கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 223

பதிவு செய்த நாள் : 23 மார்ச் 2020

ஜெய்சங்கருக்கு ஜெயம் கொடுத்த குரல் -– 2

டி.எம். சவுந்­த­ர­ரா­ஜன் ஜெய்­சங்­க­ரின் முதல் பட­மான  ‘இர­வும் பக­லும்’ என்ற திரைப்­ப­டத்­தில் நான்கு பாடல்­கள் பாடி­யி­ருந்­தார். ‘இரவு வரும் பக­லும் வரும்’ என்ற பாட­லும் ‘உள்­ளத்­தின் கத­வு­கள் கண்­க­ளடா’ என்­ப­தும் டி.எம்.எஸ். மட்­டும் பாடி­யவை.

‘காலை நேரம் ஒருத்தி வந்­தாள்’, ‘குங்­கு­மக் கோலம் போடு­வ­தென்ன கன்­னத்­திலே’ ஆகிய இரண்டு பாடல்­கள்,  டி.எம்.எஸ். பி.சுசீ­லா­வு­டன் இணைந்து பாடி­யவை.

இவை பெரும்­பா­லும் மெல­டிப் பாணி­யில், காதுக்கு ரம்­மி­ய­மான முறை­யில் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. டி.எம்.எஸ்­சின் குர­லி­னிமை இவற்­றில் மிக அழ­காக வெளிப்­பட்­டது.

இவற்றை நான் டி.எம்.எஸ்­சி­டம் அவ­ரு­டைய இல்­லத்­தில் கேட்ட போது, அவ­ரு­டைய முகத்­தில் ஒரு­வித திருப்­தி­யும் பெரு­மித உணர்­வும் தெரிந்­தன.

‘‘இவை சங்­கீ­தம் என்­கிற விஷ­யத்­தில் சவா­லான பாடல்­கள் அல்ல.... ஆனால், நல்ல வர­வேற்பை பெற்ற, கருத்து செறி­வுள்ள பாடல்­கள். ஒரு புதிய கதா­நா­யக நடி­க­ருக்கு அந்­தஸ்­தைக் கொடுத்த பாடல்­கள்’’ என்­றார் டி.எம்.எஸ்.

மிக­வும் இனி­மை­யான குரல்­கொண்ட முகம்­மத் ரபி,  டி.எம்.எஸ்­சி­டம், ‘ஆப்கா ஆவாஸ் பஹுத் சுந்­தர் ஹை’  (உங்­கள் குரல் மிக­வும் இனி­மை­யாக உள்­ளது) என்று கூறி­ய­தற்கு ஏற்ப, இந்த பாடல்­க­ளில் டி.எம்.எஸ்சை சுக­மான முறை­யில், சவு­க­ரி­ய­மான வழி­யில், இனி­மை­யா­கப் பாடச் செய்­தி­ருந்­தார்­கள்! ஈர­மும், கம்­பீ­ர­மும் ஒருங்கே அமைந்த டி.எம்.எஸ்­சின் குர­லுக்­குக் கிடைத்த தனிப்­பட்ட வெற்றி இந்த பாடல்­கள். ஆக­வே­தான், ‘இர­வும் பக­லும்’ பாடல்­களை ஒரு தனிப்­பட்ட பெரு­மித உணர்­வு­டன் டி.எம்.எஸ். கேட்டு மகிழ்ந்­தார்.

ஒரு புதிய நடி­கரை ஹீரோ­வாக அறி­மு­கம் செய்­தா­லும், ‘இர­வும் பக­லும்’ படத்­தில் ஜெய்­சங்­கர் ஏற்ற வேடம், எம்.ஜி.ஆர். ஏற்ற நாயக வேடங்­க­ளின் அக்­மார்க் முத்­தி­ரை­யு­டன் திகழ்ந்­தது!

