ஆன்மிக கோயில்கள்: உடல் நோய் தீர்க்கும் விருத்தகிரீஸ்வரர்!

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

தல வர­லாறு:  அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம், ‘பழமலை’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘விருத்தாசலம்’ என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. விருத்தம் என்றால் பழமை. அசலம் என்றால் மலை. காலத் தால் மிகவும் முற்பட்டது இந்த மலை.

சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான் தோன்றினார் என்றும், இந்த மலை தோன்றிய பின்பு தான் உலகில் உள்ள அனைத்து மலைகளும் தோன்றியது என்றும், திருவண்ணாமலைக்கும் முந்திய மலை என்றும் புராணங்கள் கூறுகின்றன.இத்தலம் முன்பொரு காலத்தில் குன்றாக இருந்ததாம்.விபசித்து முனிவர் முத்தா நதியில் மூழ்கி இரவு திருக்கோயிலில் தங்கியதால் அருள் கிடைக்கப்பெற்று திருப்பணி செய்யும் பேறு பெற்றார்.

இத்திருக்கோயிலில் தலமரமாக உள்ள வன்னி மரத்தின் இலைகளை திருக்கோயிலின் திருப்பணியின்போது விபசித்து முனிவர் தொழிலாளருக்கு வழங்க அந்த இலைகள் அவர்களின் உழைப்பிற்கு ஏற்றவாறு பொற்காசுகளாக மாறியது என்றும் மரபுவழியாகப்பேசப்பட்டு வருவதாகும்.இந்த வன்னிமரம் 1700 ஆண்டுகளுக்கு முன்பானது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.இத்தலத்து ஈசனான முதுகுன்றப்பெருமானை பாட மறுத்துச் சென்ற சுந்தரரை, இறைவன் தடுத்து ஆட்கொண்டு தன்னை பாட வைத்து பன்னீராயிரம் பொன் கொடுத்ததோடு அல்லாமல் மணி முத்தா நதியில் அவற்றை போட்டு திருவாரூர் குளத்தில் எடுத்துக்கொள் என்று சொல்ல, சுந்தரர் பொன்னை பெற்றுக் கொண்டார் என்பது தலவரலாற்றுச் செய்தி.

தல பெருமை:

சக்கரங்கள் அமைந்த முருகப் பெருமான் : ஈசன் சன்னதிக்கும் விருத்தாம்பிகை சன்னதிக்கும் இடையில் அமைந்துள்ளது 28 சிவலிங்கங்களுடன் உடனுறையும் முருகன் வள்ளி – தெய்வானை காட்சியாகும். முருகப்பெருமான் வள்ளி – தெய்வானையுடன் நின்ற திருக்கோலக் காட்சியும் 28 சிவலிங்கங்கள் ஆகம விதிப்படி அமையப்பெற்று அனைவராலும் வணங்கப்பட்டு வருவது மிகவும் சிறப்பிற்குரியதாகும். நின்ற திருக்கோலத்தில் உள்ள முருகப்பெருமானின் உடனுறைக்கு மேலே சக்கரங்கள் அமைந்தது எல்லா வளமும் கிட்டும் என்பதை நினைவுறுத்துகின்றன. இதுபோல சக்கரங்கள் அமைந்திருப்பது சில திருத்தலங்களில் மட்டும்தான் என்பது குறிப்பிடத் தக்கது.

இத்தல தீர்த்தமான மணிமுத்தாறு நதியில், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால், அது கல்லாக மாறி நதியிலேயே தங்கிவிடுவதாக தல புராணம் சொல்கிறது. கர்நாடக மன்னன் இத்தலம் வந்த போது பசியால் வாடினான். அப்போது பெரியநாயகி இளமை வடிவெடுத்து பாலூட்டி அவனுக்கு குமார தேவர் என்று பெயர் சூட்டினாள்.

முக்தி தலம் : காசியைப்போன்று விருத்தாசலமும் முக்தி தலமாகும். இங்குள்ள மணிமுத்தாறு நதியில் நீராடி மூலவர் பழமலைநாதரை வழிபட்டால், காசியில் நீராடி விஸ்வநாதரை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே இத்தலம் ‘விருத்தகாசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் இறக்கும் உயிர்களை அன்னை விருத்தாம்பிகை தன் மடியில் வைத்து, தன் புடவைத் தலைப்பால் விசிறி அவற்றின் பாவங்களை விலக்குகிறாள். சிவபெருமான் அருகே அமர்ந்து கொண்டு, உயிர்கள் மோட்சமடைவதற்காக ‘நமசிவாய’ எனும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக் கிறார் என தலபுராணம் கூறுகிறது.

பாலாம்பிகை : ஒரு முறை திருவண்ணாமலையி லிருந்து சிதம்பரம் செல்ல வந்த குரு நமச்சிவாயர், இத்தலத்தில் இரவு தங்கினார். அப்போது அவருக்கு பசி ஏற்பட்டது. பசியை போக்க, இத்தல பெரியநாயகியிடம் சோறு வேண்டி, கிழத்தி என்ற சொல் வரும்படி ஒரு பாடல் பாடினார். இதைக்கேட்ட பெரியநாயகி கிழவி வேடத்தில் அங்கு வந்து, ‘‘கிழவி எவ்வாறு சோறு கொண்டு வர முடியும்? இளமையுடன் இருந்தால் தான் நீ கேட்டது கிடைக்கும்,’’ என கூறி மறைந்தாள். இதைக்கேட்ட குரு நமச்சிவாயர், ‘அத்தன் இடத்தாளே, முற்றா இளமுலை மேலார வடத்தாளே சோறு கொண்டு வா’ என பாடினார். இந்த பாட்டில் மயங்கிய அம்மன் இளமைக்கோலத்துடன் அவருக்கு காட்சி கொடுத்து சோறு போட்டாள். அன்று முதல் ‘பாலாம்பிகா’ என்ற பெயர் இவளுக்கு ஏற்பட்டது.

பொது தகவல்: சைவ சமயத்தில் 28 ஆகமங்கள் உண்டு. இவற்றை 28 லிங்கங்களாக இத்தலத்தில் முருகப்பெருமான் பிரதிஷ்டை செய்து பூஜை செய்துள்ளார்.

விருத்தாச்சலம் பெயர்க்காரணம் : விருத்த என்றால் முதுமை என்றும், அசலம் என்றால் மலை என்றும் பொருள்படும். எனவே, விருத்தாசலம் என்றால் பழமலை என்பது கருத்தாகிறது.

திருவிழா: பிரம்மோற்சவம் மாசி மாதம் 10 நாட்கள். 9வது நாள் தேர்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழாவாக இது இருக்கும். ஆடிப்பூரம் -10 நாட்கள் திருவிழா, -வசந்த உற்சவம் - வைகாசி மாதம் -10 நாட்கள் திருவிழா. ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம், கந்தர் சஷ்டி, சூரசம்ஹாரம் ஆகியவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பிரார்த்தனை: இங்குள்ள ஈசனை வழிபடுவோருக்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. இத்தலத்து துர்க்கை யம்மனை வழிபடுவோருக்கு கல்யாண வரம் கைகூடப் பெறுகிறது. மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஞாயிறன்று ராகு கால வேளையில் வடைமாலை சாத்தி இத்தலத்து பைரவரை வணங்கினால், அடுத்தடுத்து வரும் இடர்கள் துன்பங்கள் தூளாய்ப் போய்விடும்.

நேர்த்திக்கடன்: சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர்,பழச்சாறு, இளநீர், பஞ்சா மிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம்  செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12  மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை.

முகவரி: விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் - 606 001, கடலூர் மாவட்டம்.