மாறுபட்ட அமைப்பாகும். இவரை வியாழக்கிழமை களில் தட்சிணாமூர்த்தி யுடன், சன்னதிக்கு பின்புறமுள்ள ஆலமரத்தையும் சேர்த்து 12 முறை வலம் வந்தால் உயர்கல்வி யோகம் உண்டாகும். நல்ல மணவாழ்க்கையும் குழந்தைப்பேறும் அமையும். தல விருட்சமாக ஆலமரமும், தீர்த்தமாக பொற்றாமரை குளமும் உள்ளது.
![]() | ![]() |
இருப்பிடம்: திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம் வழியாக 105 கி.மீ., துாரத்தில் திருப்புத்துார். இங்கிருந்து பிரியும் சாலையில் 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மாசி மகம், மகாசிவராத்திரி. வியாழக்கிழமைகளில் பகல் 12.00 -– -1.30 மணி வரை அபிஷேகம்.
நேரம்: காலை 6.30 -– 12.30 மணி; மாலை 4.30- -– 8.00 மணி.
அருகிலுள்ள தலம்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் - 21 கி.மீ., திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயில் - 6 கி.மீ., குன்றக்குடி முருகன் கோயில் - 25 கி.மீ.,