‘‘பணக்­கா­ரப் பிள்ளை என்­றா­லும் திமிர் இல்­லா­த­வன், படிப்பு என்று வந்­து­விட்­டால் அதில் கவ­னம் செலுத்­து­ப­வன், பெண்­க­ளின் சமாச்­சா­ரங்­க­ளுக்­குப் போகா­த­வன்,  பெண்­கள் சண்­டைக்கு இழுத்­தால் பாடம் கற்­பிக்­கக்­கூ­டி­ய­வன், தேகப்­ப­யிற்­சி­யில் நாட்­டம் கொண்­ட­வன், தாரா­ள­மான குணம் படைத்­த­வன், பேசித்­தி­ருத்த முடி­யாத தீய­வர்­களை வழிக்­குக் கொண்டு வர தன்­னு­டைய ‘கை’வ­ரி­சை­யைக் காட்­டத் தயங்­கா­த­வன், சமூ­கத்தை சூறை­யா­டும் தீய சக்­தி­களை தோலு­ரித்­துக் காட்­டு­வ­தற்கு மாறு­வே­டம் போட்­டுக்­கொண்டு வரு­ப­வன்...’’என்று எம்.ஜி.ஆரின் சில பல தன்­மை­களை ஜெய்­சங்­கர் தன்­னு­டைய முதல் படத்­தி­லேயே பிர­தி­ப­லித்­தார்.

முகம் புதிது என்­றா­லும் பாட்­டுக் குரல் எம்.ஜி.ஆரின் வெற்­றிக்­கு­ர­லாக ஒலித்­துக்­கொண்­டி­ருந்த டி.எம்.எஸ்­சின் குரல்­தான் என்­கிற வகை­யில், ‘இர­வும் பக­லும்’ படத்­தில் ஜெய்­சங்­கர் வெற்றி நடை போட்­டார். தொடர்ந்து வீசும் தென்­றல் போல் டி.எம்.எஸ்­சின் குரல் அவ­ருக்­குத் துணை நின்­றது. காதல் உணர்­வு­கூட தத்­து­வச் சாய­லு­டன் வெளிப்­பட்­ட­போது (‘உள்­ளத்­தின் கத­வு­கள் கண்­க­ளடா’), முதல் படத்­தி­லேயே ஜெய்­சங்­கர் ‘கதா­நா­யக’ நடி­கர் என்ற அந்­தஸ்தை எளி­தா­கப் பெற்­று­விட்­டார்.

நிஜ­வாழ்க்­கை­யி­லும், துடிப்­பும், உழைப்­பும் எல்­லோ­ரி­ட­மும் சம­மாக அன்­பு­டன் பழ­கும் தன்­மை­யும் கொண்­டி­ருந்த ஜெய்­சங்­கர், தமிழ் சினிமா தயா­ரிப்­பில் ஒரு புதிய மாடலை கொண்டு வந்­தார். ஆனால், அறு­ப­து­க­ளில் பிர­பல வாரப்­பத்­தி­ரி­கைக்கு ஒரு புதிய கதா­நா­யக நடி­க­ரின் வர­வு­கூட கண்­ணுக்­குத் தெரி­ய­வில்லை!  ‘சார­மற்ற கதை­யை­யும் சங்­க­ட­மான பாத்­தி­ரங்­க­ளை­யும் கொண்டு அலுக்க வைக்­கும் படம் இர­வும் பக­லும்’ என்­றது அதன் விமர்­ச­னம். ஆனால், படம் வெற்றி பெற்­ற­தோடு, பட முத­லா­ளி­க­ளின் கவ­னத்­தை­யும் கவர்ந்­தது!  எழுத்து வியா­பா­ரி­க­ளுக்­குப் புலப்­ப­டாத விஷ­யம், சினிமா வியா­ப­ரி­க­ளுக்­குத் தெரிந்­தது.  

சிறந்த தொழில்­நுட்ப பலத்­து­டன் காட்­சிப்­ப­டுத்­தலை பொறுத்­த­வரை தரத்தை உறுதி செய்­யக்­கூ­டிய படங்­களை எடுத்­துத் தள்­ளும் கனவு தொழிற்­சா­லை­களை நடத்­து­வோர், குறைந்த சம்­ப­ளத்­தில் கிடைக்­கக்­கூ­டிய ஒரு புது கதா­நா­ய­கனை, சொற்ப முத­லீடு செலுத்தி ஜாக்­பாட் அடிக்­கக்­கூ­டிய வாய்ப்­பா­கப் பார்த்­தார்­கள்.

