அட்டாரி எல்லை வர்த்தக தடையால் நிலைகுலைந்த குடும்பங்கள்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ் தானுக்கும் இடையிலான எல்லையில் அட்டாரி உள்ளது. இங்கு ஒருங்கினைந்த சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக பாகிஸ்தானுக்கு பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே போல் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

இந்த சோதனை சாவடியில் லாரிகளில் சரக்குகளை ஏற்றி இறக்கும் போர்ட்டராக இருந்தவர் ஜாசா சிங். பஞ்சாபி நாடோடி பாடல்கள், பஞ்சாபி சினிமா பாட்டு என எப்போதும் உற்சாகமாக பாட்டு பாடிக் கொண்டே இருந்த ஜாசா சிங்கின் சிறப்பு பெயர் ‘பாட்டு பாடும் சர்தார்’. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் தலைவரான ஜாசா சிங்கின் உற்சாகம், மகிழ்ச்சி எல்லாம் சென்ற வருடம் பிப்ரவரி மாத்த்துடன் காணமல் போய்விட்டது. அவரது வாழ்க்கையில் சோகமே மிஞ்சியுள்ளது. அவருக்கு சோதனை சாவடியில் தற்போது எந்த வேலையும் கிடைக்கவில்லை.

2019, பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது இந்தியா 200 சதவிகித இறக்குமதி வரி விதித்தது. அன்றிலிருந்து இருநாடுகளுக்கும் இடையே அட்டாரி சோதனை சாவடியில் நடக்கும் ஏற்றுமதி– இறக்குமதி வர்த்தகம் அப்படியே ஸ்தம்பித்து விட்டது. புல்வாமாவில் தீவிரவாதிகள் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 40 போலீசார் பலியானார்கள். இதன் பிறகு இந்தியா, பாகிஸ்தானுக்கு வழங்கி யிருந்த ‘மிகவும் விரும்பப்படும் நாடு’ என்ற அந்தஸ்தை ரத்து செய்துவிட்டது. அத்துடன் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகித இறக்குமதி வரி விதித்தது. இதுவே அட்டாரி சோதனை சாவடியில் ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகம் நடைபெறாமல் நின்றதற்கு காரணம். இதனால் ஜாசா சிங் போன்ற நூற்றுக்கணக்கான போர்ட்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

இந்தியாவுக்கும்–பாகிஸ்தானுக்கும் இடையே சாலை மார்க்கமான வர்த்தகம் 2005ல் தொடங்கப்பட்டது. ஆனால் 2012ல் அட்டாரியில் ஒருங்கினைந்த சோதனை சாவடி அமைக்கப்பட்ட பின் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்த்து. இங்கு லாரிகள், டிரக்குகளின் போக்குவரத்தும் அதிகரித்தது. அப்போது அமிர்தசரசிலும், அட்டாரியிலும் ஆயிரக்கணக்கான லாரிகளில் பல்வேறு வகையான பொருட்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதும், அதே போல் அந்த நாட்டி லிருந்து பெறுவதுமான நடவடிக்கைகள் சுறுசுறுப்பாக எந்த நேரமும் நடப்பதை பார்க்கலாம். எல்லா சாலைகளிலும் லாரிகள் நிரம்பி வழியும். அட்டாரியில் 118 ஏக்கர் பரப்பளவில் அமைந்த சோதனை சாவடி வழியாக இரு நாடுகளுக்கும் இடையே 250 கோடி டாலர் மதிப்பிற்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த சோதனை சாவடியில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஜசா சிங் போன்று 1,400 பதிவு பெற்ற போர்ட்டர்கள் வேலை செய்தனர். இவர்கள் மாத்திற்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரம் வரை சம்பாதித்தனர்.

பாகிஸ்தானில் இருந்து பெரும்பாலும் பாறை உப்பு (இந்துப்பு) உலர்ந்த பழங்கள், சிமென்ட், ஜிப்சம் போன்றவை இறக்குமதி யானது. இந்தியாவில் இருந்து பருத்தி நூல், பழங்கள், காய்கறிகள் போன்றவை ஏற்றுமதியானது. இந்த வர்த்தகம் பதினைந்து வருடங்களாக சீராக நடைபெற்று வந்த்து. இதை நம்பி 9 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. மத்திய அரசு பாகிஸ்தானுக்கு வழங்கி இருந்த மிகவும் விரும்ப்ப்படும் நாடு என்ற அந்தஸ்தை ரத்து செய்து, அங்கிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவிதிக இறக்குமதி வரி விதித்த்து. இதன் பிறகு ஒரே நாள் இரவில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த பணக்கார வர்த்தகர்கள், போர்ட்டர்கள், லாரி டிரைவர்கள்,கிளினர்கள் உட்பட பல்வேறு தரப்பையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் இருள் சூழ்ந்துவிட்டது.

