கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 108

பதிவு செய்த நாள் : 22 மார்ச் 2020

‘பரிசு’க்கு கிடைத்த பாடல் பரிசுகள்

‘‘கணேசனுக்குத்தான் கதை பண்ணிக் கொடுப்பீங்களோ... எனக்கு கொடுக்க மாட்டீங்களோ,’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.

அவருடைய கேள்விக்கு இலக்கானவரும் மலையாளி என்பதால், மலையாளத்திலேயே தன்னுடைய கேள்வியை எம்.ஜி.ஆர். தொடுத்திருந்தார்.

சிவாஜி நடித்த ‘பாசமலர்’ சக்கைப்போடு போட்டு சரித்திரம் படைத்த பின், அதன் கதாசிரியர் கொட்டாரக்கராவின் செல்வாக்கு மிகவும் அதிகரித்துவிட்டது!

‘எனக்கும் கதை ஒன்று கொடுங்கள்’ என்று எம்.ஜி.ஆர். கேட்கும் அளவுக்கு கொட்டாரக்கராவின் காட்டில் மழை!  கொட்டாரக்கராவே தன்னுடைய சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து கொண்டு என்னிடம் கூறிய விஷயம் இது.

‘‘நிச்சயமா உங்களுக்காகக் கதை பண்ணுகிறேன், ஆனால் ஒன்று...’’, என்று ஆரம்பித்தார் கொட்டாரக்கரா!

‘‘என்ன ஆனால்,’’ என்று

எம்.ஜி.ஆர். வினவினார்.

‘‘நான் சொல்லும் கதையை நீங்க கேட்கும் போது, போனை அட்டென்ட் பண்ணக் கூடாது. ரீஸீவரை எடுத்து வச்சுடணும்....வேற எந்த விஷயத்திலும் ஈடுபடாம நான் சொல்ற கதையைக் கவனமா கேக்கணும்...அப்படிக் கேட்டீங்கன்னா நான் உங்களுக்கு கதை சொல்றேன்,’’ என்றார் கொட்டாரக்கரா!

சில பெரிய இடங்களில் கதை சொல்லும் போது, கதையை சொல்லி முடிக்கும் முன், கதை சொல்லுகிறவன் கதை கந்தலாகிவிடும் என்பது அவருக்குத் தெரியும்!

கொட்டாரக்கராவைப் பொறுத்தவரை கதையை ‘சொல்லுதல்’ என்பதை விட, அவர் கதையை நிகழ்த்தும் விதம் அலாதியானது!  

கதையின் போக்குகளுக்கு ஏற்ப மெல்ல பேசுவார், சிரிப்பார், அழுவார், கத்துவார், கதறுவார், ரகசியம் பேசுவதுபோல் கிசுகிசுப்பார்.... கையை அசைப்பார், ஆட்டுவார்,   மொத்தத்தில் கதை கேட்பவரை ஆட்டிப் படைத்துவிடுவார்!

கொட்டாரக்கராவின் ஷரத்துக்களை எம்.ஜி.ஆர். ஏற்றார். அதோடு அவருடைய கதையையும் ஏற்றார்! அப்படி உருவானது தான் ‘பரிசு’ திரைப்படம்.

இந்தப் படத்தின் கதா சிரியர் மட்டும் அல்ல கொட்டா ரக்கரா. அதன் தயாரிப்பாளரும் கூட! படத்தை இயக்க அவர் ஏற்பாடு செய்த யோகானந்துடன் இணைந்து, அவரே படத்தைத் தயாரித்தார். புத்திசாலித்தனமாக, தன்னுடைய படத்திற்கு அவர் மகாதேவனை இசை அமைப்பாளராக நியமித்தார். அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப, படம் நெடுக வெற்றிப் பாடல்களின் வரிசையை அடுக்கினார் மகாதேவன்.

படத்தின் கதாசிரியர், தயாரிப்பாளர் கொட்டாரக்கரா என்றாலும், ‘பரிசு’ என்று படத்தலைப்பு மட்டும் அவருடையது அல்ல. அது எம்.ஜி.ஆர். கொடுத்த தலைப்பு. தன்னுடைய கட்சித் தலைவர் அண்ணாதுரையின் கதை தலைப்புகளை அவ்வப்போது தனது படங்களுக்குக் சூட்டும் பழக்கம் அவருக்கிருந்தது. அத்தகைய ஒரு கதைத் தலைப்புத்தான் படத்தலைப்பானது.