அப்­ப­டித்­தான் சிட்­டா­டல் எடுத்த  ‘விஜ­ய­புரி வீரன்’ படத்­தில் மூன்று ஹீரோக்­க­ளில் ஒரு ஹீரோ­வாக நடித்த ஆனந்­தனை, ‘வீரத்­தி­ரு­ம­கன்’ ஆக்­கி­னார்,  ஏவி.எம்.செட்­டி­யார். சின்­னஞ்­சி­று­மி­யாக பல படங்­க­ளில் வலம் வந்த சச்சு, ‘வீரத் திரு­ம­க’­­னுக்­குத் திரு­ம­கள் ஆக்­கப்­பட்­டார்! பல­வி­தங்­க­ளில் பட்­டைத் தீட்­டப்­பட்ட ‘வீரத்­தி­ரு­ம­கன்’, எதிர்­பார்த்த அள­வுக்கு வெற்றி பெற­வில்லை.  

ஆனால், சிட்­டா­டல் எடுத்த அடுத்த பட­மான ‘இர­வும் பக­லும்’ மீண்­டும் ஏவி.எம்­மைக் கவர்ந்­தது. அதன் நாய­க­னான ஜெய்­சங்­கரை தன்­னு­டைய ‘‘குழந்­தை­யும் தெய்­வ­மும்’’ படத்­தின் நாய­க­னாக்­கி­விட்­டார் மெய்­யப்­பன். சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்­றோ­ரு­டன் ஜோடி­யாக நடித்­தி­ருந்த முன்­னணி நடிகை ஜமுனா, ஜெய்­சங்­க­ருக்கு ஜோடி­யாக்­கப்­பட்­டார். ஜெய்­சங்­க­ரின் வய­தும் தோற்­ற­மும் காத­லன், இளங்­க­ண­வன் என்று வரு­கிற பாத்­தி­ரத்­திற்­குப் பொருத்­த­மாக இருந்­தன.

அவ­சி­ய­மற்ற கல்­லூரி கலாட்டா பாடல் என்­றா­லும், ‘என்ன வேகம் நில்லு பாமா’, விஸ்­வ­நா­தன் – ராம­மூர்த்­தி­யின் இசைத் தொடுப்­பில் கவர்ச்­சி­க­ர­மான மெட்­டாக அமைந்­தது. கல்­லூரி மாண­வ­னான இளம் நாய­க­னின் துடிப்­பான குர­லாக டி.எம்.எஸ். தன் குரலை வெளிப்­ப­டுத்­தி­னார்.

காத­ல­னும், காத­லி­யும் நேருக்கு நேராக இருக்­கும் போது, காதல் கடி­தம் எழு­திக்­கொள்­ள­மாட்­டார்­கள். ஆனால்,  ‘அன்­புள்ள மான்­வி­ழி­யே’­­வில் அப்­ப­டித்­தான் நடக்­கி­றது.   நாய­கியை வர்­ணிக்­கும் வரி­களை (வாலி), அவ­ளி­டம் எழு­திக்­கொ­டுத்­து­விட்டு, அவ­ளி­டமே அதைப் பாடிக் காட்­டு­கி­றான் நாய­கன்!

சிவா­ஜிக்­கும், எம்.ஜி.ஆருக்­கும் படத்­திற்­குப் படம் டி.எம்.எஸ். வெற்றி பாடல்­களை முழங்­கிக்­கொண்­டி­ருந்த கால­கட்­டம் அது. அதே பாட­கர், புதிய நாய­கன் ஜெய்­சங்­க­ருக்கு தமிழ் சினி­மா­வின் பிர­பல தயா­ரிப்­பா­ள­ரின் வெற்றி படைப்­பில் மன­தைக் கவ­ரும் பாடல்­களை பாடி­னார். இத­னால் ஜெய்­சங்­க­ரின் அந்­தஸ்து திடு­திப்­பென்று ஏறி­யது. தெம்­பான ஒரு புதிய கதா­நா­யக நடி­கர் வந்­து­விட்­டார் என்று எல்­லோ­ரும் கரு­தும்­ப­டி­யான சூழல் ஏற்­பட்­டது.