டில்லியைச் சேர்ந்த பொருளாதார ஆய்வு நிறுவனமான தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சி [Bureau of Research on Industry and Economic Fundamentals (BRIEF)] நிறுவனத்தைச் சேர்ந்த இணை இயக்குநர் நிகிதா சிங்லா கூறுகையில்,“இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. ஆனால் இதை தொடர்ந்து பாதுகாத்திருக்க வேண்டும். கடந்த  பத்தாண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம்  முதன் முறையாக அரசியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இவர் சார்ந்துள்ள நிறுவனம் சமீபத்தில் அமிர்சரஸ் அருகே உள்ள சோதனை சாவடி வழியாக நடைபெறும் வர்த்தகம் நின்றுள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் நின்றுள்ள காரணத்தால் அமிர்சரஸ் நகரத்திற்கு தினசரி ரூ.75 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. 2019, ஜனவரியில் பாகிஸ்தானில் இருந்து தினசரி 5 ஆயிரம் லாரிகள் சரக்குகளை ஏற்றிக் கொண்டு, இந்தியாவிற்கு வந்தன. அதே வருடம் ஜூலை மாதம் லாரிகளின் எண்ணிக்கை 309 ஆக குறைந்தது. 2018, ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பாகிஸ்தான் 43.83 மில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது. இது அடுத்த வருடம் (2019) ஜூலை மாதம் 2.84 மில்லியன் டாலராக குறைந்தது. இந்தியா ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்தது. இதன் பிறகு பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக ரத்து செய்து விட்டது. இப்போது அட்டாரி சோதனை சாவடிக்கு ஆப்கானிஸ்தானில் இருந்து உலர் பழங்களை கொண்டு வரும் லாரிகள் மட்டுமே வருகின்றன என கூறப்பட்டுள்ளது.

“பொருளாதார நடவடிக்கைகள் (வர்த்தகம்) பாதிக்கப்படும் போது, இதன் எதிர்விளைவுகள் பரந்த அளவில் இருக்கும். இந்தியா வெளிநாடுகளுடன் செய்யும் வர்த்தகத்தில், பாகிஸ்தான் பங்கு 1 சதவிகிதம் கூட இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது பலரது வாழ்க்கையில் கடும் விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்கின்றார் தொழில் மற்றும் பொருளாதார அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் அபாக் ஹூசைன். இதனால் 9,354 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் வர்த்தகர்கள் 1,724 பேர், சரக்கு ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் 2,507 பேர், லாரிகளை ஒழுங்குபடுத்தும் 80 பேர், உணவு, மற்ற பல்வேறு கடைகளை நடத்தும் 176 குடும்பங்கள், லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளினர்கள் என மொத்தம் 4,050 பேர், லாரி பழுது பார்ப்பவர்கள் 51 பேர், எடை போடும் இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள், சோதனை சாவடியில் அனுமதி வாங்கும் வேலை செய்யும் ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தற்போது அமிர்சரசில் உள்ள மொத்த சந்தையான மஜீத் சந்தை (Majith Mandi) வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு பாறை உப்பு, ஜிப்சம் மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஆர்.கே.சந்தீப் கூறுகையில், இந்த சந்தையில் கால் வைக்க கூட இடம் இருக்காது. இப்போது நிலைமையை பாருங்கள்.வெறிச்சோடி கிடக்கிறது என்கின்றார். இவர் அலுவலகத்தின் முதல் மாடியில் இருந்து பார்க்கும் போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பூட்டிய கடைகளும், காலி லாரிகளுமே தெரிகிறது. 2019, ஜனவரி மாதம் பாறை உப்பின் விலை கிலோ ரூ.3.30. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வது நின்றுள்ளதால், தற்போது 1 கிலோ பாறை உப்பு ரூ. 11.80 பைசாவுக்கு விற்பனை செய்கின்றனர். 2019, பிப்ரவரி 15ம் தேதி பலத்த மழை பெய்த்து. அன்று சந்தீப் பாகிஸ்தானில் இருந்து 46 லாரிகளில் ஜிப்சம் இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருந்தார். அன்று பலத்த மழை பெய்த காரணத்தால், லாரிகளில் வரும் ஜிப்சத்தை இறக்கி வைக்க இடம் இல்லை. எனவே நாளை அனுப்புங்கள் என பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு டெலிபோனில் தெரிவித்துள்ளார். ஆனால் அடுத்த நாள் பிப்ரவரி 16ம் தேதி மாலை மத்திய அரசு பாகிஸ்தானில் இருந்து வந்த, வரும் பொருட்களுக்கு 200 சதவிகித இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் இவர் ஜிப்சம் இறக்குமதி செய்வதையே நிறுத்திவிட்டார்.

