குருபக்தி!

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020

மற்றொன்று; ஆசார்யனும் நம்மைப் போலத்தான் உண்டு, உடுத்து இருப்பார். அவரை நம்மை போலவே நினைக்கக்கூடாது. எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிலே தோன்றிய எல்லாப் பிராணிகளும் உண்டு. வெளியே வந்தால் மலம் என்று பெயர். ஒரு பிராணி மட்டும் உண்டு கழித்தது மலம் என்று பெயரில்லை. அது புனிதமானது; எது? பசுவின் சாணம். பூசை வீட்டிலே அதைக் கொண்டு மெழுகுகிறோம். சுவாமிக்கும் பஞ்ச கவ்யமாக அபிஷேகம் பண்ணுகிறோம். இதோ இந்த திருநீறு பசுவின் மலத்தால் ஆனது. குழந்தைகள் வெளிக்குப்போனால், பசுஞ்சாணம் போட்டுத்தான் மெழுகுகின்றோம். ஆகையினாலே பிற மலங்களை போக்குவதற்காக அமைந்ததது பசுவின் மலம். குருநாதருடைய உடம்பு பசுவின் மலம் போலே. நம்முடைய கருமேனியை சுத்திகரிக்க வந்தது குருநாதரின் திருமேனி. ஆகவே, நம்மை போலத்தானே அவரும் இருக்கிறார் என்று எண்ணி விடக்கூடாது.

தெய்வத்தினிடத்து செய்த பாவம் ஆசாரியனிடத்துத் தீரும். ஆசாரியனிடத்து செய்த பாவம் எங்கும் தீராது. அதற்கு முடிவே கிடையாது. ஆகவே, சிவபக்தியை காட்டிலும் குருபக்தியே உயர்ந்தது. அதற்கு ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன்!

ஆசாரியன் ஞானத்தின் சுரூபம். ஞானம் எங்கேயாவது கடையிலே விற்குமா? என்னோடு நூறு பேர் யாத்திரைக்கு வந்திருக்கிறார்கள். எங்கு போனாலும் சாமான் வாங்குவதுதான்  வேலை. கம்பளி, அது இது, பெட்டி, படுக்கை, கூடை; ரயிலில் இடமே கிடையாது. இதை வேடிக்கையாய்ச் சொல்லவில்லை.

தங்கத்தை விலைக்கு வாங்கலாம்; வைரத்தை விலைக்கு வாங்கலாம்; துணிகள் வாங்கலாம்; நிலம் வாங்கலாம்; பங்களா வாங்கலாம்; கார் வாங்கலாம். ஞானத்தை எங்கேயாவது விலைக்கு வாங்க முடியுமா? ஞானம் ஷாப் என்று ஒன்று இருக்கிறதா? ஐந்து கண்டத்திலே எங்கேயாவது ஞானம் விற்கிறதா? அந்த ஞானத்தை கொடுப்பவர், குருநாதர்.

துன்பத்திற்கு காரணம் எது? அஞ்ஞானம். இன்பத்திற்கு எது? ஞானம். சுருக்கமாக சொல்கிறேன்: அஞ்ஞானம் இருக்க இருக்க துன்பம் இருக்கும். இத்துன்பம் நீங்க என்ன செய்ய வேண்டும்? அஞ்ஞானத்தை போக்க வேண்டும். அஞ்ஞானம் தமஸ்; இருள் அது; ஞானம் ஒளி; ஞானப் பிரகாசம். ஞானவொளி என்று சொல்லுவார்கள். ஒளி என்ன செய்யும்? மகிழ்ச்சியை கொடுக்கும்.

இரண்டாவது திரைப்பட காட்சியை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தார்; மின்விளக்கு வீட்டிலே எரிகிறது; ஆனால், வெளியிலே மின் விளக்கு அணைந்து விட்டது. உடனே வீட்டிலும் மின்விளக்கு அணைந்துவிட்டது. தீப்பெட்டி இருக்கும் இடம் தெரியவில்லை. என்ன செய்வது? அப்படியே இருக்க வேண்டியதுதான். மனைவியை பார்த்தார். ‘‘ஜானகி: தீப்பெட்டி எங்கே?’’ ‘‘நான் பார்க்கவில்லை’’ அப்பொழுது ஒரு டார்ச்லைட் இருந்தால், எத்தனை நன்மை உண்டாகும்? அப்படி, வாழ்விலே உண்டாகிற அஞ்ஞானமான இருளுக்கு, ஞானவொளியை  கொடுப்பவர், குருநாதர்.

அவர் கை வைத்தால் ஞானம் வந்து விடுகிறது. ராமகிருஷ்ண பரம ஹம்சர் விவேகானந்தர் மீது கையை வைத்தார். ஞானம் விவேகானந்தருக்கு வந்துவிட்டது. அவர் உட்கார்ந்த இடம் தொண்ணூற்றேழு   லட்சக்கட்டடம்; இவர் உட்கார்ந்த இடம் கன்னியாகுமரி; (சிரித்த பாபம்) அவர் கை வைத்ததும் ஞானம் வந்து விட்டதா? எத்தனை நாட்களாக ஞானத்தை வாங்கி வைத்திருந்தார்? ஒரு ஐம்பது வருடங்களாக ஞானத்தை வாங்கி வைத்திருந்தார்.

அப்பா பணம் சேர்த்தார்; ஒரு நாள் தன் மகனிடத்தில் சாவி கொடுத்தார்; ‘‘இதோ அப்பா! ஏழு லட்சம்.’’ அப்படி  ஆயுள் முழுவதும் பாடுபட்டு ஞானத்தை சேகரித்து சீடனிடத்தே சுலபமாகக் கொடுக்கிறார்; எவ்வளவு பெரிய உபகாரம்! ஆகையினாலே, ஞானத்தை விலைக்கு வாங்க முடியாது. ஞானத்தை கொடுக்கிறவர் ஞான குருநாதர். எல்லோருக்கும் குரு பக்தி அவசியமாகும். குருநாதரை நினைக்க வேண்டும். வணங்க வேண்டும். குருநாதர் இருந்த திசை நோக்கி பக்தி செய்ய வேண்டும்.

– தொடரும்

நன்றி:  ‘வாரியார் வாக்கு’