இந்­தி­யில் வெளி­வந்த ‘வஹ் கவுன் தீ’ என்ற வெற்­றிப்­ப­டத்தை, தமி­ழில் ‘யார் நீ’ என்று எடுத்­தார், பிர­பல வில்­லன் நடி­கர் பி.எஸ்.வீரப்பா. ஜெய்­சங்­கர்- – ஜெய­ல­லிதா இளம் ஜோடி­யாக சில படங்­க­ளில் இணை­வ­தற்கு,  ‘யார் நீ’ பிள்­ளை­யார் சுழி போட்­டது.  

‘நைனா பர்சை ரிம் ஜிம் ரிம் ஜிம்’ என்று மதன்­மோ­க­னின் இசை­ய­மைப்­பில் லதா மங்­கேஷ்­கர் பாடிய பாடலை, ‘நானே வரு­வேன் அங்­கும் இங்­கும்’ என்று பி.சுசீலா பாடி­னார். தனக்­குப் பிடித்த நடிகை சாதனா நடித்த காட்­சி­யில், ஜெய­ல­லிதா, ஜெய்­சங்­க­ரு­டன் நடித்­தார். இப்­ப­டித்­தான் அமைந்­தது, ‘பொன் மேனி தழு­வா­மல் பெண்­ணின்­பம் அறி­யா­மல்’ என்ற பாட­லும். திகில் அழ­கி­யாக, மர்­ம­மான முறை­க­ளில் வந்­து­போ­கும் பெண்­ணாக நடித்த ஜெய­ல­லிதா, ‘யார் நீ’யில் இள­மை­யா­க­வும் மிக­வும் அழ­கா­க­வும் இருந்­தார்.

அவ­ரு­டன் இந்த பாடல்­க­ளில் ஜெய்­சங்­கர் பாடு­வ­து­போன்ற காட்சி அமைப்பு இல்லை என்­றா­லும், ஜெய­ல­லிதா பாடு­வ­தாக அமைந்த இந்த பாடல்­க­ளில் ரியாக்­க்ஷன்­கள் எல்­லாம் ஜெய்­சங்­க­ரு­டை­ய­வை­யா­கவே இருந்­தன.  ‘பொன் மேனி’ பாடல், காத­லர்­க­ளின் ஆலிங்­க­னத்­தில் முடி­கி­றது! இந்த நிலை­யில் மழை பொழி­கி­றது.

ஜெய்: - ‘நீ நனைஞ்­சிட்ட’.

ஜெய­ல­லிதா: - ‘நனை­யட்­டும்.  ஏன் அப்­படி பார்க்­க­றீங்க?’

ஜெய் :- ‘பாக்­கக்­கூ­டாதா?’

ஜெய­ல­லிதா: - ‘உங்­கப் பார்­வை­யையே எப்­ப­வும் பிரி­யாம இருக்­க­ணும்­க­ற­து­தான் என் ஆசை...!’

இப்­படி செல்­கி­றது நெருக்­க­மான காட்சி.

படத்­தின் திகில் முடிச்­சு­கள் உச்­சக்­கட்ட காட்­சி­யில் ஒரு­வி­த­மாக அவிழ்க்­கப்­ப­டும்­போது, காதல் சிலிர்ப்­பூட்­டிய மேற்­படி ஆலிங்­க­னம், இத­மான நேச அர­வ­ணைப்­பாக மாறி­யி­ருப்­ப­தைப் பார்க்­கி­றோம். ஜெய்­சங்­கர், ஜெய­ல­லிதா இணைவை ஒரு இளம் ஜோடி­யின் வர­வாக ‘யார் நீ’ கொண்­டா­டி­யது.