பாகிஸ்தானுடன் அட்டாரி சோதனை சாவடி வழியாக ஏற்றுமதி–இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தர்களுக்கு, இறக்குமதி வரி 200 சதவிகிதம் விதிக்கும் அறிவிப்பு வாழ்வா–சாவா என்ற நிலைக்கு தள்ளியது. பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருப்பவர் தீபக் பத்ரா. இவர் அன்று குல்லி பாய் என்ற திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இவருடன் இறக்குமதி வர்த்தகத்தில் கூட்டாளியாக உள்ள விக்ரந்த் அரோரா அவசரமாக போன் செய்தார். அவர் எப்போதும் போன் செய்பவர் அல்ல. அன்று வழக்கத்திற்கு மாறாக போன் செய்தார். தீபக் பத்ராவிற்கு அன்று 400 முதல் 450 பேர் வரை போன் செய்தனர். விக்ரந்த் அரோரா, “ என்ன வேலை இருந்தாலும் அப்படியே போட்டு விட்டு வருமாறு என்னிடம்  கூறினார் என்கின்றார் தீபக் பத்ரா. அன்று காலையில் தான் பாகிஸ்தான் பகுதியில் உள்ள வாகா எல்லையில் இருந்து 195 லாரிகளில் இறக்குமதி செய்யும் சிமெண்ட் ஏற்றப்பட்டு இருந்தது. இதில் 125 லாரிகளில் உள்ள சிமென்ட் தீபக் பத்ரா இறக்குமதி செய்தது. இதன் மதிப்பு ரூ.81 லட்சம். “சில நிமிடங்களிலேயே எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யும் சிமெண்ட் வாங்கும்படி ஒரு வருடமாக மக்களிடம் கூறி சம்மதிக்க வைத்திருந்தோம். இப்போது என்ன செய்வது” என்று வருத்தத்துடன் கூறுகிறார் தீபக் அரோரா. இதனால் இவர்கள் வீட்டை விட்டு ஒரு மாதம் வெளியே வரவில்லை. வீட்டிலேயே அடைந்து கிடந்தனர். பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதி நின்ற காரணத்தால் சிமெண்ட் விலை மூட்டை ரூ.250ல் இருந்து ரூ.350 ஆக அதிகரித்துவிட்டது. “நாங்களும் இந்தியர்கள்தான். மத்திய அரசின் நடவடிக்கைகான காரணங்கள் புரிகின்றது. ஆனால் இதை செய்வதற்கு முன் சிறிது யோசித்து இருந்திருக்கலாம். எங்களுக்கு சில நாட்கள் கால அவகாசம் கொடுத்திருந்தால், நாங்கள் இறக்குமதியை ரத்து செய்திருப்போம் என்கின்றார் தீபக் அரோரா.

இவர் ஆப்பிள் இறக்குமதி செய்யலாம் என்று நினைத்தார். ஆனால் இவரின் முயற்சி பலிக்கவில்லை. “நாங்கள் இறுதியாக வர்த்தகம் செய்வதையை நிறுத்திவிட்டோம். அமிர்சரஸில் இறக்குமதி செய்யும் தொழில் செல்வம் கொழிக்கும் தொழிலாக மாறியது. இவர்களது பழைய அலுவலகம் மஜீத் சந்தையில் இருந்தது. அங்கு கால் வைக்க கூட இடம் இருக்காது. இதனால் அலுவலகத்தை நகரின் மையத்தில் சூப்பர் மார்க்கெட் அருகே மாற்றியுள்ளனர். இவரது அலுவலகத்தில் 20 பேர் வேலை பார்த்தனர். தற்போது 5 பேர் மட்டுமே வேலை பார்க்கின்றனர். மற்றவர்களை நிறுத்திவிட்டார். “இது தான் அமிர்தசரஸ் நகரத்தின் தலைவிதி. இங்கு எல்லாமுமே செழிப்பாக இருக்கும். தீடீரென எங்கோ நடக்கும் சம்பவத்தால் எல்லாமே சீர்கெட்டுவிடும்” என்று கூறுகின்றார் தீபக் அரோரா.