கொட்டாரக்கரா மகாகெட்டிக்காரர். பாசமலரைக் குறிப்பிட்டு எம்.ஜி.ஆர். அழைத்தார் என்பதற்காக, அவரிடம் ‘கைவீசம்மா கைவீசு’ என்று பாசமலர்களை அவர் உதிர்க்கவில்லை! எம்.ஜி.ஆரை ஒரு பத்து வருஷம் பின்னுக்குத்தள்ளி, ‘என் தங்கை’ காலத்திற்கு அவரை மீண்டும் கொண்டுபோக கொட்டாரக்கரா கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் நபர் அல்ல! ஏறக்குறைய தேவர் பிலிம்ஸ் அப்போது எடுத்துக்கொண்டிருந்த ‘திருட்டுக்கூட்டம், போலீஸ் நோட்டம், அழகான நாயகியின் ஆட்டம்’ மாதிரியான கதையைக்கூறி, அதற்குத் தன்னுடைய பிரத்யேக முத்திரைகளையும் திருப்பங்களையும் ஆங்காங்கே வைத்து, எம்.ஜி.ஆரைக் கவர்ந்து விட்டார்! கணேசனை எப்படி டீல் பண்ண வேண்டும், ராமச்சந்திரனுக்கு எப்படித் தூண்டில் போடவேண்டும் என்பதையெல்லாம் அறிந்த கதாசிரியர் அவர்.

படத்தின் நாயகி (சாவித்திரி) ஒரு ஓடக்காரி.  மர்ம கொலைகாரர்களைத் துப்பறிவதற்காக  சிங்காரத்தோப்புக்கு வரும் போலீஸ் அதிகாரி,  எம்.ஜி.ஆர். முதல் முறை அவளுடைய ஓடத்தில் ஏறும் போது, அவளுக்கு எம்.ஜி.ஆர்.  ஐந்து ரூபாய் தருகிறார். அதிலிருந்து அவரை அவள், ‘அஞ்சு ரூபா’, ‘அஞ்சு ரூபா’ என்றே அழைக்கிறாள்! அவளுடைய துடுக்கான பேச்சும் தைரியமான போக்கும் நாயகனை கவருகின்றன!

சாவித்திரி- – எம்.ஜி.ஆர் ஜோடியை வைத்துப் ‘பரிசு’ படத்தின் பாகஸ்தர்களான கதாசிரியர் கொட்டாரக்கராவும் இயக்குநர் யோகானந்தும், காட்சிகள் என்ற துடுப்புகளைப் போட்டு கதைப்படகை செலுத்திய போது, இரண்டு திறமைசாலிகள் இணைந்து நடத்திய பயணமாக அது அமைந்தது. அதற்குக் கண்ணதாசன் மிகப்பொருத்தமான பாடல் வரிகளை முன் வைத்தார். இந்தப் பாடல்களைப் பார்த்தவுடன், மகாதேவனின் திறமைகள் ஒன்று திரண்டு செயல்படத் தொடங்கி விட்டன! ‘பரிசு’ படத்தின் ஒரு பாடல்கூட சோடைபோகாத அளவிற்கு அவற்றுக்கு நிறைவான இசை வார்ப்புகளைத் தொடுத்தார் மகாதேவன்.

ஆனால், குறிப்பாக ஒரு பாடல், அதன் பல்லவியின் காரணமாக விமர்சகர்களின் நகைப்புக்கு ஆளானது. ‘கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு’ என்ற பாடலின் பல்லவியை மிகவும் பொருள் செறிந்தது என்று அவர்கள் கிண்டல் அடித்தார்கள்!

கண்ணதாசனைப் பொறுத்தவரை, அவை பொருள் பொதிந்தவைதான். எம்.ஜி.ஆர் தொடர்புடைய கட்சியினுடைய கொடியின் இரு நிறங்களை அவர்  காதல் பாடலின்  பல்லவியிலேயே அசால்டாகப் பின்னிக் கொடுத்துவிட்டார்! திரையரங்குகளில் சீட்டி ஒலி பிய்த்துக்கொண்டு போகக் கூடிய வரிகள் இவை.

இந்த வரிகளுக்கு இசையை எளிமையாகவும் இனிமையாகவும் அமைக்கும் போது, ‘ஆகா’, ‘ஓகோ’ என்ற   இணைப்புச் சொற்களை அழகான தோரணங்கள் போல் அமைத்து, ‘கொண்டவள் முகமோ ரோஜாப்பூ’ என்று  நாயகனும், ‘கொடுத்த வன் கரமோ தாமரைப்பூ’ என்று நாயகியும் பாடும் பல்லவியின் முத்தாய்ப்பு வரிக்கு, ‘ஆஆஆ ஆ..அஆ ஆஆ..’என்று மகாதேவன் ஒரு அழகான ஹம்மிங் அமைத்தார். ஒரு எளிமையான பாடலுக்கு அவர் சூட்டிய இனிமையான சங்கீத மலர் அது!

சாதாரணம் என்று எந்த சங்கீதத்தையும் தள்ளாமல், உணர்வு கலந்து அதை இனிமையாகவும் அழகு படுத்தியும்  மகாதேவன் தொடுத்ததால், ‘பரிசு’ படத்தின் ஏனைய பாடல்களும் காட்சிகளுக்குப் பொருத்தமாகவும் காதுக்கு ரம்மியமாகவும் கருத்துக்கு இதமாகவும் அமைந்தன.

(தொடரும்)