இந்த வகை­யில் புது ஜோடியை ‘யார் நீ’ பிர­தி­ப­லித்­தா­லும், படத்­தில் ஜெய்­சங்­கர், டி.எம்.எஸ். குர­லில் பாடு­வ­தாக அமைந்த ஒரே பாட­லில், ஜெய­ல­லிதா இல்லை, படத்­தின் தொடக்­கத்­தில் ஜெய்­சங்­க­ரு­டன் ஜோடி சேர்க்­கப்­பட்ட ‘குமாரி ராதா’ என்­ப­வர் இருந்­தார். இவர்­கள் ‘யார் நீ’யில் இணைந்து பாடு­வ­தாக அமைந்த, ‘பார்வை ஒன்றே போதுமே’ என்ற பாடல், நல்ல ஈர்ப்பு சக்தி உள்ள பாடல். ‘ஷோக் நஸர் கீ பிஜ்­லி­யான்’ என்று இந்­தி­யில் ஒலித்த பாடல்­தான், ‘பார்வை ஒன்றே போதுமே, பல்­லா­யி­ரம் சொல் வேண்­டுமா’  என்று கண்­ண­தா­ச­னின் வரி­க­ளில் ஒலித்­தது. டி.எம்.எஸ், எல்.ஆர்.ஈஸ்­வரி குரல்­க­ளில் ஒரு குளிர்ச்­சி­யான அழ­கைப் பெறும் இந்த பாட­லில், டி.எம்.எஸ்­சின் குர­லி­னிமை கவர்ந்­தி­ழுக்­கும் வண்­ணம் அமைந்­தது.

‘யார் நீ’ படத்­திற்கு மிகச் சிறப்­பாக கேமரா இயக்­கம் செய்­த­வர், கேமரா மேதை­யான டபிள்யூ.ஆர். சுப்­ப­ராவ். சிறப்­பான பாடல்­கள், அழ­கான ஜோடி நடிகை ஆகிய அம்­சங்­க­ளு­டன் தேர்ந்த காமரா தொழில்­நுட்­பம் சேரும் போது, நாயக நடி­க­ரின் மவுசு கூடத்­தானே செய்­யும்?

நிறு­வ­னர் டி.ஆர்.சுந்­த­ரத்­தின் அகால மர­ணத்­திற்­குப் பிறகு அவ­ரு­டைய மகன் ராம­சுந்­த­ரம், மாடர்ன் தியேட்­டர்­சில் தொடர்ந்து படத்­த­யா­ரிப்­பில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­தார். விரை­வுத் தயா­ரிப்­பு­களை சுவா­ரஸ்­ய­மாக எடுக்­கும் நடை­மு­றையை அவர் தொடர்ந்­தார். அவ­ரு­டைய பார்வை ஜெய்­சங்­கர் மீது விழுந்­தது.  மாடர்ன் தியேட்­டர்­சின் தயா­ரிப்­பு­க­ளில், 1965ன் இடைப் பகு­தி­யி­லேயே ஜெய்­சங்­கர் இணைந்­து­விட்­டார். முதல் படம்,  ‘இரு வல்­ல­வர்­கள்’.

வேதா­வின் இசை­யில், பொது­வாக எல்லா பாடல்­க­ளும் ஏற்­க­னவே இந்தி மற்­றும் ஆங்­கி­லத்­தில் வந்த வெற்­றிப் பாடல்­க­ளின் மெட்­டுக்­க­ளில் அமைந்­தவை. பாடல்­களை புனைந்­த­வர் கவி­ஞர் கண்­ண­தா­சன். குரல்­கள் டி.எம்.எஸ்., பி.சுசீலா. இந்த வகை­யில் வந்த பாடல்­கள் இர­வல் மெட்­டுக்­க­ளில் அமைந்­தவை என்­றா­லும், வாகான தமிழ் கலை­ஞர்­க­ளின் பங்­க­ளிப்­பால் அவை தமிழ்ப் பாடல்­க­ளா­கவே ரசி­கர்­களை ஈர்த்­தன.