இப்போது வேலை எங்கே கிடைக்கிறது. எல்லை தாண்டிய வர்த்தகத்தால் பலபேருக்கு வேலை கிடைத்தது என்று சோதனை சாவடியில் கஸ்டம் ஏஜெண்டாக இருந்த இளைஞர் கூறுகிறார். இவருக்கு தற்போது வேலை இல்லை. கடனில் வாங்கிய மோட்டார் பைக்கிற்கு கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கிறார். எடை இயந்திரத்தில் வேலை பார்த்த இமாசல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞருக்கு வேலை பறிபோனதால், அவரது திருமணமே நின்று விட்டது. அவர் இப்போது எங்கே இருக்கின்றார் என்றே தெரியவில்லை என்கின்றார் லாரி டிரைவர் அமர்தீப் சிங்.இது போல் ஆயிரக்கணக்கானோர், பல்வேறு விதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, என்ன செய்வது என தெரியாமல் திகைத்துபோய் உள்ளனர்.

“இன்று தேசபக்தி என்ற வார்த்தை எங்கும் உச்சரிக்கப்படுகிறது. உங்களது தேசபக்தியை நிரூபியுங்கள் என்று ஒவ்வொருவரும் கேட்கின்றனர். நான் அவர்களை பார்த்து சொல்கின்றேன். நான் எல்லையில் இருந்து 600 மீட்டர் தொலைவில் வாழ்கின்றேன். எனக்கு தேசபக்தியை பற்றி நீங்கள் என்ன பாடம் நடத்த போகின்றீர்கள். இதை பற்றி தெரியாமலா நான் வாழ்கின்றேன்” என்று கேட்கின்றார் அட்டாரியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சந்து. இந்த சங்கத்தில் 800 லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தம் சிறப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் சங்கத்திற்காக இரண்டு மாடி கட்டத்தை கட்டினார்கள். இங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னணி வர்த்தகர்களை அழைத்து சிறப்பித்தனர். இப்போது வேலை இல்லாமல், சங்கத்திற்கு நிதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். சாதுவுக்கு சொந்தமாக ஐந்து லாரிகள் இருந்தன. இந்த அலுவகத்தில் இருக்கும் பால்ஜித் சிங்கிற்கு சொந்தமாக ஆறு லாரிகள் இருந்தன. அதில் நான்கு லாரிகளை கஷ்டப்பட்டு பெரும் நஷ்டத்தில் விற்று விட்டார். இவர் தனது தம்பி குடும்பத்தையும் பாராமரிக்க வேண்டியதுள்ளது.

இது போல் பலர் கீழ் நிலையில் இருந்து முன்னேறியுள்ளனர். இப்போது அட்டாரி எல்லை சாவடி வழியாக ஏற்றுமதி– இறக்குமதி வர்த்தகம் நின்று போய் விட்டது. இவர்களில் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக மாறி விட்டது. பலரின் வாழ்க்கை மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்கே திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  

அமிர்தசரஸ் நகரும், அட்டாரி எல்லை புறமும் நம்பிக்கைக்கும், விரக்திக்கும் இடையில் சிக்கி தவிக்கிறது. இங்கு சுற்றுலா வளர்ச்சி பெற்று இருந்தாலும், குற்றச்செயல்களும் பெருகிவிட்டன. வாகா–அட்டாரி எல்லை சாவடியில் மாலையில் இரு நாட்டு வீரர்களும் கொடி அணிவகுப்பு நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக மட்டும், இங்கு சாலைகளில் நடமாட்டம் இருக்கின்றது. முன்பு 24 மணி நேரமும் நடமாட்டம் இருக்கும். இப்போது இரவு 7 மணிக்கு மேல் வெளியே செல்வது ஆபத்தானது என்கின்றார் அம்ரிட்தீப் சிங்.  

நன்றி: ஓபன் இதழில் நிகிதா டோவல் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.