கரோனா வைரஸ் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 19 மார்ச் 2020 12:10

சென்னை,

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளை மார்ச் 31-ம் தேதி வரை மூடுமாறு மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, பள்ளிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.  இந்த விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை சில பள்ளிகள் நடத்துவதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

இதையடுத்து நேற்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் அவர்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச. கண்ணப்பனிடம் இதுதொடர்பாக கேட்டபோது,  

அரசு அறிவித்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த எந்த பள்ளிகளுக்கும் அனுமதி கிடையாது. அப்படி எதுவும் வகுப்புகளை நடத்தவும் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமல்லாமால், அரசின் உத்தரவு மற்றும் எச்சரிக்கையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.