‘நான் மல­ரோடு தனி­யாக ஏன் இங்கு நின்­றேன், என்

மக­ராணி உனைக்­காண ஓடோடி வந்­தேன்’ என்று டி.எம்.எஸ். குர­லில் ஜெய்­சங்­கர் பாடி­ய­போது, அது ஷங்­கர் ஜெய்­கி­ஷன் இசை­யில் வந்த,  ‘துஜே பியார் கர்தே ஹைன் கர்தே ரஹேன்கே’ (உன்னை காத­லிக்­கி­றேன், காத­லித்­துக்­கொண்டே இருப்­பேன்) என்ற பாட­லின் மெட்­டில் அமைந்­தது என்று யாரும் கவ­லைப்­ப­ட­வில்லை. அதற்­குக் கார­ணம் கண்­ண­தா­ச­னின் தோதான வரி­கள், டி.எம்.எஸ், சுசீலா ஆகி­யோ­ரின் சிறந்த தமிழ் உச்­ச­ரிப்பு, குர­லி­னிமை, வேதா­வின் பொருத்­த­மான வாத்­திய இசை தொடுப்பு.

‘இன்­னும் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தால் என்­னா­வது’, ‘ஆசையா கோபமா’ முத­லிய பாடல்­க­ளும் டி.எம்.எஸ். குர­லில் வெற்­றிப் பாடல்­க­ளா­கத்­தான் ஒலித்­தன.

இதற்கு இடை­யில், சிவா­ஜிக்­கும் டி.எம்.எஸ், எம்.ஜி.ஆருக்­கும் டி.எம்.எஸ், ஜெய்­சங்­க­ருக்­கும் டி.எம்.எஸ்.தானா, கொஞ்­சம் மாற்­றம் செய்து பார்த்­தால் என்­ன­வென்று ஆரம்­பத்­தி­லேயே சில சோத­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுத்­தான் வந்­தன.

‘நீ’ படத்­தில் ஜெய­ல­லி­தா­விற்கு இரண்டு வேடங்­கள். ஜெய்­சங்­கர்-, ஜெய­ல­லிதா ஜோடி­யும் உண்டு, ஆனால் ஜெய்­சங்­கர் பாடு­வ­து­போல் ஒரு பாட­லும் இல்லை! படத்­தில் ஜெய்­சங்­கர், -ஜெய­ல­லிதா திரு­ம­ணம் செய்­து­கொண்ட பின்பு, மாண­வர்­கள் பாடு­கி­றார்­கள்,  ‘வொன் கர்ல் வொன் பாய் ஹனி­மூன்’ என்று. பி.பி.ஸ்ரீநி­வாஸ், எல்.ஆர். ஈஸ்­வரி கோரஸ் குரல்­க­ளு­டன் பங்­கெ­டுத்த வித்­தி­யா­ச­மான, அழ­கான பாடல். ‘யார் நீ’யில் கூட, ஜெய்­சங்­க­ருக்கு ‘டிக்கி ரிக்கி டிக்கி ரிக்கி டாட் டடா’  என்று தொடங்­கும் பாடலை, பி.பி.எஸ் (ஈஸ்­வ­ரி­யு­டன்). பாடி­னார்.

பாடல் அவ்­வ­ள­வா­கக் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை.  எப்­ப­டி­யும், ஜெய்­சங்­கர் சிறந்த ஹீரோ­வாக வலம் வரு­வ­தற்கு டி.எம்.எஸ்­சின் பின்­ன­ணிக் குரல் அவ­ருக்­குத் தொடர்ந்து உத­வி­ய­தைத் காண­லாம். இதை ஜெய்­சங்­கர் சரி­வர அங்­கீ­க­ரிக்­க­வில்லை என்ற வருத்­தம் கூட டி.எம்.எஸ்­சுக்கு இருந்­தது!

(தொட­ரும்)